குழந்தை வளர்வதைக் கவனித்தல் பெற்றோருக்கு மகிழ்ச்சிகரமான அனுபவம். பிறந்த குழந்தைக்கு எல்லாமே புதுமையான கவர்ச்சியான அனுபவம். பார்வை, ஒலி, மணம், தொடு உணர்வு, சுவை ஆகிய ஐந்து வழிகளில் குழந்தை எல்லா அனுபவங்களையும் சேகரிக்கத் தொடங்குகிறது. குழந்தை கற்றுக்கொள்ளும் வேகம் வயது வந்த நபரின் வேகத்தை விட மிக அதிகம். பச்சிளங் குழந்தையின் உணர்வும் அறிவுத்திறனும் அது பிறந்த முதல் வாரங்களில் வளரத் தொடங்கும். குழந்தை வளர்ச்சிநிலை குறித்து Social Maturity Scale கூறுவதைப் பார்ப்போம்.
குழந்தை வளர்ச்சியை,
சிரிக்கத் தெரிந்தால் இரண்டு மாதம்
கழுத்து நின்றால் நாலு மாதம்
உட்கார்ந்தால் எட்டு மாதம்
நிற்க முடிந்தால் ஒரு வருசம்
என பெரியவர்கள் சுருக்கமாகக் கூறுவார்கள்.
பிறந்தது முதல் 2 மாதங்கள் வரை
உங்கள் முகத்தை கவனமாகப் பார்க்க முடியும்.
குரலைப் பிரித்தறிய முடியும்.
தலையை ஒரு பக்கமாகத் திருப்பி மல்லாந்து படுக்கும்.
திடீரென சத்தம் கேட்டால் அதிர்ச்சியடைந்து உடல் விரைப்பாகும்.
கைவிரல்களை இறுக்கி மூடும்.
உள்ளங்கையில் படுகிற பொருள்களைப் பிடித்துக் கொள்ளும்.
தூக்கும் போது ஆதரவு தரத்தான் தூக்குகிறோம் எனப் புரிந்துகொண்டு அழுகையை நிறுத்தும்.
தலைக்கு மேலுள்ள பிரகாசமான நிறங்களையுடைய பொருட்களைக் கவனிக்கும்.
நீங்கள் அந்தப் பொருளை ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கம் அசைத்தால் குழந்தையின் பார்வையும் அதைத் தொடரும்.
தலையின் பின்பக்கம் உள்ள மென் பகுதி கூடிவரும்.
கடினமான தரையில் நேராக நிற்க வைத்தால் கால்களை மாற்றி நடப்பது அல்லது நடனமாடுவது போலக் காலடி எடுத்து வைக்கும்.
குப்புறப்படுத்திருக்கும் போது தலையைை 45 டிகிரி தூக்கிப் பார்க்க முடியும்.
காதருகே சத்தம் கேட்கும்போது தலையை இப்படியும் அப்படியும் திருப்பும்.
மிக அருகில் உள்ள பொருட்களைப் பார்க்கத் தொடங்கும்.
வலிக்கும் போதும் பசிக்கும் போதும் வெவ்வேறு விதமாக அழும்.
தெரிந்த குரல்களுக்கு பதில் குரலெழுப்பும்.
நீங்கள் சிரித்தால் உங்களைப் பார்த்து பதிலுக்குச் சிரிக்கும்.
நகரும் விளையாட்டுப் பொருளை கண்ணால் பின்தொடர முடியும்.
மூன்றாம் மாதம்
கண்முன் காட்டப்படும் விளையாட்டுப் பொருளை உடனே கவனிக்கும்.
நீங்கள் பேசும்போது, சிரித்து கொஞ்சும் மொழியில் சந்தோசமாக சத்தமிடும்.
மற்றவர்கள் தன்னைத் தொட வேண்டும் என்ற நாட்டத்தை வெளிப்படுத்தும்.
அதைக் கவனிக்காத போதும் தனியாக விடும் போதும் தன் அதிருப்தியை அழுகை மூலம் வெளிப்படுத்தும்.
மற்றவர்கள் தன்னருகே இருக்கும்போது சிரித்தும் கை கால்களை அசைத்தும் உதைத்தும் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும்.
மற்றவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது திரும்பிப் பார்க்கும்.
அறிமுகமான முகங்களை அடையாளம் கண்டுகொள்ளும்.
புதியவர்களைக் கண்டால் அழும் அல்லது முகத்தை திருப்பிக் கொள்ளும்.
4, 5 ஆம் மாதங்கள்
எடை அதிகரிப்பது தினமும் 20 கிராம் போல இருக்கும்.
உட்கார்ந்திருக்கும்போது கழுத்து நேராக நிற்கும்.
நிமிர்த்தி உட்கார வைத்து அணைத்துக் கொடுத்தால் உட்கார முடியும்.
குப்புறப் படுத்திருக்கும் போது தலையை 90 டிகிரி உயர்த்தி பார்க்க முடியும்.
முன்னும் பின்னும் திரும்பிப் படுக்க முடியும்.
பொருட்களை கையால் எட்டி எடுக்க முயலும்.
கையில் கிலுகிலுப்பை தந்தால் அதை வைத்து விளையாட முடியும். ஆனால் கீழே விழுந்தால் எடுக்க முடியாது.
இரண்டு கைகளாலும் கிலுகிலுப்பையைப் பிடிக்க முடியும்.
பொருட்களை வாயில் வைக்க முடியும்.
கண்ணிற்கும் கைக்கும் இடையே ஒருங்கிணைப்பு துவங்கும்.
சத்தமாகச் சிரிக்க முடியும்.
பெற்றோரின் குரல் அல்லது தொடுதலைப் புரிந்து கொள்ள முடியும்.
உணவு நேரம் வந்தால் உற்சாகத்துடன் கூச்சலிடும்.
எந்தச் சத்தத்திற்கும் தலையைத் திருப்பிப் பார்க்கும்.
தன்னைத் தூக்க வேண்டும் என்று கை தூக்கிக் காட்டும்.
தூக்கிக்கொண்டிருப்பவரின் தலைமுடியை இழுத்தும் மூக்கை அவர் மேல் தேய்த்தும் உறவாடும்.
6 ஆம் மாதம்
பல் முளைக்கத் துவங்கும்.
நான்காம் மாதத்தில் எடை பிறக்கும்போது இருந்ததைப் போல் இரண்டு மடங்காக ஆகி இருக்கும். (ஆறு மாதம் வரை இந்த எடையை எட்டாவிட்டால் அது கவலைக்குரியது).
எச்சில் அதிகம் சுரக்கும்.
மல்லாந்த நிலையிலிருந்து குப்புறப் படுக்க முடியும்.
பால் புட்டியை சிறிது நேரம் தானே பிடித்துக்கொள்ளும்.
கீழே விழுந்த பொருளை எடுக்க முடியும்
முதுகு நேராக இருக்கும். நாற்காலியில் உட்கார வைத்தால் உட்கார முடியும்.
காதுக்கு நேராக எழுப்பப்படாத வேறு ஒலிகளைக் கவனிக்க முடியும்.
காதில் கேட்ட ஒலிகளை அப்படியே பதிலுக்கு எழுப்பத் துவங்கும்.
ஓரெழுத்து வார்த்தைகளைப் போல ஒலியெழுப்பும்.
தன்னைத் தானே கண்ணாடியில் பார்த்துக் குதூகலிக்க முடியும்.
வெளியாட்களைப் பார்த்து பயப்படத் துவங்கும்.
பெற்றோர்களை அடையாளம் கண்டுகொள்ள முடியும்.
செயல்களைப் பார்த்து அதேபோல செய்ய முயலும்.
விருப்பமான உணவுகளைத் தேர்வு செய்யத் துவங்கும்.
7 முதல் 10 மாதம் வரை
தன் பெயரை அறிந்திருக்கும். கூடாது (No) என்பதன் பொருள் புரியும்.
எளிய வார்த்தைகள் மற்றும் விளையாட்டைப் புரிந்து கொள்ளும்.
எடை சுமாராக தினமும் 15 கிராம் கூடும்.
உயரம் மாதத்திற்கு 1.5 சென்டிமீட்டர் போல அதிகரிக்கும்.
தவழ முடியும்.
அதிக நேரம் உட்கார்ந்திருக்க முடியும்.
தானாகவே எழுந்து நிற்க முயற்சி செய்யும்.
கட்டை விரல் ஆள்காட்டி விரல்கள் மூலம் பொருட்களை பிடிக்க முடியும்.
தானே சாப்பிட முடியும்.
பொருள்களைத் தூக்கி எறியும்.
தனியாக விட்டால் பயப்படலாம்.
விளையாட்டுப் பொருட்கள் மற்றும் விளையாட்டுகளில் ஆர்வம் இருக்கும்.
கை தட்டவும் கையை அசைத்து வழியனுப்பவும் முடியும்.
11, 12 ஆம் மாதங்கள்
பிறந்தபோது இருந்த எடை மூன்று மடங்காகும்.
பிறந்தபோது இருந்த உயரம் 50% அதிகரிக்கும்.
6 முதல் 8 பற்கள் இருக்கும்.
உதவியோடு அல்லது தனியாக நிற்கவும் நடக்கவும் முடியும்.
உதவி இல்லாமல் கீழே உட்கார முடியும்.
புத்தகத்தின் பக்கங்களை மொத்தமாகப் புரட்ட முடியும்.
துல்லியமாக பொருட்களைப் பிடிக்க முடியும்.
அம்மா, அப்பா மற்றும் இரண்டு வார்த்தைகள் கூற முடியும்.
புத்தகத்தைப் பார்ப்பதில் விருப்பம் அதிகரிக்கும்.
உங்களைச் சிரிக்க வைப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடையும். சிரிக்க வைக்கும் செயலைத் திரும்பத் திரும்பச் செய்யும்.
15 மாதங்கள்
தலைமுடியை தானேவாரிக் கொள்ளும்.
முத்தம் தருதல் என்றால் என்னவென்று புரியும்.
தமிழ் வார்த்தைகள் புரியாவிட்டாலும் சிக்கலான சில வாக்கியங்களைப் புரிந்து கொள்ளும்.
18 முதல் 21 மாதங்கள் வரை
தலையின் முன்புற மென்பகுதி கூடியிருக்கும்.
முந்தைய மாதங்களோடு ஒப்பிட வளர்ச்சி மெதுவாகும்.
உணவு உண்பதும் குறையும்.
கால்களின் ஒத்திசைவின்றி ஓடுதல், அடிக்கடி கீழே விழுதல்.
நின்றிருக்கும் இடத்தில் குதிக்கவியலும்.
பிறர் உதவியின்றி நாற்காலியில் ஏறமுடியும்.
காகிதத்தில் கிறுக்கத் துவங்கும்.
பாசத்தைக் காட்டும்.
கதை கேட்கும் அல்லது படங்கள் பார்க்கும்.
கேட்கும் போது பத்துக்கும் மேற்பட்ட வார்த்தைகளைக் கூற முடியும்.
உடலின் பாகங்களைக் காட்ட முடியும்.
அடிக்கடி மற்றவர் போல் செய்து காட்டும்.
தானே சாப்பிட முடியும்.
எதையாவது எடுத்து வரச் சொன்னால் எடுத்து வர முடியும்.
தனக்கு விருப்பமானதைக் காட்ட உங்களைப் பிடித்து இழுத்து கவனத்தை ஈர்க்கும்.
இரண்டாம் வருடத்தில் குழந்தையின் இயல்பு
குழந்தையின் பெரும்பாலான செய்கைகள் உங்கள் கவனத்தை ஈர்க்கின்ற நோக்கம் கொண்டவை.
எனவே அழுது உங்களை அடித்து அல்லது வெறுப்பூட்டி உங்களிடம் பேச முயற்சி செய்யும்.
தனது நடவடிக்கை சாதகமானதாக பாதகமானதா என்பது குழந்தைக்கு முக்கியமல்ல.
உங்கள் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதே நோக்கமாக இருக்கும்.
குழந்தைகளுக்கு, பகிர்ந்து கொள்ளுதல் பற்றிச் சொல்லிக் கொடுக்க இது நல்ல தருணமாகும்.
Useful info sir.... Being a mother of newborn ..thanks a lot...
ReplyDelete