'தமிழ்த்தாத்தா' உ.வே.சா வின் ஆசிரியராகத் திகழ்ந்த மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை தான் அந்த ஆசிரியர்.
மதுரையில் பிறந்தவர். அவரது பெற்றோர் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் பணிபுரிந்து வந்தனர்.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருவருளால் 6.4.1815 அன்று பிறந்த தங்கள் குழந்தைக்கு மீனாட்சி சுந்தரம் எனப்பெயர் சூட்டினர்.
சிறு வயதிலேயே இலக்கியங்கள் பலவற்றைக் கற்றுக் கொண்டார். பல ஆசிரியர்களிடம் பாடம் கேட்டு இலக்கணப் புலமையும் பெற்றார்.
மீனாட்சிசுந்தரத்தின் 15ம் வயதில் தந்தை சிதம்பரம் பிள்ளை காலமானார். அவர் தந்தை இறந்த ஆண்டின் பெயர் "விரோதி".
தந்தை மறைவின் வேதனையின் வடிகாலாக அவர் ஒரு வெண்பா பாடினார்.
"விரோதி" என்னும் சொல்லை இருபொருளில் அமைத்து அவர் எழுதிய வெண்பா, இளம் வயதிலேயே அவரின் கவிபாடும் ஆற்றலுக்குச் சான்று.
அவ்வெண்பா இது தான்.
முந்தை அறிஞர் மொழிநூல் பல நவிற்றும்
தந்தை எனைப் பிரியத் தான்செய்த- நிந்தை மிகும்
ஆண்டே விரோதியெனும் அப்பெயர் நிற்கே தகுமால்
ஈண்டேது செய்யாய் இனி.
பல சிவத்திருத்தலங்களுக்கும் சென்று, அத்தலங்களைப் பற்றித்
தலபுராணங்களும், பதிகங்களும், அந்தாதிகளும், பிள்ளைத்தமிழ், கலம்பகம், கோவை, உலா, தூது, குறவஞ்சி முதலான நூல்களும் இயற்றியவர் அவர்.
ஒவ்வொரு கோவிலில் அவர் வணங்கும்போது தமிழுக்குப் புதிய புதிய படைப்புகள் கிடைத்தன.
மீனாட்சி சுந்தரம்பிள்ளை திருவாவடுதுறை ஆதீன வித்துவானாகவும் நியமிக்கப்பட்டார்.
திருவாவடுதுறை ஆதீனம் தான் மீனாட்சிசுந்தரம் பிள்ளைக்கு "மகாவித்துவான்" என்ற பட்டத்தை வழங்கியது. அன்று முதல் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்
பிள்ளை என்று அழைக்கப்பட்டார்.
எப்படியாவது மகா வித்துவானின் மாணவனாக வேண்டும் என்ற விரும்பிய உ.வே.சாமிநாதய்யர் 1871ல் மகாவித்துவானின் மாணாக்கரானார்.
அந்த நாள் முதல் தன் ஆசிரியர் நிழலிலேயே இருந்தார் உ. வே.சா. எந்த நிலையிலும் தன் ஆசிரியரின் பெயரைக் கூட சொல்லாமல் 'ஐயா' என்றே பக்தியோடு இருந்த அவர் தன் ஆசிரியரின் வாழ்நாள் முழுதும் வேறு யாரையும் மகா வித்துவான் என்று அழைக்கவில்லை.
மகா வித்துவான் பிள்ளை 1876ல் நோய்வாய்ப்பட்டார். தன் இறுதி நிமிடங்களில் தன் ஒரு மாணாக்கர் சவேரிநாத பிள்ளை மார்பில் சாய்ந்த வண்ணம், தன் இன்னொரு மாணாக்கர் உ.வே.சா வை திருவாசகம் படிக்குமாறு கூறினார். அவர் திருவாசகம் அடைக்கலப் பத்தைப் பாட, அதைக் கேட்டுக்கொண்டே இறைவனடி சேர்ந்தார்.
அந்த நாள் பிப்ரவரி 1. வருடம் 1876. அப்போது பிள்ளை அவர்களுக்கு வயது 61.
ஒரு ஆசிரியர் மாணவர் உறவு இப்படிக் கூட இருக்க முடியுமா என்று வியந்து போகும்படி அமைந்தது அவர்கள் வாழ்க்கை.
ஒவ்வொரு ஆசிரியரும் படிக்க வேண்டிய ஒரு நூல் உ.வே.சா வின் என் சரிதம்.
.jpeg)
Comments
Post a Comment
Your feedback