Skip to main content

குஜிலிப்பாட்டு

 

 பனிரெண்டாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் பாரத மக்களின் பரிதாபச் சிந்து என்ற ஒரு பாடல் இடம்பெற்றுள்ளது. இந்தப் பாடல் முச்சந்தி இலக்கியம் அல்லது குஜிலிப்பாட்டு என்ற வகையில் வழங்குவதாகக் கூறப்பட்டிருக்கிறது.

து என்ன குஜிலி? 

 குஜிலி என்ற பெயர் எப்படி வந்தது?


 குஜிலிக் கடை அல்லது குஜிலி பஜார் என்பது பொதுவாக மாலை நேர கடைத்தெரு என்ற பொருளில் வழங்கி வந்தது. சென்னை நகரின் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள பூங்கா நகரில் அமைந்துள்ள பகுதி அது.

      வள்ளலார் ராமலிங்க அடிகளாரால் தருமமிகு சென்னை என்று பாடப்பெற்ற கந்த கோட்டம் என்ற கந்தசாமி கோயிலைச் சுற்றியுள்ள கடைத்தெருவே குஜிலி பஜார் எனப்படுவது. 


குஜிலி பற்றி1900 ஆம் ஆண்டில் வந்த வியாச மஞ்சரி என்ற நூல் இப்படிக்கூறுகிறது.

'கந்தசாமி கோயிலை டுத்து இன்னும் கொஞ்ச தூரம் வந்தால் பச்சையப்ப முதலியாரின்  சிறந்த பள்ளிக்கூடம் இருக்கும். (இன்றைய பூக்கடை காவல் நிலையத்திற்கு வடக்கே இருப்பது) இன்னும் போய்க் கொண்டே இருந்தால் குஜிலியையும் ஜெனரல் ஆஸ்பத்திரி என்னும் பெரிய சர்க்கார் ஆஸ்பத்திரி, மதராஸ் ரயிலின் தலைமையிலான சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் முதலியவை தோன்றும்'


   அக்காலத்தில் குஜிலிக் கடைத்தெரு(சைனா பஜார் வீதி) பல்வேறு வகையான மலிவான பொருள்களுக்கு பெயர் பெற்றிருந்தது. மாலைக் காலத்தில் எப்போதும் ஜன நெருக்கமுள்ள இவ்வீதியைப் பார்க்க வெகு வினோதமாக இருக்கும்.  


     சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் பணிக்கு அமர்ந்துஜார்ஜ்டவுன் மண்ணடியில் குடிபுகுந்த மறைமலையடிகள் தமக்குத் தேவையான தட்டு, பாத்திரம்சீப்பு,சிம்னி, தாள்   முதலானவற்றை குஜிலிக் கடையில் அவ்வப்போது வாங்கி வந்திருப்பது அவருடைய நாட்குறிப்பிலிருந்து தெரிகிறது.


    குஜிலிக் கடைத்தெருவில் ஜேப்படி திருடர்களும் பிக்பாக்கெட்களும் மறைந்திருந்ததால் அது திருட்டு பஜார் என்றே வழங்கப்பட்டதாம் .


 சென்னையிலே குஜிலியின் முக்கில் ஒரு வீதிக்கு ஈவ்னிங் பஜார் என்றும் அடுத்த வீதிக்கு தீவிங் பஜார் (thieving bazaar)என்றும் பெயர் இருந்தது . 

   ராஜதானி நகரத்திலே ஒரு வீதிக்கு தீவிங் பஜார்அதாவது திருட்டு கடைத் தெரு என்று பெயர் இருப்பது நகரவாசிகளுக்கும் போலீசுக்கும் கௌரவம் தருவதன்று என நினைத்து அப்போது முனிசிபல் கமிஷனராக இருந்த மரோலி துரை  தீவிங் பஜார் என்ற பெயரை குஜிலி பஜார் என்று மாற்றினார் என்று கூறுகிறார்கள்.


    எனவே இத்தகைய குஜிலி பஜாரில் கிடைக்கக் கூடிய புத்தகங்கள் குஜிலி நூல்கள் என்று பெயர் பெற்றன என்று சொல்லலாம்.

    உண்மையில் குஜிலி பஜார் என்பது ஒரு பெயர்ச்சொல்.  இந்த பெயர்ச்சொல் பின்பு வினைச் சொல்லாகவும்  மாறியது. எப்படி ?

    இந்த நூல் குஜிலியாகவும் கிடைக்கும் என்று விளம்பரங்கள் கூறும்போது குஜிலியாக என்பது வினைச்சொல்லாக பயன்படுத்தப்பட்டு வந்தது.

 மேலும் சுத்தப் பதிப்பு என்பதற்கு எதிர்ச்சொல்லாகவும் குஜிலிப் பதிப்பு வழங்கப்பட்டிருக்கிறது.  குஜிலிக்காரர்களே தம் நூல்களை சுத்தப் பதிப்பு என்று சொல்லிவிற்ற காலமும் இருந்தது.

 

ரசிகமணி டி.கே.சிதம்பரநாத முதலியார் முதன்முதலில் முக்கூடற்பள்ளு  நூலை, குஜிலிக் கடையில் வாங்கியதைப் பற்றிய தன்னுடைய அனுபவத்தை இப்படிக் கூறுகிறார்.

      ஏதோ ஒரு ஏட்டை கம்பாசிடர் பையன் கையில் கொடுத்துவிட்டு உன் இஷ்டம் போல அச்சுக்கோத்துவை என்று சொல்லிவிட்டார் பதிப்பாசிரியர். அகராதி, இலக்கணம், யாப்பியல் எல்லாவற்றையும் ஹதம் பண்ணிவிட்டான் பையன்.  எப்படியோ தவிட்டு நிறமாக இருந்த அதில்  ஒரு செய்யுளையாவது உருவாகக்  காண முடியவில்லை. ஏன்,ஒரு  அடியைக் கூட காணக் கஷ்டமாயிருந்தது. நூலை வாசிக்கிறதை விட 100 குறுக்கெழுத்துப் போட்டியைத் தீர்த்துவிடலாம்.

 

 சுதந்திரத்திற்கு முன்பு 1930இல் குஜிலி நூல்கள் பெருமளவில் குவிந்து விட்டதால் பொது இடங்களிலும் சந்தைகளிலும் தெருக்களிலும் விற்கப்படும் மோசமான தாளில்    அச்சுப் பிழைகள் மலிந்துகீழான மொழியில் அமைந்த நூல்களை அழித்துவிட அரசாங்கம் அனுமதித்தது


   இதன் மூலமாக எளிய மக்களின் இலக்கியம் என்று கொண்டாடப்பட்ட  நல்லதங்காள், அல்லியரசாணி, கள்ளன்பாட்டு முதலான குஜிலி நூல்கள் பெருமளவில் அழிந்தன.

   இதுவரை படித்ததிலிருந்து குஜிலி நூல்கள் என்ற அவற்றினுடைய தரம் குறித்து நமக்கு ஓரளவு தெளிவாகி இருக்கும். 


 இன்றைக்கும் இந்தத் தெருவோர இலக்கியத்தில் ஈர்ப்பு ஏற்படுவதற்கு ஒரு முக்கியமான காரணம் அந்தக் காலச் செய்திகளை உடனுக்குடன் பாடல் கட்டிப் பாடியதே ஆகும். அன்றாடம் நிகழ்ந்த கொலை கொள்ளை அரசியல் முதலான பரபரப்பு செய்திகள் சுடச்சுட பாடல்களாக்கப்பட்டன.

  வெகுஜன ஊடகங்கள் பரவலாகாத காலத்தில்இத்தகைய பாடுபொருள்கள் கொண்ட பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன.

         
          கிராமபோன் பாடல்கள் பிரபலமானதில் குஜிலிக்கும் பெரிய பங்கு உண்டு. இசைத்தட்டு கம்பெனிகள் தன் பாடல்களை அச்சிட்டு வினியோகம் செய்தது போக குஜிலிக் கடைக்காரர்களும் அவற்றை சிறுசிறு நூல்களாக அச்சிட்டு விற்றனர். இவை உரிய அனுமதி எல்லாம் பெறுவதில்லை. இப்போதும் சினிமா தியேட்டர்களுக்கு முன்பு பாட்டுப் புத்தகங்கள் விற்கப்படுவது  குஜிலி இலக்கியத்தின் எச்சமாகும்.


         குஜிலி நூல்கள் அச்சுப்பிழை நிறைந்தவை என்பது மிகப் பரவலாக அறிந்த செய்தி. 

    ரகர றகரங்களும், ல ள ழகரங்களும் ஏறத்தாழ எந்த வேறுபாடுமின்றி கையாளப்பட்டு இருப்பதைக் காணமுடிகிறது.  

    எழுத்துப் பிழைகளும் சொற்களும் இலக்கணப் பிழைகளும் நூல்களின் சிறப்புக்கூறுகள். 

    எனவே குஜிலிப் பாடல்களில்  பிழை நீக்கிஎழுதினால் அந்தப் பாட்டின் உண்மையான பண்பு கெட்டுவிடும் என்பதால் குஜிலிப் பாடல்களை அப்படியே பிழையோடு பயன்படுத்திக்கொள்ளலாம்.

முதல் உலகப் போரின் போது சென்னையில் குண்டுவீசப்பட்டது பற்றிய  ஒரு குஜிலிப் பாடல் இது. 1914 ல் மன்னார்குடி பாரதி பிரஸ் பதிப்பித்து வெளியிடப்பட்டது.


  செந்தில் ஆண்டவர் துணை 

 

செஏன்னப் பட்டணத்தில் ஜெர்மன் எம்டன் கப்பல் கடர்க்கரையிலிருந்து குண்டடி ஆரம்பிக்க பிரிட்டிஷ் சேனைகள் செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலிருந்து எம்டன் கப்பலை குண்டால்அடித்துத் துரத்திய வல்லமை சிந்து.

இஃது விஜயபுரம் நா.  சபாபதி பிள்ளை அவர்களால் இயற்றியதை பூர்வீகம் ஏனங்குடியிலிருந்து இப்போது விஜயபுரம் பள்ளிவாசல் தெருவில் வந்திருக்கும் செ.மு. முகமது காசீன் றாவுத்தர் அவர்களின் முயர்ச்சியின் பேரில் அச்சிடப்பட்டது.

இஃது மன்னார்குடி பாரதி பிரஸில் பதிப்பிக்கப் பெற்றது.

                                 1914 பைசா 6

  விருத்தம் 

கொடி முழங்கும் இங்கிலீஷின் ,மகுடம் வாழ கீர்த்தி பெற்ற செங்கோல் முன் தழைத்து வாழ முடி வணங்கி சிற்றரசர் புடைகள் சூழ 

உல்லாச கொடி வழங்க உலகமெல்லாம் 

படி வரியாய் நழுவாது குடிகள் தன்னை பக்குவமாய் ஆதரிக்கும் பமணிங்கிலீஷ்

 இடி முழங்கும் தொனியுடனே யுத்தம் செய்யும் என்னேவொண்ணா வல்லபத்தை இயம்புவேனே.

      கும்மி

 

ஆண்டு துலாயிரத் தானபதி  னான்கில்

ஆனதோர் செப்டம்பர் மாதமதில்

வேண்டிய தேதி இருபத்தி ரெண்டினில்

விழுந்த தென்றார் குண்டு சென்னை தனில்.

 

ஜெர்மனி எம்டன் குரூஸர் கப்பலது

சென்னை கடற்கரை தென்கிழக்கில்

அருணனி ரங்கி இருட்டுக  ளானதும்

அங்கே ஒளியுடன் நின்றதுவே.

 

 

நின்று எதிர்நோக்கி பட்டணம் தன்னில்

நிமிஷ மிருபது நேர மட்டும் 

குண்டுகள்  விட்டுமே கோட்டை லைட் ஹவுஸ் 

குந்தம் செய்ய குண்டை விட்டனறே.

 

ஜெனறலென்னும் போஸ்ட் ஆபீஸின் பில்டிங்குகள் 

சீர்பெரும் தந்தி ஆபீஸில்

கன விரைவாக ஓர் குண்டு வீழ்ந்திட

 கட்டடத்தில் துளை சொற்பம் என்றார்.

 

 

கடற்கரை உள்ள ஓர் கிட்டங்கிதனிலும் 

காணும் போர்ட் ஆபீஸ் கூரையிலும் 

தடபுட சத்தமாய் குண்டு விழுந்திட 

சார்ப்பின் கூரை கொஞ்சம் பத்தியதே.

 

 

சின்ன ரயிலென்னும் தென்னிந்தியா வண்டி 

சீரான காரேஜ் பீச்சில் நிற்க 

முன்னே விழுந்திட குண்டுமதன் பேரில் 

மூலையில் கொஞ்சம் எரிந்ததென்றார்.

 

என தொடர்ந்து  கும்மிப் பாடல் வடிவில் உள்ளது இந்த குஜிலிப்பாடல்.

 

அந்தக் காலத்தில் செய்தித்தாள் படிப்பது மிக குறைவாக இருந்தபோதும் வாய்மொழிப் பாடல்களாக அன்றாடச் செய்திகளை குஜிலிப் பாடல்கள் மக்களுக்கு கொண்டு சேர்த்தன.

  




நாகர்கோவில் காலச்சுவடு முச்சந்தி இலக்கியம் என்ற நூலை வெளியிட்டுள்ளது. ஆசிரியர்: ஆ.இரா. வேங்க டாசலபதி.  

Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...