அழகிய வளையல் அணிந்த என் தோழியே,
இது உனக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி .
அலைகள் ஈரமாக்கிய கரை அது.
ஈர மணலைப் பார்த்தவுடன் நண்டுகள் அங்கும் இங்கும் ஓடி தன் கோணலான காலால் அந்த மணலில் பாதை வரைந்து வைக்கும்.
பளிச்சென இருந்த மணலில் குறுக்கும் மறுக்குமாக இப்போது கோடுகளாக இருக்கும்.
அடுத்து ஒரு அலை வரும்.
வந்து அத்தனை கோடுகளையும் அழித்து விட்டுப் போய்விடும்.
உன்னையும் அவனையும் பற்றி இந்தப் புன்னைச்சேரிப் பெண்கள் என்னவெல்லாமோ கதை கட்டினர்.
அவர்கள் சேரியில் வீசும் புலால் நாற்றம், அந்தக் கதைகளிலும் வீசும்.
இப்போது உன் திருமணத்துக்கு இரு வீட்டாரும் சம்மதம் சொல்லிய செய்தியோடு வந்திருக்கிறேன்.
அலைகள் அழித்து விட்டுப் போன கோடுகள் போல ஆகிவிட்டது அவர்கள் கட்டிய அத்தனை கதைகளும்.
அலை போல வந்தது திருமணச் செய்தி.
காணாமல் போய்விட்டன கட்டிய கதைகள்.
வளையோய்! உவந்திசின் விரைவுறு கொடுந் தாள்
அளை வாழ் அலவன் கூர் உகிர் வரித்த
ஈர் மணல் மலிர் நெறி சிதைய, இழுமென
உரும் இசைப் புணரி உடைதரும் துறைவற்கு
உரிமை செப்பினர் நமரே; விரிஅலர்ப்
புன்னை ஓங்கிய புலால்அம் சேரி
இன் நகை ஆயத்தாரோடு
இன்னும் அற்றோ, இவ் அழுங்கல் ஊரே?
(குறுந்தொகை)
Comments
Post a Comment
Your feedback