அருந்துவதற்குச் சுவையான பால் இருக்கிறது. ஆனால் அதில் கலந்து பருகுவதற்குச் சர்க்கரை இல்லையே என்று ஒருவனுக்குக் கவலை.
உண்பதற்குச் சோறில்லை, கஞ்சி தான் இருக்கிறது.ஆனால் அதில் கலக்கிக் குடிக்க உப்பு இல்லையே என்று கவலைப்படுகிறான் ஒருவன்.
காலில் முள் குத்தியதால் வலியால் துடிப்பவனுக்கு, தன் கால்களில் அணிந்து கொள்ளச் செருப்பு இல்லையே என்று கவலை.
தங்கத்தால் செய்த கட்டிலில் படுத்துறங்குபவனுக்கு, அந்தக் கட்டிலின் மேல் விரித்துக் கொள்ள ஒரு பஞ்சு மெத்தை இல்லையே என்று கவலை.
மாளிகையில் வாழ்ந்தாலும், மண் குடிசையில் வாழ்ந்தாலும் மொத்தத்தில் ஒவ்வொரு மனிதனுக்கும் கவலைப்பட ஏதோ ஒன்று இருந்து கொண்டே இருக்கிறது. அதில் சின்னக் கவலை பெரிய கவலை என்றெல்லாம் ஒன்றுமில்லை.
இது ஒரு தனிப் பாடல். எழுதியவர் பற்றி எதுவும் தெரியவில்லை.
பாலுக்குச் சருக்கரை இல்லை என்பார்க்கும்,பருக்கையற்ற
கூழுக்குப் போட உப்பு இல்லை என்பார்க்கும்,முள் குத்தித் தைத்த
காலுக்குத் தோற் செருப்பு இல்லை என்பார்க்கும், கனக தண்டி
மேலுக்குப் பஞ்சணை இல்லை என்பார்க்கும் விசனம் ஒன்றே !
Comments
Post a Comment
Your feedback