தீயில் நீ வெம்மையாகக் கொதிக்கிறாய்.
பூவில் நீயே மணமாக இருக்கிறாய்.
கல்லுக்குள் வைரமாக உள்ளே இருக்கிறாய்.
பேசும் சொற்களில் எவையெல்லாம் உண்மையானவையோ அவையாக நீயே இருக்கிறாய்.
அறத்தில் நீ அன்பாக இருக்கிறாய்.
வீரத்தில் நீ வலிமையாகிறாய்.
வேதங்களில் நீயே இருக்கிறாய்.
நிலம், நீர், காற்று,நெருப்பு, ஆகாயம் என ஐம்பூதங்களுக்கும் ஆதாரமாக இருக்கிறாய்.
பகலில் சூரிய ஒளியாகிறாய்.
நீயே நிலவாகவும் நிலவின் குளிர்ச்சியாகவும் இருக்கிறாய்.
நான் பார்ப்பதிலெல்லாம் நீயே தெரிகிறாய்.
எல்லாவற்றுக்கும் உட்பொருளாக நீயே இருக்கிறாய்.
எட்டுத்தொகை நூலான பரிபாடலில் உள்ள திருமால் வழிபாடு இது.
தீயினுள் தெறல் நீ; பூவினுள் நாற்றம் நீ
கல்லினுள் மணியும் நீ ; சொல்லினுள் வாய்மை நீ;
அறத்தினுள் அன்பு நீ; மறத்தினுள் மைந்து நீ;
வேதத்து மறை நீ; பூதத்து முதலும் நீ;
வெஞ்சுடர் ஒளியும் நீ; திங்களுள் அளியும் நீ;
அனைத்தும் நீ; அனைத்தின் உட்பொருளும் நீ
( பரிபாடல் )
தெறல் -வெம்மை
நாற்றம் -மணம்
மறம் -வீரம்
மைந்து - வலிமை
பூதம் - பஞ்ச பூதம்
வெஞ்சுடர் - சூரிய ஒளி
திங்கள் -நிலவு
அளி - குளிர்ச்சி
Comments
Post a Comment
Your feedback