வள்ளிதிருமணம் ,அரிச்சந்திரன், மதுரைவீரன், பவளக்கொடி சத்தியவான் சாவித்திரி ...இந்தப் பெயர்களை எல்லாம் கேட்கும்போது மனசுக்குள் மலரும் நினைவுகள் எழும்.
இவை எல்லாம் ஊர்க் கோயில் விழாக்களில் கலை நிகழ்ச்சிகளாக நடத்தப்பட்ட நாடகங்களின் பெயர்கள்.
ராஜபார்ட், பபூன், டான்ஸ் நடிகைகள், ஆர்மோனிய பெட்டிக்காரர் ,மிருதங்கம், டோலக் என பலரும் சேர்ந்த குழு தந்தது தான் அத்தகைய நாடகங்கள். நாடகத்தின் திரைக்காக சீன் கம்பெனிகள் நகரங்களில் இருக்கும். கோடையிடி குமுறல், இளையராணி என பல பட்டங்களோடு அந்த நாடகக் கலைஞர்களின் பெயர்கள் நோட்டீசில் அச்சடிக்கப்படும். பல வண்ணங்களில் மட்டித் தாளில் அச்சடிக்கப்பட்ட அந்த நோட்டீசை பாக்கெட்டில் வைத்திருந்து பெருமையாக விளக்கம் சொல்வது அப்போதெல்லாம் வழக்கம்.
நாடகக் கலைஞர்களின் இரவு உணவு உள்ளூரில் உள்ள ஒரு பிரமுகர் வீட்டில் ஏற்பாடு செய்யப்படும். 10 மணிக்கு மைதானம் நிரம்பி விடும். ஓரிரண்டு சாமி பாட்டுக்களை பெட்டிக்காரர் பாடுவார். பிறகு பபூன் நகைச்சுவை, பாட்டு என தனியாவர்த்தனம் செய்வதில் அரைமணிநேரம் போகும். பிறகு டான்ஸ் காகவே அழைத்துவரப்பட்ட நடிகையரின் பாடல்கள் ஒன்றிரண்டு என11.30 மணிக்கு கதை துவங்கும். ராஜபார்ட் வரும்போது வருகை முன்பாட்டாக (Entry song) திரைக்குப்பின் நின்றுகொண்டு பல்லவியையும் முதல் சரணத்தையும் பாடிவிட்டு மீதிப் பாடலை மேடையில் நடுநாயகமாக நின்று பாடுவார். ராஜபார்ட் மட்டுமல்லாமல் பெரும்பாலான கலைஞர்கள் இந்த உத்தியைப் பின்பற்றுவார்கள்.
வள்ளி திருமணம் நாடகத்தில் வள்ளி தினைப்புனத்தில் இருக்க, ஒரு மானைத் தேடி வந்ததாக அந்த தினைப்புனத்தில் முருகன் நுழைந்து ஒரு பாட்டுப் பாடுவான். வள்ளி திருமணம் நாடகத்தில் ஹைலைட்டான பாட்டு இதுதான்.
காயாத கானகத்தே நின்றுலாவும் நற்காரிகையே- புல்
மேயாத மான் புள்ளி மேவாத மான் நல்ல சாதிமான்
சாயாத கொம்பிரண்டிருந்தாலும் அது தலைநிமிர்ந்து
பாயாத மான் அம்மானைத் தேடிவந்தேன் ஆரணங்கே!
'காயாத கானகத்தே நின்றுலாவும் நற்காரிகையே' என்பது உச்சஸ்தாயில் பாடப்படும். இடையிடையே ஆர்மோனியப் பெட்டிக்காரர் பின்பாட்டாக அதைப் பாடுவார்.
'மேயாதமான்' வரியும் இதேபோல விஸ்தாரமாகப் பாடப்படும். ஒவ்வொரு இரண்டு வரி பாடிய பின்னும் மேயாதமான் என மீண்டும் பெட்டிக்காரர் பாடுவார்.
'மான்வரக் கண்டதுண்டோ
என்ற வரிகளோடு அந்தப் பாட்டு நிறைவு பெறும். அந்தப் பாட்டு முடிந்த பின் அந்தப் பாட்டுக்காகவே உட்கார்ந்திருந்த பெரியவர்கள் சிலர் அங்கேயே நீட்டி நிமிர்ந்து படுத்துக்கொள்வர். தாய்மார்கள் தூங்கும் பெரிய பையனைத் தலையணையாக்கி சின்னக் குழந்தையைத் தூங்க வைத்துவிட்டு ஆர்வமாக இக்கதையைக் கவனிப்பர்.
ராஜபார்ட் பாடும் பாடல்களில் சில வரிகளை பபூன் தன் பாடி லாங்குவேஜில் இரட்டை அர்த்தத்தில் பாடுவார்.
'சாயாத கொம்பிரண்டிருந்தாலும்' என்பது அப்படிப்பட்ட ஒருவரி.
வள்ளி திருமணத்திற்கு இந்தப் பாட்டுப் போல ஒவ்வொரு நாடகத்திற்கும் சில விஷயங்கள் இருக்கும். எந்த கௌரவமும் பார்க்காமல் எல்லோரும் மண் தரையில் அமர்ந்து பார்த்த அந்த நாடகங்கள் இன்றும் எங்காவது நடிக்கப்படலாம். பெரும்பாலான கலைஞர்கள் வாய்மொழியாகவே பாட்டு வசனங்களைச் சொல்லும் திறமை படைத்தவர்கள். அவர்களுள் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் கூட உண்டு. எல்லாமே வேகம், எல்லாமே நவீனம் என்பதில் தொலைந்து போனவைகளில் இந்த நாடகங்களும் சேரும்.

Comments
Post a Comment
Your feedback