பாரதிக்கு ராமபிரான் மீது அளவற்ற உரிமை. அதன் வெளிப்பாடாய் ராமனுக்கு கெட்டவன் போல வேஷமிட்டுப் பார்த்துச் சந்தோசப்படுகிறார். குதிரைக் கொம்பு என்னும் கதையில் கதைக்குள் கதையாக வக்கிரமுக சாஸ்திரி வாயிலாக ராமபிரானை நையாண்டி செய்யும் உரிமை பாரதியாருக்கு கிடைக்கிறது.
ராவணனை நல்லவனாகவும் ராமனை சீதையைத் திருடிக் கொண்டு வந்தவனாகவும் நினைத்துப் பார்க்கிறார் பாரதியார்.
இலங்கையில் ராவணன் தர்மராஜ்யம் நடத்திய காலத்தில் மாதம் மூன்று மழை பெய்தது. அப்போது அயோத்தி நகரில் அரசு செலுத்திய தசரதராஜன் பிள்ளையாகிய ராமன் தனக்கு மூத்தவனாகிய பரதனுக்குப் பட்டம் கட்டாமல் தனக்கே பட்டம் கட்டிக் கொள்ள விரும்பி தனது தந்தையை எதிர்த்துக் கலகம் பண்ணினான். பிதாவுக்குக் கோபம் உண்டாகி ராமனையும் லட்சுமணனையும் ராஜ்ஜியத்தை விட்டு வெளியே துரத்தி விட்டான். அங்கிருந்து அவர்கள் மிதிலை நகரத்துக்கு ஓடிப்போனார்கள். அந்நகரத்து அரசனாகிய ஜனகனை சரணமடைந்தார்கள். அவன் இவர்களுக்கு அபயம் கொடுத்து காப்பாற்றி வருகையில் ராமன் மேற்படி ஜனகராஜன் மகளாகிய சீதையின் அழகைக் கண்டு மோகித்து அவளை திருட்டாகக் கவர்ந்துகொண்டு தண்டகாரண்யம் புகுந்தான். அங்கு ராமன்,லக்ஷ்மணன் முனிவர்களையெல்லாம் பலவிதங்களில் இம்சை செய்தனர். யாகங்களைக் கெடுத்தனர். இந்த விஷயம் அங்கே அதிகாரம் செய்து வந்த சூர்ப்பனகை தேவியின் காதில் பட்டது. ராவணன் தங்கையாகையாலும் பிராமண குலம் ஆனபடியினாலேயும் ரிஷிகளுக்கு ராமன் செய்யும் துன்பத்தைப் பொறுக்க மாட்டாதவளாக அவள் அந்த ராமனையும் அவன் தம்பி லட்சுமணனையும் பிடித்துக் கட்டிக் கொண்டு வரும்படி தனது படையினரிடம் உத்தரவு கொடுத்தாள்.
அவள் அவ்விருவரையும் கட்டவிழ்த்துவிடும்படி செய்து பலவிதமான கடூர வார்த்தைகள் சொல்லிப் பயமுறுத்திய பிறகு ராஜபுத்திரராகவும் இளம் பிள்ளையாகவும் இருந்தபடியால் துஷ்ட காரியங்கள் செய்தால் கடும் தண்டனை கிடைக்கும் என்று சொல்லி நானாவிதமான புத்தி புகட்டிய பின்பு அவர்களைச் சிறிது காலம் அரண்மனையிலிருந்து விருந்துண்டு போகும்படி செய்தாள். சீதை சூர்ப்பனகையிடம் இராமன் தன்னை வலிமையாலே தூக்கிக் கொண்டு வந்தான் என்றும் தனக்கு மறுபடியும் மிதிலைக்கு போய் தனது பிதாவுடன் இருக்கப் பிரியம் என்றும் சொன்னாள். இதைக் கேட்டு சூர்ப்பனகை மனமிரங்கி சீதையை இலங்கைக்கு அனுப்பி அங்கிருந்து மிதிலையில் கொண்டு சேர்க்கும்படி ராவணனுக்குச் சொல்லி அனுப்பினாள். ராவணனுடைய அரண்மனைக்கு வந்து சேர்ந்தவுடனே அவளை மிதிலைக்கு அனுப்பும் பொருட்டு நல்ல நாள் பார்த்தார்கள். நல்ல நாள் கிடைக்கவில்லை. ஆகையால் சீதையை இரண்டு வருஷம் தனது அரண்மனையிலேயே தங்கி விட்டுப் போகும்படி இராவணன் ஆக்கினை செய்தான்.
Comments
Post a Comment
Your feedback