இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழில் சாதாரண மக்களின் உரைநடைத் தமிழாக விளங்குவது நாடகத் தமிழ்.
ஆனாலும் நாடகத் தமிழ் என்ற செடி வாடி வதங்கிக் கிடந்த காலம் அது.
நாடகம் என்றாலே கிராமத்து மக்கள் பார்க்கும் தெருக்கூத்து என்ற நிலை தான் இருந்தது. அந்தக் காலகட்டத்தில் நாடகத்தின் பக்கம் எல்லோரையும் ஈர்த்த அந்த மாயத்தை நிகழ்த்திக் காட்டியவர் பம்மல் சம்பந்த முதலியார்.
எப்படி அவரால் இதைச் சாதிக்க முடிந்தது?
நாடக நடிகர்கள் படிக்காதவர்கள் என்ற எண்ணத்தை மாற்ற தலை சிறந்த கல்வியாளர்களையும் மேதைகளையும் தம் நாடகங்களில் பிற நடிகர்களுடன் நடிக்க வைத்தார்.
கால நேரம் நிர்ணயிக்காமல் 5 மணி நேரம், 8 மணி நேரம் என்றெல்லாம் நடந்துகொண்டிருந்த நாடகத்தை, 3 மணி நேரம் என ஒரு கால அளவுக்குள் கொண்டுவந்து புதுமையைப் படைத்தார்.
மேலை நாடகங்கள், வட மொழி நாடகங்களை ஆழமாகப் படித்து மொழி நடை மற்றும் உரையாடல்களை வித்தியாசமான பாணியில் அமைத்தார்.
பல்வேறு மொழிகளில் நிகழ்ந்த சுவாரஸ்யமான சம்பவங்களைத் தொகுத்து தமிழ் நாடகமாக அரங்கேற்றி, உரையாடல் மூலம் சமூகக் கலாசார உணர்வுகளைப் பரப்பினார்.
புராணம் , சரித்திரம் என்ற அளவில் நில்லாமல், அந்தந்த நேரத்தில் இருந்த அரசியல் சமூக நிகழ்வுகளை நாடகத்துக்குள் அமைத்து மெருகூட்டினார்.
வாடிக் கிடந்த நாடகச் செடி மெல்லத் துளிர்க்கத் தொடங்கியது. அதோடு திருப்தி அடையவில்லை அவர்.
Shakespeare நாடகங்களையும் அவர் தமிழுக்குக் கொண்டுவந்து அறிமுகப்படுத்தினார். அப்படித்தான், Merchant of Venice வணிபுர வாணிகன் என்று தமிழ் நாடகமானது.
Macbeth மகபதி ஆனது.
As you like it 'நீ விரும்பியபடியே' என்று தமிழ் நாடகமானது.
தெருவித்தைக்காரர்கள் போலக் கருதப்பட்ட நாடக நடிகர்களை நாடகக் கலைஞர்களாக்கினார். அதன் மூலம் நாடகத் துறையில் சிறந்தவர்கள் திரைப்பட நடிகர்கள் ஆக முடிந்தது. தமிழ் சினிமா தந்த தலை சிறந்த நடிகர் நடிகைகள் நாடக மேடைகள் தந்த கலைஞர்கள் தான்.
இப்படியாக, பட்டுப் போகும் நிலையில் இருந்த நாடகத்துக்கு உயிர் கொடுத்ததால்தான் `தமிழ் நாடகத் தந்தை' என தமிழ்ச் சமூகம் இவரை அன்புடன் நினைவு கொள்கிறது.
தம் நண்பர்களின் உதவியுடன் 1891-ம் ஆண்டு சென்னையில் `சுகுணவிலாச சபை' என்ற நாடகக் குழுவைத் தொடங்கினார். அவர் எழுதிய நாடகங்களில் `புஷ்பவல்லி', `அமலாதித்யன்', `மனோகரா' போன்றவை முக்கியமானவை.
இதில் அமலாதித்யன் என்பது ஷேக்ஸ்பியரின் Hamlet நாடகத்தின் தமிழ் வடிவம்.
ஒன்றைச் சொல்லியாக வேண்டும். அந்த நாட்களில் பெண்கள் மேடை ஏறி ஆண்களுடன் நடிக்கத் தயாராக இல்லை. எனவே இவரது குழுவில் ஆண்களே பெண் வேடமிட்டனர்.
நாடகத் துறையின் மூலம் இவரின் சாதனைகளை கெளரவப்படுத்தும் விதத்தில் 1959-ம் ஆண்டு `பத்ம பூஷண்' விருதை அளித்துப் பாராட்டியது இந்திய அரசு.
இத்தனைக்கும் பம்மல் சம்பந்தனார் ஒன்றும் தொழில் முறை நாடக நடிகர் இல்லை.
1873-ல் பம்மலில் பிறந்த சம்பந்த முதலியார், ஒரு நல்ல வழக்கறிஞர்.
வழக்குகளைத் திறம்பட வாதாடி, குறைந்த செலவிலும் காலத்திலும் முடித்து, நல்ல பெயரோடு இருந்தார். பின் நீதிபதியாகவும் பணியாற்றினார். நேர்மைக்குப் பெயர் பெற்ற அறம் சார்ந்த நீதிபதியாக இருந்தார்.
இப்படி எல்லாம் வேறு ஒரு துறையில் புகழோடு இருந்த அவர் நாடகத் துறையில் இறங்கியதும் அவரோடு படித்தவர்கள், நண்பர்கள் என பலரும் கூட நாடக நடிகர்கள் ஆனார்கள்.
கலைத்தாயின் காலடியில் நாடக மேடைகளில் வலம் வந்த அவர் 1964 லில் தன் மறைவு வரைக்கும் செய்த சேவைகள் மறக்கமுடியாதவை.
என்றோ மறைந்தாலும் என்றும் இன்றும் மறையாத அவர் புகழ் அவர் வாழ்கையின் நோக்கம் பெற்ற வெற்றிக்குச் சான்று.
பிப்ரவரி 1 அவரது பிறந்த நாள்.
1873 அவர் பிறந்த ஆண்டு.
கண்ணைச் செவியைக் கருத்தை கவர்ந்து, நமக்கு
எண்ணரிய போதனைகள் ஈவதற்கு – நண்ணுமிந்த
நாடகசாலை ஒத்த நற்கால சாலை ஒன்று
நீடுலகில் உண்டோ நிகழ்ந்து.
- கவிமணி

Comments
Post a Comment
Your feedback