சீதையைத்
தேடி ராமன் கானகத்தில் அலைந்து கொண்டு
இருக்கின்றான். சீதையைத் தேட உதவி செய்வதாகச் சொன்ன சுக்ரீவன் மதுமயக்கத்தில் காலம் தாழ்த்திக் கொண்டு
இருக்கிறான். சொன்ன காலம் தாண்டிய பின்பும் சுக்ரீவனிடம் இருந்து எந்த பதிலும்
வராததால் கோபம் கொள்கின்றான் ராமன்.
சுக்ரீவனை எச்சரித்து வருமாறு
லட்சுமணனை அனுப்புகிறான் ராமன்.
"நெஞ்சில் வஞ்சம் கொண்டு நஞ்சுபோல் இருப்பவர்களை தண்டித்தல் நீதிதான். எனவே அஞ்சில் ஐம்பதில் ஒன்று அறியாதவனை எச்சரித்து வருவாய்"
எனக் கூறுகிறான்.
அப்போது ஒரு அடியில் ஐந்து வேறு வேறு பொருள்
இருக்குமாறு கம்பன் சிலேடை அமைத்திருப்பான்.
பாடல்:
நஞ்சம் அன்னவரை நலிந்தால் அது
வஞ்சம் அன்று; மனுவழக்கு; ஆதலால்
அஞ்சில் ஐம்பதில் ஒன்று அறியாதவன்
நெஞ்சில் நின்று நிலாவ
நிறுத்துவாய்.
பொருள்:
நஞ்சம் அன்னவரை நலிந்தால் - நஞ்சு போன்றவர்களை தண்டித்தால்
அது வஞ்சம் அன்று - அது வஞ்சம் அன்று
மனுவழக்கு ஆதலால் - அது நீதிதான் ஆதலால்
அஞ்சில் ஐம்பதில் -அஞ்சில் அம்பதில்
ஒன்று அறியாதவன் - ஒன்றும் அறியாதவன்
நெஞ்சில் நின்று நிலாவ நிறுத்துவாய்
- மனதில் படும் படி எச்சரித்து வருவாய்.
அப்போது சொன்னது,
அஞ்சில் அம்பதில் ஒன்றறியாதவன்.
முதலாவது பொருள்:
அஞ்சு
வயதிலும் சரி; ஐம்பது வயதிலும் சரி ஒன்றும்
அறியாதவன் .
பொருள் 2:
அஞ்சு + இல் + அம்பு + அது + ஒன்று + அறியாதவன்
அச்சம்
இல்லாத அம்புகள் என்னிடம் உள்ளன. அதில் ஒன்றைக் கூட அவன் அறிய மாட்டான்.
பொருள் 3:
அஞ் + சிலம்பதில் + ஒன்று + அறியாதவன்
(சிலம்பு-
மலை)
அந்த மலையில் உள்ள அவன் ஒன்றும் அறியாதவன்
பொருள் 4:
அஞ்சு + அம்பது + ஒன்று = 5+50+1=56 . அதாவது ,
56 ஆவது வருடம் தந்துபி வருடம்.
லட்சுமணன் தந்துபி என்ற அரக்கனை அழித்ததை சுக்ரீவன்
அறிந்திருக்கமாட்டான்.
அதை அவன்
நெஞ்சில் நிறுத்துவாய்.
பொருள் 5:
அஞ்சிலம் + பதில் + ஒன்று + அறியாதவன்
கொடுத்த வாக்கைக் காப்பாற்றாமல் உள்ளது குறித்து அச்சமும் இல்லை; நமக்கு ஒரு பதிலும் அவனிடம் இல்லை. சரி தவறு ஒன்றும்
அறியாதவன் அவன்.
சிலேடை பாடுவதை
விட ஐம் பொருள் சிலேடை அமையும்படி பாடுவது
மிகவும் கடினம்.
நாள்தோறும் ஊர்தோறும் எங்காவது
கம்பன் பேசப்படக் காரணம் இது போன்ற வியப்புகள் தான்.
கம்பனைப் போலவே
முயற்சித்து திரிகூடராசப்பக் கவிராயர் எழுதிய ஒரு
ஐம் பொருள் சிலேடை வெண்பா இது.
ஒட்டினரும் கூத்தினரும்
மோடையும் வாளுந்துகிலும்
கொட்டி நெய்தலைக் காட்டும்
குற்றாலம்- கட்டியபூண்
அக்குமணிக் கோவையா ரம்பரவை
நாவலன்சொல்
வைக்குமணிக் கோவையார் வாழ்வு.
இந்தப் பாடலில் வரும் முதல் ஏழு சொற்களுக்குள்
ஐந்து சிலேடைகள் அமையப் பாடியுள்ளார் கவிராயர்.
சபதம் செய்த போர்வீரர், இசைக்கருவிகளை இசைக்கும் கூத்தினர், நீர்நிறைந்த
ஓடை, வெற்றியை
தரும் வாள், அழகிய ஆடை என்ற
ஐந்துக்கும் பொருத்தமாக இருக்குமாறு சிலேடை பாடியுள்ளார்.
பொருள் 1:
ஒட்டினர் கொட்டிய நெய்தலைக்
காட்டும் குற்றாலம்
பொருள் 2:
கூத்தினர் கொட்டி நெய்தலைக்
காட்டும் குற்றாலம்
பொருள் 3:
ஓடை கொட்டி நெய்தலைக் காட்டும்
குற்றாலம்-
நீர் நிரம்பிய ஓடையில் கொட்டிப் பூவும் நெய்தல் பூவும் மிதந்து வருகின்ற குற்றாலம்
பொருள் 4:
வாள் கொட்டி நெய் தலைக்கு ஆட்டும் குற்றாலம்-
பொருள் 5:
துகில் கொட்டி நெய்தலைக் காட்டும் குற்றாலம்-
Comments
Post a Comment
Your feedback