சீதை அசோகவனத்தில் சிறையில் மிகுந்த மனச்சோர்வுடன் வாடியிருக்கிறாள்.
இனி ராமனைக் காண முடியாதோ என்ற ஏக்கம் ஒரு புறம்!
இராவணனின் கொடுமைகள் ஒரு புறம்!
அரக்கியரின் அச்சுறுத்தல்கள் ஒரு புறம்!
எதையும் தெரிந்து கொள்ளமுடியாத பலத்த காவல்.
இனியும் உயிர் தரித்திருப்பதில் விருப்பமில்லாமல் இருக்கும் போது, அனுமன் வந்து, தான் இராமனின் தூதன் என்று அறிவிக்கிறான்.
சொன்னவுடன் மிகுந்த
மகிழ்ச்சியுடன் அனுமனிடம் பேசுகிறாள்.
தன்னுடைய துன்பம், இராவணன் செய்யும் கொடுமைகள், அரக்கியரின் அச்சுறுத்தல்கள் எதைப் பற்றியும் கூறவில்லை.
அனுமனிடம் சீதை கேட்டது இது தான் .
இராமனின் உடல் நிலை எப்படி இருக்கிறது? நீ அறிவாயா?
எய்து அவன்உரைத்தலோடும், எழுந்து, பேர்
உவகை ஏற,
வெய்து உறஒடுங்கும் மேனி வான் உற விம்மி ஓங்க,
'உய்தல்
வந்துஉற்றதோ ?' என்று அருவி நீர் ஒழுகு கண்ணாள்,
'ஐய
! சொல், ஐயன்
மேனி எப்படிக்கு அறிதி ?' என்றாள்.
(கம்ப இராமாயணம்)
பொருள்:
எய்து அவன் உரைத்தலோடும் - தான் ராம தூதன் என்று அனுமன் சொன்னவுடன்
எழுந்து பேர் உவகை ஏற - மிகுந்த மகிழ்ச்சியுடன் எழுந்து
வெய்து உற ஒடுங்கும் மேனி - துன்பம் உற்றதால் மெலிந்த உடம்பு
வான் உற விம்மி ஓங்க - வானம் வரை விம்மி பெரிதாக
உய்தல் வந்துஉற்றதோ ? என்று - நல்ல வழி வந்து விட்டதோ என்று
அருவி நீர் ஒழுகு கண்ணாள் -
அருவி போல நீர் வழியும் கண்களைக் கொண்ட சீதை
ஐய ! சொல், - ஐயனே சொல்
ஐயன் மேனி எப்படிக்கு - இராமனின் உடல் நலம் எப்படி இருக்கிறது
அறிதி ? என்றாள் - நீ அறிவாயா? என்றாள்
கண்ணில் நீரைக் காணாமல்
கவலை ஏதும் கூறாமல்
என்னை எண்ணி வாழாமல்
உனக்கென நான் வாழ்வேன்.
(கண்ணதாசன்)
Comments
Post a Comment
Your feedback