பாரி மன்னன் இறந்த பின்பு அவனது மகள்கள் ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்டார்கள். பாரி மன்னனைப் பாடிப் புகழ்ந்த அவைப்புலவரான கபிலர் பாரிமகளிருக்கு மாப்பிள்ளை பார்த்துத் திருமணம் முடிப்பதற்காக பறம்பு மலையை விட்டுப் பிரிய நேர்கிறது.
இத்தனை நாள் சோறும் நீரும் தந்து ஆதரித்த மலையை விட்டுப் போகும் போது அவரது மனம் வேதனையில் வாடுகிறது.
பறம்பு மலையே!
என் மன்னன் பாரி இருக்கின்ற வரையில் நீ வயிராற உணவும் நீரும் தந்தாய்.
இன்று எங்கள் மன்னன் இல்லை.
இதுவரை எங்களுக்கு எல்லாமாக இருந்த மலையே உன்னை விட்டு நாங்கள் போகிறோம் .
திரண்ட முன்கைகளில் சிறிய வளையலை அணிந்த பாரி மன்னன் மகள்களுக்கு கணவர்களைத் தேடி கண்ணீருடன் உன்னை வாழ்த்தி விடை பெறுகிறோம்.
மட்டுவாய் திறப்பவும், மைவிடை வீழ்ப்பவும்,
அட்டுஆன்று ஆனாக் கொழுந்துவை ஊன்சோறும்
பெட்டாங்கு ஈயும் பெருவளம் பழுனி
நட்டனை மன்னோ முன்னே; இனியே,
பாரி மாய்ந்தெனக், கலங்கிக் கையற்று
நீர்வார் கண்ணேம் தொழுதுநிற் பழிச்சிச்
சேறும் வாழியோ பெரும்பெயர்ப் பறம்பே;
கோல்திரள் முன்கைக் குறுந்தொடி மகளிர்
நாறுஇருங் கூந்தல் கிழவரைப் படர்ந்தே.
பறம்பு மலையை விட்டு பாரி மகளிர் அங்கவை, சங்கவையுடன் கண்ணீர் சிந்த கபிலர் விடைபெறும்போது வந்த உணர்வினை நினைவு படுத்தும் பாடல் வரிகள்...
போறாளே பொன்னுத்தாயி
பொல பொலவென்று கண்ணீர் விட்டு
தண்ணீரும் சோறும் தந்த
மண்ணை விட்டு...
பால் பீச்சும் மாட்ட விட்டு
பஞ்சாரத்துக் கோழியை விட்டு
போறாளே பொட்டப் புள்ள
ஊரை விட்டு
Comments
Post a Comment
Your feedback