ஒன்று போலவே இருக்கின்ற இரட்டையர்களை குறித்து வந்துள்ள பல நகைச்சுவை திரைப்படங்களை நமக்கு தெரியும்.
அந்த அத்தனை படங்களுக்கும் அடிப்படையாக ஷேக்ஸ்பியர் எழுதிய The Comedy of Errors நாடகத்தைச் சொல்லலாம்.
அந்த நாடகத்தின் சுருக்கம் இது.
(இடையில் குழப்பிக் கொள்ளாமல் கவனமாகப் படிக்கவும்.)
பல ஆண்டுகளாக சைரக்யூஸ், எஃபீசஸ் நகரங்களுக்கு இடையே கடுமையான போட்டி நிலவி வந்தது.
இதனால் எஃபீசஸ் நகரில் ஒரு வினோதமான சட்டம் இருந்தது. சைரக்யூஸ் நகரைச் சேர்ந்த வியாபாரி யாராவது எஃபீசஸ் நகரில் தட்டுப்பட்டால் அவர்கள் உடனடியாகக் கைது செய்யப்படுவார்கள். ஆயிரம் மார்க் அபராதம் செலுத்தினால் அவர்களுக்கு மன்னிப்பு; இல்லாவிட்டால் மரணதண்டனை.
இப்படியாக சைரக்யூஸ்காரர்களை வெறுத்துக் கொண்டிருந்த எஃபீசஸ் நகரில் ஏஜியன் என்ற வியாபாரி அலைந்து கொண்டிருந்தான். அவன் சைரக்யூஸ் நகரை சேர்ந்தவன் என்று தெரிந்ததும் கைது செய்து பிரபுவின் முன் நிறுத்தினார்கள்.
சைரக்யூஸ் நகரைச் சேர்ந்த நீ இங்கே ஏன் வந்தாய்? அப்படி வந்தால் மரண தண்டனை தான் என்று உனக்கு தெரியாதா? என்று கேட்டார் பிரபு.
"நான் மரணத்துக்கு பயப்படவில்லை" என்றான் பிடிபட்டவன்.
"ஏனெனில் அதைவிட கொடுமையான பல அனுபவங்களை நான் சந்தித்து இருக்கிறேன். அதனால் என் மனம் ஏற்கனவே உடைந்து நொறுங்கி விட்டது".
ஏஜியன் இப்படிச் சொன்னதும் எல்லோரும் அவனுடைய கதையைக் கேட்க விரும்பினார்கள். ஆகவே அவன் தன்னுடைய சோகக் கதையை விவரித்தான்.
மனைவி குழந்தைகளோடு சந்தோசமாக வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தவன் நான். நடுக்கடலில் நடந்த ஒரு விபத்து தான் என்னை இந்த நிலைமைக்குத் தள்ளிவிட்டது .
எனக்கும் என் மனைவிக்கும் அழகான இரட்டைக் குழந்தைகள். இரண்டு பேருக்கும் ஆன்ட்டிபோலஸ் என்று ஒரே மாதிரி பெயர் வைத்தோம்.
அவர்களைக் கவனித்துக் கொள்வதற்காக இரண்டு குழந்தைகளை நான் விலை கொடுத்து வாங்கி வளர்த்தேன். அவர்களும் இரட்டையர்கள் தான். அவர்கள் இருவருக்கும் கூட ஒரே பெயர் தான் ட்ரோமியோ.
அப்போது நான் ஒரு வெளியூரில் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். அங்கிருந்து நாங்கள் கப்பலில் ஊர் திரும்பிக் கொண்டிருந்த போது கடுமையான ஒரு புயல் காற்று எங்கள் கப்பலைச் சிதைத்து விட்டது.
அதிர்ஷ்டவசமாக நாங்கள் எல்லோருமே உயிர்தப்பி விட்டோம் என்றாலும் எங்கள் குடும்பம் இரண்டாகப் பிரிந்து விட்டது.
அதாவது ஏஜியனுடன் அவனுடைய மகன்களில் இளையவனும் அவனுக்கு துணையாக இருந்த இரட்டையர்களில் ஒருவன் மட்டும் தப்பிவிட்டார்கள்.
மற்றவர்கள் கடலில் வேறு திசையில் அடித்துச் செல்லப்பட்டார்கள்.
அதன் பிறகு என் மனைவியும் மூத்த மகனும் என்ன ஆனார்கள் என்று எனக்கு சேத் தெரியவில்லை.
ஆனால் 18 வயதில் என் மகன் தனது அம்மாவையும் அண்ணனையும் தேடிக்கொண்டு கிளம்பிச் சென்றான். கடந்த ஐந்து வருடங்களாக அவனும் திரும்பி வரவில்லை. இப்படி எல்லோரையும் பறிகொடுத்துவிட்டு நான் தனியே நிற்கிறேன் என்று அவன் வருத்தமாகச் சொன்னதும் பிரபுவின் மனதில் அவன் மீது பரிதாபம் உண்டானது.
ஆனால் சட்டப்படி அவரால் ஏஜியனை தண்டிக்காமல் இருக்க முடியாது. என்றாலும் அவனுக்கு ஒரு நாள் அவகாசம் கொடுத்த பிரபு அந்த ஒரு நாளைக்குள் பணம் கொண்டு வந்து கொடுத்தால் அவனை விடுவித்து விடுவதாகவும் சொன்னார்.
நான் எப்படி ஆயிரம் மார்க் பணம் சேர்க்க முடியும்? எனக்கு இந்த ஊரில் யாரையுமே தெரியாதே என்று பரிதாபமாகச் சொன்னான் ஏஜியன்.
ஆனால் ஏஜியனுக்கு தெரியாத விஷயம் அவனுடைய இரண்டு மகன்களுமே அந்த ஊரில் தான் இருந்தார்கள்.
மூத்த மகனான ஆன்ட்டிபோலஸ் உள்ளூர் ராணுவத்தில் அதிகாரியாக இருந்தான். எஃபீசஸ் நகரிலேயே திருமணம் செய்துகொண்டு குடும்பஸ்தனாக இருந்தான் அவன். கூடவே அவனுக்கு உதவியாக மூத்த ட்ரோமியோ.
அவர்களைத் தேடிக் கொண்டு ஊர் ஊராகச் சென்ற இளைய ஆண்டிபொலஸ், இளைய ட்ரோமியோ ஆகியோர் அதே சமயத்தில் எஃபீசஸ்க்கு வந்திருந்தார்கள். ஆனால் இந்த இரண்டு ஜோடிகளும் ஒருவரையொருவர் சந்தித்துக் கொள்ளவில்லை.
இந்த நேரத்தில் இளைய ஆண்டிபொலஸ்சும், இளைய ட்ரோமியோவும் ஊரைச் சுற்றிப் பார்க்கக் கிளம்பினார்கள். இளைய ஆண்டிபொலஸ் தன்னுடைய உதவியாளன் இளைய ட்ரோமியோவை எங்கோ அனுப்பி வைக்க, அந்த நேரத்தில் அங்கே வந்த மூத்த ட்ரோமியோ இளைய ஆண்டிபோலசை தன்னுடைய முதலாளி என்று நினைத்துக் கொண்டு தங்கள் மனைவி சாப்பிட அழைக்கிறார்; வீட்டுக்கு வாருங்கள் என்று அழைத்தான்.
இளைய ஆண்ட்டிபோலஸ்க்கு ஒன்றும் புரியவில்லை. ட்ரோமியோ தன்னிடம் ஏதோ விளையாடுகிறான் என்று நினைத்துக்கொண்டு அவனை கண்டபடி திட்டி அடித்து விட்டான்.
உடனடியாக வீட்டிற்குச் சென்ற ட்ரோமியோ நடந்ததையெல்லாம் மூத்த ஆன்ட்டிபோலசின் மனைவி அட்ரினியாவிடம் சொன்னான். அவள் அதைக் கேட்டதும் தன் கணவனுக்கு வேறொரு பெண்ணிடம் பிரியம் ஏற்பட்டுவிட்டது என்று முடிவு கட்டிக் கொண்டாள்.
அதோடு நிறுத்தாமல் அவள் உடனடியாக இளைய ஆன்ட்டிபோலசிடம் ஓடினாள். அவனைத் தன்னுடைய கணவன் என்று நினைத்துக் கொண்டு அவன் உடனடியாக சாப்பிட வர வேண்டும் என்று பிடிவாதம் பிடித்து வீட்டுக்கு அழைத்துச் சென்றாள்.
இந்த நேரத்தில் மூத்த ஆண்ட்டிபோலஸ் தன் வீட்டிற்குத் திரும்ப அவன் எத்தனை தூரம் கதவைத் தட்டியும் கூப்பாடு போட்டும் கதவு திறக்கப்படவில்லை. ஏனெனில் தங்கள் முதலாளி ஆன்ட்டிபோலஸ் ஏற்கனவே வீட்டுக்குள் சென்றுவிட்டார் என்று வீட்டு வேலைக்காரர்கள் நினைத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்கள் உண்மையில் பார்த்தது இளைய ஆன்ட்டி போலசைத் தான்.
அன்று நாள் முழுவதும் ஊரில் இப்படி ஏகப்பட்ட குழப்பங்கள். இளைய ஆன்ட்டிபோலஸ் செய்த தவறுக்கு மூத்த ஆன்ட்டிபோலஸ் சிறைப்படுவதும் அவனுடைய கோபத்துக்கு இவன் அனுபவிப்பதுமாக ஏக கலாட்டா. என்ன நடக்கிறது என்று யாருக்கும் புரியவில்லை.
இந்தக் குழப்பத்தில் இளைய ஆன்ட்டிபோலஸ் என்னென்னவோ உளறிக் கொட்ட அவனுக்கு பைத்தியம் பிடித்துவிட்டதாக முடிவு கட்டுகிறாள் அட்ரினியா. ஆகவே அவனை வீட்டுக்குள்ளேயே கட்டிப் போட்டு விடுகிறாள்.
அதேசமயம் இன்னொரு ஆன்ட்டி போலஸ் அங்கே வர கட்டிப்போட்டவன் தப்பித்து விட்டானோ என்று அவனுக்குப் பின்னே ஓடுகிறாள் அட்ரினியா.
இப்படி ஏகப்பட்ட குழப்பங்களுக்கு பின் ஒருவழியாக விஷயம் தெளிவாகிறது. ஏஜியனின் தண்டனை ரத்து செய்யப்படுகிறது.
அப்பாவும் மகன்களும் ட்ரோமியோக்களும் ஒன்று சேர்கிறார்கள் . அதே நேரத்தில் பல ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பில் காணாமல் போன அவருடைய அம்மாவும் கிடைத்து விடுகிறாள்.
Comments
Post a Comment
Your feedback