தமிழ்த் தாத்தா என்றழைக்கப்படும் டாக்டர்
உ.வே.சாமிநாதய்யர் என் சரிதம் என்ற தன்னுடைய
நூலில் 1868 ஆம் ஆண்டு நடந்த
தன் திருமணத்தைப் பற்றிக் கூறியுள்ளார். அன்றைய சுவையான நிகழ்வுகள்...
விவாகச் செலவுக்கு இருநூறு ரூபாயும்,
கூறைச் சிற்றாடை முதலியவற்றிற்காக
முப்பத்தைந்து ரூபாயும், நகைக்காக ரூபாய் நூற்றைம்பதும் என் தந்தையார் கணபதி ஐயரிடம்
அளிப்பதாக வாக்களித்தார்.
கல்யாணத்திற்கு வேண்டிய ஏற்பாடுகளெல்லாம்
மாளாபுரத்தில் நிகழ்ந்தன. பந்து ஜனங்கள் பல ஊர்களிலிருந்து வந்து கூடினர். ரெயில் வண்டியின்
வேகம், பஸ்ஸின் வேகம் முதலியவற்றைக்
கண்டறியாத அந்நாட்களில் கல்யாண ஏற்பாடு விரைவில் நடைபெறாது; மெல்ல
மெல்ல நடைபெறும். கல்யாணத்திற்கு ஒரு மாதத்துக்கு முன்பிருந்தே வேண்டிய காரியங்கள்
ஆரம்பமாகிவிடும். ஒரு மாதத்துக்கு மேல் குடும்பம் கல்யாண முயற்சியில் ஈடுபட்டிருக்கும்.
இன்றும் அன்றும்
இக்காலத்திலோ எல்லாம் வேகம், முதல்
நாள் கல்யாணம் நிச்சயமாவதும் மறுநாள் கல்யாணம் நடைபெறுவதும் மூன்றாம் நாள்
கல்யாணம் நடைபெற்ற அடையாளமே மறைவதும் இந்த நாட்காட்சிகள். முகூர்த்த பத்திரிகையில்
சம்பிரதாயத்திற்குக்கூட நான்கு நாள் முன்னதாக வரவேண்டுமென்று எழுதுவதில்லை.
கல்யாணமே ஒரு நாளில் நிறைவேறும்போது விருந்தினர்கள் நான்கு நாள் வந்து தங்கி என்ன
செய்வது?
அக்காலத்தில் ஒரு குடும்பத்தில் கல்யாணம்
நடப்பதாயிருந்தால் ஒரு மாதத்துக்கு முன்பே சில பந்துக்கள் வந்து விடுவார்கள். ஒரு வாரத்துக்கு
முன்பு பலர் வருவார்கள். வந்தவர்கள் தாங்கள் உபசாரம் பெறுவதில் கருத்துடையவர்களாக
இருக்கமாட்டார்கள். தங்கள் தங்களால் இயன்ற உதவிகளை வலிந்து செய்வார்கள். பந்தல்கால் நடுவது, பந்தல் போடுவது, பந்தலை அலங்கரிப்பது
முதல் கல்யாணம் ஆன பிறகு பந்தல் பிரிக்கும் வரையில் நடக்கும் காரியங்களில்
ஊரினரும் கல்யாணத்திற்காக வந்தவர்களும் கலந்து உதவி புரிவார்கள். கல்யாண வீட்டின்
அகலத்திற்குத் தெருவையடைத்துப் பந்தல் போடுவார்கள். பெண்மணிகள் சமையல் செய்தல்,
பரிமாறுதல், ஒருவரை யொருவர் அலங்கரித்தல்
முதலிய உதவிகளைச் செய்வார்கள். ஆதலின் வேலைகளைச் செய்வதற்காக வேறு மனிதர்களைத்
தேடி அலைய வேண்டிய சிரமம் இராது. எல்லோரும் சேர்ந்து ஈடுபடுவதனால் எவரும்,
“எனக்கு உபசாரம் செய்யவில்லை” என்ற குறை கூற இடமிராது. ஆயினும்
சம்பந்திகளுக்கிடையே மனஸ்தாபம் நேர்வது எங்கும் இருந்தது. கல்யாணமென்றால் சம்பந்திச் சண்டையும் ஒரு
நிகழ்ச்சியாக ஏற்பட்டு விட்டது.
கிராமத்தாருடைய ஒற்றுமையும் உபகார சிந்தையும்
கல்யாணத்தைப் போன்ற விசேஷ காலங்களில் நன்றாக வெளிப்படும். பணச் செலவு இந்தக்
காலத்திற்போல அவ்வளவு அதிகம் இராது. இக்காலத்திற் செலவுகளுக்குப் புதிய புதிய
துறைகள் ஏற்பட்டிருக்கின்றன. உணவு வகைகளில் இப்போது நடைபெறும் செலவைக் கொண்டு
அக்காலத்திலும் கல்யாணங்கள் பலவற்றை நடத்தி விடலாம். கிராமங்களில் விளையும்
காய்கறிகளும், பழவகைகளும்
விருந்துக்கு அக்காலத்தில் உபயோகப்பட்டன. இப்போதோ, இங்கிலீஷ் பெயரால் வழங்கும் காய்கறிகளும்,
ஹிந்துஸ்தானிப் பெயரால் வழங்கும் பக்ஷிய
வகைகளும் மேல் நாட்டிலிருந்து தகரப் பெட்டிகளில் அடைத்து வரும் பழங்களும் கல்யாண
விருந்துக்கு இன்றியமையாத பொருள்களாகி விட்டன.
ஊர்வலம் நடத்துவதில் எத்தனை செலவு! மோட்டார்
வாகனத்தையே புஷ்ப வாகனமாக மாற்றி விடுகின்றனர்! சில மணி நேரம் புறத் தோற்றத்தை
மாத்திரம் தரும் அந்த வாகனத்திற்கு எவ்வளவு அலங்காரங்கள்! எவ்வளவு பேருடைய
உழைப்பு! கோவில்களில் உத்ஸவ மூர்த்திகளுக்குச் செய்யும் புஷ்பாலங்காரம்
கல்யாணத்திற் செய்யப்படுகின்றது!
இவ்வளவு செலவு செய்து நடைபெறும் கல்யாணத்தில்
விருந்தினர்கள் வருவதும் போவதும் வெறும் சம்பிரதாயமாகி விட்டன.
கல்யாணம் எல்லாம் நிறைவேறிய பிறகு கணக்குப் பார்க்கும்போது
தான் வயிறு பகீரென்கிறது. சந்தோஷத்தை மேலும் மேலும் உண்டாக்க வேண்டிய கல்யாணமானது
சில இடங்களில் கண்ணை மூடிக் கொண்டு செய்யும் பணச் செலவு காரணமாகக் கடனையும் அதனால்
துன்பங்களையும் விளைவிக்கின்றது. கல்யாணத்தால் கஷ்டத்தை விலைக்கு வாங்கிக் கொண்ட குடும்பங்கள்
இத்தமிழ் நாட்டில் எவ்வளவோ இருக்கின்றன.
அக்காலத்தில் சிலவகையான செலவுகள்
குறைந்திருந்தன. முதல்நாள் நிச்சயதாம்பூலம் வழங்கப்பெறும். முதல்நாள் இரவு கல்யாணம்
சொல்வதும். மாப்பிள்ளையை அழைப்பதும் அவை காரணமாக நேரும் செலவுகளும் பெரும்பாலும்
இல்லை. கல்யாணத்திலும் பந்தல் செலவு, பூரி, தக்ஷணை, மேளம் முதலிய செலவுகளில் பிள்ளை வீட்டாரும் பெண் வீட்டாரும் பாதிப்பாதி ஏற்றுக்கொள்வார்கள். நான்காம்
நாள் நடைபெறும் கிராமப் பிரதக்ஷணச் செலவு முழுவதும் பிள்ளை வீட்டாருடையது.
போஜனக் கிரமம்
காலையில் காப்பி என்பது அக்காலத்தினர் அறியாதது. துவரம் பருப்புப் பொங்கலும்
பரங்கிக்காய்க் குழம்புமே காலை ஆகாரம்; கருவடாம்,
அப்பளம், வற்றல்கள் இவை அந்த ஆகாரத்துக்குரிய
வியஞ்சனங்கள். பிற்பகலில் இடைவேளைச் சிற்றுண்டி உண்ணும் வழக்கமும் அக்காலத்தில்
இல்லை. குழந்தைகள் பசித்தால் அன்னம் உண்பார்கள். மத்தியான விருந்துக்குப் பின்
இராத்திரிப் போஜனந்தான். பன்னிரண்டு மணிக்குப் பிறகே பகல் போஜனம் நடைபெறும்.
பெரியவர்கள் தாங்கள் செய்ய வேண்டிய பூஜை முதலியவற்றை நிறைவேற்றிய பின்பே இலை
போடுவார்கள். எல்லோரும் ஒருங்கே உண்பார்கள். கல்யாணம் நடைபெறும் நான்கு
நாட்களிலும் ஒவ்வொரு வேளையிலும் போஜனத்திற்கு ஊரிலுள்ள எல்லோரையும் அழைப்பார்கள்.
யாவரும் குறித்த நேரத்தில் வந்துவிடுவார்கள்.
முகூர்த்த காலத்தில் பழமும் வெற்றிலைபாக்கும்
தருவார்கள். மரியாதைக்கு ஒரு மஞ்சள் பூசிய தேங்காயைத் தாம்பாளத்தில்
வைத்திருப்பார்கள். தாம்பூலத்தைப் பஞ்சாதி சொல்லிக் கொடுப்பார்கள். கொடுக்கும்போது
மஞ்சள் தேங்காயைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்வார்கள். தேங்காயை எடுத்துக்
கொள்ளும் வழக்கமில்லை.
சிறு பையன்கள் கொட்டைப்பாக்குகளை ஒருவரும் அறியாமல் திருடிக் கொண்டு போய்
மாம்பழக்காரியிடம் கொடுத்து மாம்பழம் வாங்கித் தின்பார்கள். இந்தக் கொட்டைப்பாக்கு
வியாபாரத்தை எதிர் பார்த்தே சில மாம்பழக்கூடைக்காரிகள் கல்யாண வீட்டுக்கு அருகில்
வந்து காத்திருப்பார்கள்.
நான்காம் நாள் இரவில் நடைபெறும் ஆசீர்வாதத்திற்குப்
பந்துக்களிலும் ஊரினரிலும் அனைவரும் வர வேண்டுவது அவசியம். இல்லாவிட்டால் பெரிய
மனஸ்தாபங்கள் நேரும். அதனால் சிலர் வரவை எதிர்பார்த்து ஆசீர்வாதத்தைத் தாமதப்படுத்துவார்கள்.
விநோத நிகழ்ச்சிதான்
எனக்கு அப்போது பதினான்காம் பிராயம் நடந்து வந்தது.
கல்யாணப் பெண்ணின் பிராயம் எட்டு. கல்யாணப் பெண்ணைக்
கல்யாணத்திற்கு முன்பு பிள்ளை பார்ப்பதென்ற வழக்கம் அக்காலத்தில்
பெரும்பாலும் இல்லை. எல்லாம் பெரியவர்களே பார்த்துத் தீர்மானம் செய்வார்கள். நான்
கல்யாணப்பெண்ணை அதற்குமுன் சாதாரணமாகப் பார்த்திருந்தேனேயன்றிப் பழகியதில்லை; பேசியதுமில்லை. எங்கள் இருவருக்கும் கல்யாணம் ஒரு விநோத
நிகழ்ச்சியாகத்தான் தோன்றியது. எங்களுக்கு உண்டான சந்தோஷத்தை விட அதிகமான சந்தோஷம்
எங்களை ஆட்டி வைத்து வேடிக்கை பார்த்த விருந்தினர்களுக்கு உண்டாயிற்று.
எங்கள் ஊர் வழக்கப்படி கல்யாணத்திற்கு முன் சிவாலயத்தில்
எழுந்தருளியுள்ள விநாயகருக்கு நிறை பணி நடைபெற்றது. விநாயக மூர்த்தியின்
திருவுருவம் முழுவதையும் சந்தனத்தால் மறைத்துவிடுவார்கள். அதற்காக ஊரினர் யாவரும்
வந்து சந்தனம் அரைப்பார்கள். ஊரில் பொதுவாக ஒரு பெரிய சந்தனக்கல் இதற்காகவே
இருக்கும். அதைக் கொணர்ந்து வைத்து அருகில் இரண்டு கவுளி வெற்றிலையும் சீவலும்
வைத்துவிடுவார்கள். சந்தனம் அரைக்க வருபவர்கள் அவற்றை அடிக்கடி
உபயோகப்படுத்திக்கொண்டு தங்கள் கைங்கரியத்தைச் செய்வார்கள்.
அபிஷேக ஆராதனைகளுக்குப் பிறகு நிவேதனமான பழங்களும், சுண்டல் வடைப்பருப்பு மோதகம் முதலியவைகளும் விநியோகம் செய்யப்படும்.
மோதகம் ஒரு மாம்பழ அளவு இருக்கும். இந்த நிறை பணியோடு எங்கள் வீட்டிலும் பெண்
வீட்டிலும் குல தெய்வ சமாராதனைகளும் நடைபெற்றன.
என் கல்யாணம் அக்காலத்திற்கேற்ப விமரிசையாகவே நடை பெற்றது.
குளங்களிலும் வாய்க்கால்களிலும் நிறைய ஜலம் இருந்தது. ஆதலின் விருந்தினர்களது ஸ்நானம் முதலிய சௌகரியங்களுக்குக் குறைவு நேரவில்லை.
விபவ வருஷம் ஆனி மாதம் 4-ம் தேதி (16-6-1868)
என் விவாகம் நடந்தது.
கிருகப் பிரவேசம்
கல்யாணம் நான்கு நாள் நடைபெற்றது.ஐந்தாம்நாள் மாலையில் உத்தமதானபுரத்தில் எங்கள் வீட்டில் கிருகப்பிரவேசம் நடைபெற ஏற்பாடாகியிருந்தது. அன்று புறப்பட வேண்டிய சமயத்தில் இடியுடனும் மின்னலுடனும் பெரிய மழை வந்துவிட்டது. நாங்கள் மாளாபுரத்திலிருந்து புறப்பட்டு உத்தமதானபுரம் செல்ல வேண்டும். பெண் வீட்டுக்காரர்கள் மழையிற் புறப்பட்டுப் போகக்கூடாது என்றனர்.
கல்யாணத்துக்கு வந்தவர்களுள் தியாகசமுத்திரம்
விசுவநாத சாஸ்திரிகளென்பவர் ஒருவர். ஜோதிஷ சாஸ்திரத்திலும் அவருக்குப் பழக்கம்
இருந்தது. சாஸ்திரிகள் பல வடமொழிச் சுலோகங்களை ஒன்றன்பின் ஒன்றாக எடுத்துச் சொல்லி,
“மழை வந்தது நல்ல சகுனமே; புறப்படுவது
நன்மையே” என்று நிரூபித்தார்.
சாஸ்திரிகளுடைய வார்த்தைகளால் உள்ளம் குளிர்ந்தது. நாங்கள் உத்தமதானபுரத்திற்குப்
புறப்பட்டு விட்டோம்.
கல்யாணச் சிறப்புக்கு மேல் கிருகப்பிரவேசம்
சிறப்பாக நிகழ்ந்தது.
Comments
Post a Comment
Your feedback