குழந்தை கண்ணன் பிறந்த பின்பு ஆயர்பாடி எப்போதும் விழாக் கோலத்தில் இருக்கிறது. குழந்தை வளர்ந்து வருகிறான். வீட்டுக்கு வெளியே விழாக் கோலம். வீட்டின் உள்ளே புலம்பல் கேட்கிறது.
யசோதை தான்,தன் தோழியர்களிடம் சொல்லிக்கொண்டிருக்கிறாள்.
நீங்கள் எல்லாம் வயதுக்கு ஏற்றவாறு குறும்பு செய்யும் பிள்ளைகளைப் பெற்றுள்ளீர்கள். உங்கள் பிள்ளைகள் எல்லாம் எவ்வளவு அமைதியாக சாதுவாக இருக்கின்றன. அதனால் உங்களுக்கு ஒரு குறையும் இல்லாமல் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள்.
இங்கே என் பிள்ளை செய்வதைப் பாருங்கள். இவனைத் தொட்டிலில் படுக்க வைத்தால், தொட்டில் கிழிந்து போகிற அளவு காலால் உதைக்கிறான். அந்தப் பிஞ்சுக் கால்களுக்கு வலிக்குமே என்று அவனைத் தூக்கி இடுப்பில் வைத்துக் கொண்டால் ஒரு இடத்தில் இருந்தால் தானே. அப்படியும் இப்படியும் எம்பிக் குதிக்கிறான். எனக்கு இடுப்பெல்லாம் விட்டுப் போகிறது.
இப்படிக் குதிக்கிறானே இவனுக்கு நோகுமே என்று எடுத்து மார்போடு அணைத்துக் கொண்டால் கால்களால் வயிற்றில் உதைக்கிறான். எனக்கும் இவன் குறும்புகளைச் சமாளிக்கும் வலிமை இல்லை. பாருங்கள்! நான் எவ்வளவு மெலிந்து போய்விட்டேன்.
இப்படி, குழந்தையின் குறும்புகளை துன்பம் போலச் சொல்லிக் கொண்டே அந்த இன்பத்தை அனுபவிப்பது யசோதை மட்டுமா என்ன!
ஒவ்வொரு தாயும் யசோதை போல ... அதனால் தானோ என்னவோ ஒவ்வொரு குழந்தையும் கண்ணன் போல...
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று.
கிடக்கில் தொட்டில் கிழிய உதைத்திடும்
எடுத்துக் கொள்ளில் மருங்கை யிறுத்திடும்
ஒடுக்கிப் புல்கில் உதரத்தே பாய்ந்திடும்
மிடுக்கிலாமையால் நான் மெலிந்தேன் நங்காய்!
(பெரியாழ்வார் - பெரிய திருமொழி)
சொல்லும் பொருளும்
கிடக்கில் - கிடத்தி வைக்கும்பொழுது
மருங்கு - இடுப்பு
இறுத்திடும் - முறித்துவிடும்
ஒடுக்கி - தன்னுடன் சேர்த்து வைத்து
புல்கு - தழுவு
புல்கில் - தழுவிக் கொண்டால்
உதரம் - அடிவயிறு
மிடுக்கு - வலிமை
நங்காய் - தோழிகளே .
Comments
Post a Comment
Your feedback