எதையேனும் முக்கியமாக கவனிக்க வேண்டியதாக இருந்தால் கவனமாகப் பார்ப்பது இயல்பு.
"வச்ச கண்ணு வாங்காமப் பார்க்கிறது" என்று பேச்சுவழக்கில் அதைச் சொல்வார்கள். பார்க்கும்போது பார்வை தடைபடாமல் சிமிட்டிக் கொள்வது இமைகளின் வழக்கம். அதையும் தாண்டி இமைகளையே சிமிட்டாமல் தொடர்ந்து பார்ப்பதை தான் 'வச்ச கண்ணு வாங்காமப் பார்ப்பது' என்று கூறுவார்கள்.
பார்க்கின்ற பொருளின் உண்மைத் தன்மையில் சந்தேகம் தோன்றும் போது மொத்த கவனத்தையும் ஒருங்குபடுத்திப் பார்ப்பது வழக்கம். அதை 'உத்துஉத்துப் பார்ப்பது' என்பார்கள்.
சாதாரணமாகப் பார்க்க வேண்டியவற்றில் சிலவற்றை மட்டும் ஊன்றிக் கவனித்துப் பார்ப்பது சில நேரங்களில் அவசியமாகும். பணத்தை எண்ணும் போது ஏதாவது ஒரு தாளில் அது நல்ல நோட்டு தானா என்ற சந்தேகம் வரும்போது அதை மட்டும் அந்தப்புறம் இந்தப்புறம் எல்லாம் திருப்பிப் பார்ப்போம்.
"அப்படி என்ன கண்ணை உள்ள வெச்சுப் பார்க்கறீங்க. நல்ல நோட்டு தான்" என்று நமக்குப் பதில் சொல்வார்கள்.
பார்த்தல் ஒரு நிலை.
கருத்தாகப் பார்த்தல் என்பது அதை விடவும் முக்கியமானது.
கண் பார்வையில் உன் கவனத்தை வைத்துக்கொண்டு பார் என்பது அதன் பொருள்.
கவனம் இல்லாமல் பார்ப்பதை 'ஏனோ தானோ என்று பார்க்கும்' பட்டியலில் சேர்த்துவிடுவார்கள்.
நாம் எதையெல்லாம் கண்ணை உள்ளே வைத்துக்கொண்டு பார்க்கிறோம் ?
டிவி சீரியல் பார்க்கும் போது....
சினிமா பார்க்கும் போது...
இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.
அடுத்த முறை சினிமா தியேட்டருக்குப் போகும் போது திரையைப் பார்ப்பதற்குப் பதில் பின்னால் திரும்பிப் படம் பார்ப்பவர்களின் முகத்தைப் பாருங்கள். இறுக்கமான உணர்வில் சிலையாக உட்கார்ந்திருப்பார்கள்.
அதிலும் மொபைல் பார்க்கும்போது கண்ணை மட்டுமல்ல மொத்த புலன்களையும் உள்ளே வைத்து விடுகிறோம்.
ஆனால் கவனமாக கருத்தாகப் படிக்க வேண்டிய பாடத்தை இங்குமங்கும் பார்த்துக்கொண்டே படிப்பவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள்.
எங்கே கண்ணை உள்ளே வைத்துக் கொண்டு இருக்கிறோமோ அது கவனம் பெறுகிறது; மனதில் நிறைகிறது.
நாம் எதிர் பார்த்துக் கொண்டிருக்கின்ற ஒன்று தப்பிப் போய்விடக் கூடாது என்று கவனமாகப் பார்ப்பதை "கண்ணில் விளக்கெண்ணை விட்டுக் கொண்டு பார்ப்பது" என்று சொல்வார்கள்.
அதை அப்படியே அகராதி வைத்துப் புரிந்துகொண்டு விளக்கெண்ணையை கண்ணில் விட்டு விடக்கூடாது.
அதிக நேரம் இமைக்காமல் ஒன்றைப் பார்க்கும் போது கண்ணோடு சேர்ந்து மூளையும் அதைக் கவனிக்கிறது.
Keep one's eyes peeled
என்று ஆங்கிலத்தில் அதைக் குறிப்பிடுவார்கள்.
அதாவது கண்ணை வாழைப்பழம் ஆக நினைத்துக் கொண்டால் இமையை வாழைத் தோலாக நினைத்துக் கொள்ளலாம். பழத்தைத் தடுக்கும் தோலை உரித்து விடுவது போல காட்சியைத் தடுக்கும் இமைகளை ஒதுக்கி வைத்து விட வேண்டும் என்பதுதான் இதன் பொருள்.
தொடர்ந்து ஒன்றை அப்படி பார்த்துக் கொண்டே இருப்பதை 'பார்த்துப் பார்த்து கண்ணே பூத்துப் போச்சு' என்பார்கள்.
பயன்படுத்தாமல் அப்படியே போட்டு வைத்திருப்பதில் பூஞ்சை பிடிப்பது போல நீண்ட காலமாக இமைக்காமல் இருந்ததால் கண்களிலும் அப்படி என்பது தான் அதற்குப் பொருள்.
அவன் வரவை எதிர்பார்த்து கதவில் சாய்ந்து பார்த்துக்கொண்டே இருக்கிறாள் அவள். அசையாமல் நின்று நீண்டநேரம் காத்திருப்பதை அறிந்து "நிலைப்படியே நீயாக நின்றிருக்கிறாய்" என்று நெகிழ்ந்து போகிறான் அவன்.
ஆளுக்கு ஒரு சாவி வைத்துக்கொண்டு "போகும்போது வீட்டைப் பூட்டி விட்டுப் போய் விடுங்கள்" என்ற அளவில் வாழ்கின்ற நமக்கு இந்த கதவாகிக் காத்திருக்கும் காதல் எல்லாம் புரியவா போகிறது?
Comments
Post a Comment
Your feedback