திருப்பாவை திருவெம்பாவையில் வரும் ஒரு சொல் போதுவீர்.
மார்கழி மாதம் பிறந்து விட்டது. முழு நிலவு ஒளிவீசுகிறது.
செல்ல வளம் நிறைந்த ஆயர்பாடியில் வசிக்கும் அழகிய மங்கையர்களே! அழகிய அணிகலன்களை
அணிந்த கன்னியரே! எழுந்திருங்கள். இன்று நாம் அதிகாலையில் நீராடக் கிளம்புவோம்.
கூர்மையான வேலுடன் நம்மைப் பாதுகாத்து வரும் நந்தகோபன், அழகிய
கண்களையுடைய யசோதா ஆகியோரின் சிங்கம் போன்ற மகனும், கரிய
நிறத்தவனும், தாமரை மலரைப் போன்ற சிவந்த கண்களை உடையவனும்,
சூரிய, சந்திரர்களைப் போல பிரகாசிக்கும்
திருமுகத்தையுடையவனுமான நாராயணனே கண்ணனாக அவதரித்திருக்கிறான். அவனை நாம் பாடிப் புகழ்ந்தால் இந்த உலகமே நம்மை
வாழ்த்தும்.
என்று கூறி தோழியரை நோன்பு நோக்க அழைக்கிறாள் ஆண்டாள்.
மார்கழித் திங்கள்
மதி நிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர் மல்கும்
ஆய்ப்பாடி செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல்
கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி
யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண்
கதிர்மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை
தருவான்
பாரோர் புகழப்
படிந்தேலோர் எம்பாவாய் .
அதற்கு உறங்கிய பெண் ‘பெண்களே, இப்போதே புறப்பட்டு
விட்டேன். சில் என்று கோபத்துடன்அழைக்க வேண்டாம்.’ என்று
கூறினாள்.
அதற்கு கூட்டத்தினர் ‘நீ பேசுவதில் வல்லவள். உன் கடுமையான
சொற்களையும், வாயையும் நெடுநாட்களாக நாங்கள் அறிவோம்’ என்றனர்.
உறங்கிய அப்பெண் ‘இவ்வாறு பேசும் நீங்கள்தான் பேச்சில் வல்லவர்கள்.
நானே ஏமாற்றுக்காரியாக இருக்கிறேன். நீங்கள் வேண்டுவது யாது?’ என்று கேட்டாள்.
அதற்கு கூட்டத்தினர் ‘நீ விரைந்து எழுந்து வா. எங்களிடம் இல்லாத
தனிச்சிறப்பு உனக்கு என்ன உள்ளது?’ என்று வினவினர்.
அப்பெண் ‘எல்லோரும் வந்து விட்டனரா?’ என்று
கேட்டாள். அதற்கு அவர்கள் ‘நீயே வந்து எல்லோரையும் எண்ணிப் பார்த்துக் கொள்.’
என்றனர்.
அவள் அவர்களிடம் ‘என்னை எதற்காக அழைத்தீர்கள்’ என்று கேட்டாள்.
அவர்கள் ‘கம்சன் முதலான பகைவர்களின் மிடுக்கினை அழித்த மாயனான கண்ணனைப் பாடுவதற்காகத்தான் அழைக்கின்றோம்.’ என்று கூறினர்.
எல்லே இளங்கிளியே இன்னம் உறங்குதியோசில்லென்றழையேன்மின் நங்கைமீர் போதருகின்றேன்
வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாயறிதும்
வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக
ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரா போந்தார் போந்து எண்ணிக்கொள்
வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய் (பா 15)
இந்தத் திருப்பாவைப் பாசுரங்களில்
வரும் சொற்களான 'நீராடப் போதுவீர்' 'போதுமினோ' என்ற
சொற்களுக்கு 'நீராட வாருங்கள்', 'வாருங்களே' என்ற பொருளையும், 'போதருகின்றேன்', 'போதாய்', 'போந்தாரா', 'போந்தார்', 'போந்து
எண்ணிக் கொள்', என்ற சொற்களுக்கு 'வருகின்றேன்', 'வருவாய்', 'வந்தாரா', 'வந்தார்', 'வந்து
எண்ணிக்கொள்' என்ற பொருளைச் சொல்லியிருக்கிறார்கள்.
எந்த ஒரு செயலையும் நாம் மனம் விரும்பி, விளையாட்டு போல் செய்தால் அது நமக்கு மகிழ்ச்சியைத் தரும்.
ஆன்மிகத்திலும் அது போலவே, நாம் இறைவனை வணங்குவதையும், இறை வணக்கத்திற்குரிய சடங்குகளையும் மகிழ்வாகவே செய்ய வேண்டும். அதைத் தான் இந்தப் பாடல் உணர்த்துகின்றது.
சிறு பெண்கள் விளையாட்டாகப் பேசிக் கொண்டு, தங்கள் தோழியை உடன் அழைத்துச் செல்வது என்பது ஒரு குறியீடு.
கலகலப்பான அரட்டை போல கடவுளை வழிபடச் சொல்லித் தரும்
உளவியல் பக்திநெறி பண்பாடு மொழிவளம் என எந்தக் கோணத்தில் பார்த்தாலும் படிக்கப்
படிக்கச் சுவையானவை இந்தப் பாடல்கள்.
Comments
Post a Comment
Your feedback