பச்சை மா மலை போல் மேனி பவள வாய் கமலச் செங்கண்
அச்சுதா அமரர் ஏறே ஆயர் தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான் போய் இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்க மா நகருளானே.
என்ற பாசுரம் நம் அனைவரின் மனதிலும் இடம் பிடித்திருக்கும். டி எம் சௌந்தரராஜனின் குரல் இந்தப் பாடலை என்றும் எல்லோருடைய நாவிலும் உயிர்ப்புடன் வைத்திருக்கும். இப்போது நாம் பார்க்கப்போவது இந்தப்பாடலையோ அதன் பொருளையோ அல்ல. இந்தப் பாடலில் வருகின்ற ஒரு சொல்லை மட்டுமே.
பச்சைமாமலை என்ற சொல் பச்சை+ மா+ மலை என்பதைக் குறிக்கும்.
பச்சை என்பது பண்பினைக் குறிக்கும்.
மா என்பதற்கு பெரிய என்று பொருள்.
மலை என்பது கூறவந்த உண்மையான பொருள்.
முதலில் உள்ள பச்சை என்பது வண்ணத்தைக் குறிக்கும். அதை பண்புச் சொல் என்பர். அடுத்து உள்ள மா என்பது உரிச்சொல். மலை என்பது முதற்சொல் .
நீலத் திரைக்கடல் என்ற சொல்லும் இதுபோலத் தான். நீலம் என்பது பண்பு அல்லது அடை. திரை என்பது அலைகளைக் குறிக்கும். திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்று கேள்விப்பட்டிருப்போம். கடல் என்பது கூறவந்த முதற்பொருள். இவ்வாறு ஒரு சொல்லில் பண்பு, சினை, முதல் ஆகிய மூன்றும் சேர்ந்து வருவதை வண்ணச் சினைச் சொல் என்பர்.
செய்யுளில் இந்த வரிசையானது மாறிக் கூட வரலாம்.
வாய் வன் காக்கை என்பது புறநானூறு பாடலில் உள்ள ஒரு சொல்.
வன் வாய் காக்கை என இருந்தால் சரியான வரிசையாக இருக்கும். அதாவது கடினமான அலகினைக் கொண்ட காக்கை என்பது இதன் பொருள். வன்மை என்பது பண்பையும் வாய் என்பது காக்கையின் உறுப்பையும் குறிக்கும். ஒன்றின் உறுப்பைக் குறிப்பதை சினைப்பெயர் என்பர். காக்கை என்பது முதற்பெயர்.
செவிசெஞ்சேவல் என்பது ஒரு பாட்டில் வருகின்ற ஒரு வரி. காதோரம் சிவப்பாக இருக்கின்ற சேவலைக் குறிப்பதற்காக செஞ்செவிச் சேவல் என்று குறிப்பிட்டிருக்க வேண்டும். அதாவது சிவப்புக் காதுடைய சேவல் என்று குறிப்பிடுவது சரியானது. அதையே முறை மாற்றி செவிசெஞ்சேவல் எனக் கூறப்பட்டிருக்கிறது. செய்யுளில் இது போல மாற்றிக் கூறப்படுவது வழக்கம்தான்.
அது சரி.
மாம்பழச் சிவப்புச் சேலை
மயில்கழுத்து ஊதா
இதெல்லாம் வண்ணச் சினைச் சொல்லாகுமா?
Comments
Post a Comment
Your feedback