அவள் ஊர் கடற்கரையோரம் தான்.
தன் மனதுக்கு இனியவனோடு கடற்கரையோரத்தில்
இருக்கக்கூடிய ஒரு புன்னை மரத்தடியில் அமர்ந்திருக்கிறாள்.
அவன் ஏதோ சொல்ல அவளுக்கு வெட்கம்.
அப்போது அவனிடம் அவள் சொல்கிறாள்.
நான் குழந்தையாக இருந்தபோது என் தோழிகளோடு
விளையாடிக் கொண்டிருந்தேன்.
பின்னர் அதை மறந்து விட்டேன்.
ஆனால் என் தாயோ அதை மறக்கவில்லை.
நான் நட்டு வைத்த அந்த புன்னை விதையை சீராட்டி
வளர்த்தாள்.
இப்போது அது பெரிய மரம் ஆகிவிட்டது.
அதைப் பார்க்கும்போதெல்லாம் என் தாய் என்னிடம்
சொல்வார்
“அந்த மரம் உனக்கு தங்கை போன்றது”என்று.
நீயும் நானும் அமர்ந்து இருக்கிறோமே
இதுதான் அந்த மரம்.
வா! நாம் வேறு மரத்தடியில் போய்ப் பேசுவோம்.
பாடல்:
விளையாடு ஆயமொடு வெண் மணல் அழுத்தி,
மறந்தனம் துறந்த காழ் முளை அகைய,
'நெய் பெய் தீம் பால் பெய்து இனிது வளர்ப்ப;
நும்மினும் சிறந்தது; நுவ்வை ஆகும்' என்று,
அன்னை கூறினள், புன்னையது நலனே-
அம்ம! நாணுதும், நும்மொடு நகையே;
விருந்தின் பாணர் விளர் இசை கடுப்ப,
வலம்புரி வான் கோடு நரலும் இலங்கு நீர்த்
துறை கெழு கொண்க!- நீ நல்கின்,
இறைபடு நீழல் பிறவுமார் உளவே.
(நற்றிணை)
பொருள்:
விளையாடு ஆயமொடு - விளையாடும் தோழிகளோடு
வெண் மணல் அழுத்தி - வெள்ளை மணலில் அழுத்தி
மறந்தனம் - மறந்து விட்டோம்
துறந்த - துறந்தும் விட்டோம்
காழ் முளை - விதை முளை விட்டு
அகைய - கிளை விட்டு பெரிதாகி
நெய் பெய் - நெய் ஊற்றி
தீம் பால் பெய்து - சுவையான பாலை இட்டு
இனிது வளர்ப்ப - சிறப்பாக வளர்த்து வரும் போது
நும்மினும் சிறந்தது - உன்னை விட சிறந்தவள்
நுவ்வை ஆகும் என்று - உன் தமக்கை ஆகும் என்று
அன்னை கூறினள் - என் தாய் கூறினாள்
புன்னையது நலனே - என்று அதன் சிறப்பை புனைந்து உரைத்தாள்
நாணுதும்- எனக்கு வெட்கமாக இருக்கிறது
நும்மொடு நகையே - உன்னோடு சிரித்து மகிழ்ந்து இருப்பது
விருந்தின் பாணர் - விருந்தாக வந்த பாணன்
விளர் இசை கடுப்ப - மெல்லிய இனிய இசை போல
வலம்புரி - வலம்புரி சங்கு
வான் கோடு நரலும் - வானம் போல வெளுத்த , அது இசைக்கும்
இலங்கு நீர்த் - அப்படிப்பட்ட நீரை உடைய
துறை கெழு - நிலத்தின் தலைவனே
கொண்க!- - அறிந்து கொள்
நீ நல்கின் - நீ சம்மதித்தால்
இறைபடு நீழல் - நிறைந்த நிழல் தரும் மரங்கள்
பிறவுமார் உளவே. - இங்கு நிறையவே இருக்கிறது
மரத்தைக் கூட உடன் பிறந்த சகோதரியாக நினைத்து
வாழ்ந்த சமுதாயம் நம் சமுதாயம்.
Comments
Post a Comment
Your feedback