மறைந்து நூறு ஆண்டுகள் ஆகிவிட்டன. பாரதியைப் பற்றி நினைக்காமல் பலரது வாழ்க்கையில் சில நாட்கள்சில வாரங்கள் கூட நகர்வதில்லை.
தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, சமஸ்கிருதம், பிரெஞ்சு மொழிகளில் இலக்கியங்கள் படைக்கும் அளவுக்கு இருந்தபோதும் இவை தவிர பல மொழிகளும் பாரதிக்கு பல அத்துபடி .
அதனால் தான்,
“யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்”
என்ற பாரதியின் முழக்கம் உலகமெங்கும் சத்திய வாக்காகவே எடுத்துக்கொள்ளப்படுகிறது.
மதுரையில் சேதுபதி பள்ளியில் தமிழாசிரியராக துவங்கிய வாழ்க்கை பின்னர் சென்னையில் பத்திரிக்கை ஆசிரியர் என்று பரிமாணத்தை அடைந்தது.
பத்திரிக்கைத் துறையில் கேலிச்சித்திரம் (கார்ட்டூன்) போடும் வழக்கத்தை உருவாக்கியவர் பாரதி.
பெண்களுக்கு என தனியாக அவர் நடத்திய பத்திரிக்கையான சக்கரவர்த்தினி, இன்று வரும் பெண்கள் பத்திரிக்கைக்கெல்லாம் முன்னோடியாக விளங்கியது.
பாரதி பிறமொழி இலக்கியங்களைத் தமிழில் மொழிபெயர்க்கும் சிறந்த மொழிபெயர்ப்பாளராகவும் திகழ்ந்தார்.
பிற மொழி இலக்கியங்களை தமிழில் மொழிபெயர்க்கும் அதேநேரம் பிறமொழிகளில் கட்டுரைகளும் எழுதியிருக்கிறார்.
உள்ளூர் செய்திகளையே ஒழுங்காகத் தெரிந்து கொள்ள முடியாத காலத்தில் உலகச் செய்திகளை தமிழர்களுக்கு வழங்கியதில் பாரதியின் பங்கு அளப்பரியது.
ரஷ்யாவின் ஜார் மன்னர்களின் வீழ்ச்சி பாரதி மூலமாகவே பல தமிழர்களை எட்டியது.
வால்ட் விட்மனையும் ஷெல்லியையும் தமிழுக்குத் தந்தவர் பாரதி தான்.
புதுக்கவிதை என்ற புது வடிவத்துக்கு வித்திட்டவர் பாரதி.
உணர்ச்சிகளை அப்படியே வழங்குகின்ற வசன கவிதைகள் என்ற வடிவம் பாரதியாரால் தான் தமிழுக்கு வந்தது.
எப்படி கவிதை எழுதினாரோ அப்படியே வாழ்ந்து காட்டியவர் பாரதி.
அதனால் தான் காசு பணத்துக்கு அடங்கிப் போகாமல், ஆளுமைக்கும் அதிகாரத்துக்கும் அஞ்சாமல் காக்கை குருவி எங்கள் ஜாதி என்று பாட முடிந்தது; அப்படியே வாழ முடிந்தது.
தமிழறிஞர்கள் தமிழ் தவிர கூடுதலாக பல மொழிகள் தெரிந்திருந்தால் அது தமிழுக்கு உலக இலக்கியங்களை கொண்டு தருவதுடன் உலகம் முழுமைக்கும் தமிழைக் கொண்டு செல்ல முடியும் என்று நம்பினார்.
பல மொழிகள் அறிந்திருந்த போதும் அவருடைய அந்தக் குறுகிய ஆயுட்காலத்துக்குள் அவருடைய அத்தனை கனவுகளையும் அவரால் மெய்ப்படுத்த முடியாமலேயே போய்விட்டது.
அந்தக் கனவுகளை நோக்கி தமிழ் உலகம் தன்னை உயர்த்திக் கொள்வது தான் அந்த மகாகவிக்குச் செய்யும் உண்மை அஞ்சலியும் நன்றியுமாய் அமையும்.
கனவு மெய்ப்பட வேண்டும்.
Comments
Post a Comment
Your feedback