Skip to main content

Posts

Showing posts from January, 2023

இதுவல்லவா ஆசிரியர் மாணவர் உறவு

'தமிழ்த்தாத்தா' உ.வே.சா வின் ஆசிரியராகத் திகழ்ந்த  மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை தான் அந்த ஆசிரியர்.  மதுரையில் பிறந்தவர். அவரது பெற்றோர் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் பணிபுரிந்து வந்தனர். மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருவருளால் 6.4.1815 அன்று பிறந்த தங்கள்  குழந்தைக்கு  மீனாட்சி சுந்தரம் எனப்பெயர் சூட்டினர். சிறு வயதிலேயே இலக்கியங்கள் பலவற்றைக் கற்றுக் கொண்டார். பல ஆசிரியர்களிடம் பாடம் கேட்டு இலக்கணப் புலமையும் பெற்றார். மீனாட்சிசுந்தரத்தின் 15ம் வயதில் தந்தை சிதம்பரம் பிள்ளை காலமானார். அவர் தந்தை இறந்த ஆண்டின் பெயர் "விரோதி".  தந்தை மறைவின் வேதனையின் வடிகாலாக அவர் ஒரு வெண்பா பாடினார். "விரோதி" என்னும் சொல்லை இருபொருளில் அமைத்து அவர் எழுதிய வெண்பா, இளம் வயதிலேயே அவரின் கவிபாடும் ஆற்றலுக்குச் சான்று.  அவ்வெண்பா இது தான்.  முந்தை அறிஞர் மொழிநூல் பல நவிற்றும்  தந்தை எனைப் பிரியத் தான்செய்த- நிந்தை மிகும்  ஆண்டே விரோதியெனும் அப்பெயர் நிற்கே தகுமால்  ஈண்டேது செய்யாய் இனி. பல சிவத்திருத்தலங்களுக்கும் சென்று, அத்தலங்களைப் பற...

எத்தனை நடிகர்கள் இங்கிருந்து!

இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழில் சாதாரண மக்களின் உரைநடைத் தமிழாக விளங்குவது நாடகத் தமிழ்.   ஆனாலும் நாடகத் தமிழ் என்ற செடி வாடி வதங்கிக் கிடந்த காலம் அது. நாடகம் என்றாலே கிராமத்து மக்கள் பார்க்கும் தெருக்கூத்து என்ற நிலை தான் இருந்தது. அந்தக் காலகட்டத்தில் நாடகத்தின் பக்கம் எல்லோரையும் ஈர்த்த அந்த மாயத்தை நிகழ்த்திக் காட்டியவர் பம்மல் சம்பந்த முதலியார். எப்படி அவரால் இதைச் சாதிக்க முடிந்தது? நாடக நடிகர்கள் படிக்காதவர்கள் என்ற எண்ணத்தை மாற்ற தலை சிறந்த கல்வியாளர்களையும் மேதைகளையும் தம் நாடகங்களில் பிற நடிகர்களுடன் நடிக்க வைத்தார். கால நேரம் நிர்ணயிக்காமல் 5 மணி நேரம், 8 மணி நேரம் என்றெல்லாம் நடந்துகொண்டிருந்த நாடகத்தை, 3 மணி நேரம் என ஒரு கால அளவுக்குள் கொண்டுவந்து புதுமையைப் படைத்தார்.  மேலை நாடகங்கள், வட மொழி நாடகங்களை ஆழமாகப் படித்து மொழி நடை மற்றும் உரையாடல்களை வித்தியாசமான பாணியில் அமைத்தார். பல்வேறு மொழிகளில் நிகழ்ந்த சுவாரஸ்யமான சம்பவங்களைத் தொகுத்து தமிழ் நாடகமாக அரங்கேற்றி, உரையாடல் மூலம் சமூகக் கலாசார உணர்வுகளைப் பரப்பினார். புராணம் , சரித்திரம் என்ற அளவில் ...

கந்தகோட்டம் என்றும் பேசும்

ஜனவரி 30 வள்ளலார் நினைவு நாள். இராமலிங்க வள்ளலார் முருகப் பெருமான் மீது அளவில்லாத பக்தி கொண்டவர். சென்னை பாரிமுனை (பாரிஸ் கார்னர்) கந்தகோட்டம் முருகன் கோவில் தான் அவர் பெரும்பகுதி நேரம் இருந்த கோவில் வளாகம். அந்த கந்தகோட்டம் முருகன் மீது வள்ளலார் திருப்பதிகம் பாடியுள்ளார். திருஞானசம்பந்தரை வழிபடு குருவாகக் கொண்டவர். திருவாசகத்தில் திளைத்தவர். எந்த உயிருக்கும் துன்பம் தரக் கூடாது என்ற (ஜீவகாருண்யம்) கொள்கை கொண்டவர். பசிப்பிணி போக்குவது பெரும் புண்ணியம் என்று போதித்தவர். சைவ சமயத்தைச் சார்ந்த போதும் திருமாலைப் போற்றியவர். இறைவனை ஜோதி வடிவமாகத் தரிசித்தவர். ஆசிரியப்பா, வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்ற நான்கு பாவிலும்  பாடல் இயற்றும் திறம் பெற்றிருந்தவர். 192 சீர்களில் இவர் பாடிய  ஆசிரிய விருத்தம் இன்றும் தமிழ் இலக்கியத்துள் மிகப்பெரிய ஆசிரிய விருத்தம் என்ற பெருமையுடையது. அடி எண்ணிகையில் பெரிய ஆசிரியப்பாவும் இவர்  பாடியது தான். 1596 அடிகள். தொழுவூர் வேலாயுத முதலியார் இவருக்கு திருஅருட் பிரகாச வள்ளலார் எனப் பெயரிட்டதோடு இவர் பாடல்களைத் தொகுத்து  'திருவருட்பா' என்ற...

விவஸ்தை இல்லாமல் மறந்திருக்கும்

குடிகாரன் பேச்சு விடிந்தால் போச்சு என்பார்கள்.  எவ்வளவு பெருமை உடையவராக இருந்தாலும் குடிப்பழக்கம் உடையவர் பிறரது கேலிக்கும் அவமானத்துக்கும் உள்ளாவது இயல்பு.  குடித்த பின்பு நிலை தடுமாற்றம் ஏற்பட்டு மதிமயங்கும் நிலையே இந்த இழிநிலையை உருவாக்குகிறது.  தேறு கள் நறவு உண்டார் மயக்கம்போல  என்று குடிகாரர்களின் மயக்கத்தை கலித்தொகை விவரிக்கும். குடிப்பழக்கத்தால் வருகின்ற  இந்த மயக்கத்தையும் அது தரும் கெடுதலையும் அழிவினையும் பளிச்செனப் புரிய வைக்கும் வரிகள் இவை. மது மயக்கம்- அது  மதி மயக்கம்- ஒரு  வம்சத்தை அழிப்பது  மதுப்பழக்கம்  ராத்திரி முழுவதும் விழிக்க வைக்கும்  அவசரமான வேலையையும்- அட ஆகட்டும் போவென விலக்கி வைக்கும்  குடித்தபின் சொல்லும் வார்த்தைகளில்- வரும் கோபங்களை மனஸ்தாபங்களை  விடிந்ததும் யாரும் எடுத்துரைத்தால் அது விவஸ்தை இல்லாமல் மறந்திருக்கும். (கண்ணதாசன்)

Usage of Have

Have  Have I have done. I have finished. I have finished copying. He has gone there. He has not gone there. He has been there. I have been doing it. Have you done it? Hasn’t he gone yet?    - No, he hasn’t. Had he seen? – No, he hadn’t /Yes, he had. I should have finished correction. I shall have done it. I have got it. Have you got any? I haven’t got any. I haven’t got it. Have you any money? I had a book. Has he a house in Coimbatore? We have two hands. Have you any pain here? What have I in my hand? Has the book a red cover? Has she blue eyes or black eyes? He has not a good memory. Have you any fear of failing? I hadn’t any idea of what he meant. How many children have they? Has he a servant? Have you a dog? I have a dislike for non-veg dishes. I have a liking for chocolates. I have an idea. I have some good news. I have a reason for not doing this. Have some respect for your parents. I have...

மானல்லவோ கண்கள் தந்தது-புகழுவமை

புகழுவமை உவமைகளுள் ஒருவகை. உவமையைப் புகழ்ந்து உவமிப்பது புகழுவமை எனப்படும். அவள் அழகு தான். அந்த அழகு அவள் சொந்த அழகல்லவாம். அவள் கண்கள் மானிடமும் அவள் சாயல் மயிலிடமும் இதழ் தேனிடமும் அவள் அழகோ சிலையிடமும் இரவல் பெற்றவையாம். மருளும் கண்களால் மான்விழி அழகு. இப்படிஅவளின் அழகைக் கூற ஒவ்வொன்றாகப் பார்த்துப் பார்த்து உவமையை ஏற்கும் பொருளைவிட உவமை சிறப்பாக இருக்குமாறு புகழ்ந்துரைப்பதால் இது புகழுவமை.   மானல்லவோ கண்கள் தந்தது   மயிலல்லவோ சாயல் தந்தது   தேனல்லவோ இதழைத் தந்தது   சிலையல்லவோ அழகைத் தந்தது.   ( கண்ணதாசன்)     அங்கே ஒரு ஆண் ஒரு பெண்ணைப் புகழ்ந்துரைப்பதைப் போல இங்கே ஒரு பெண் அவன் அழகைப் புகழ்ந்துரை க் கிறாள். எப்படிப் புகழ்கிறாள் ? அவன் நல்ல கருப்பு நிறம்.   கருப்பு நிறம் வேறு; நல்ல கருப்பு நிறம் வேறு. அந்தச் சிறப்புக்கும் ஒரு புகழுவமை.   நாவல் பழத்திலே-நல்   காயாம் பூவிலே   காசுக் கருப்பிலே   கறுங்கருப்பு எங்க மச்சான்.   ( கண்ணதாசன்)   சும்மா கருப்பல...

சகலகலாவல்லி மாலை- பாடல் 1

சகலகலாவல்லி மாலை - பாடல் 1 ஓசை இன்பத்தை உணர, குமரகுருபரர் எப்படிப் பாடினாரோ அதே போல சீர்பிரிக்காமல் பாடல். வெண்டா மரைக்கன்றி நின்பதந் தாங்கவென் வெள்ளையுள்ளத்   தண்டா மரைக்குத் தகாதுகொ லோசக மேழுமளித்   துண்டா னுறங்க வொழித்தான்பித் தாகவுண் டாக்கும்வண்ணம்   கண்டான் சுவைகொள் கரும்பே சகல கலாவல்லியே.   பொருள் புரிந்து இன்புற சீர் பிரித்து அப் பாடல். வெண் தாமரைக்கு அன்றி நின் பதம் தாங்க என் வெள்ளை உள்ளத் தண் தாமரைக்குத் தகாதுகொலோ ? சகம் ஏழும் அளித்து உண்டான் , உறங்க , ஒழித்தான் பித்து ஆக , உண்டாக்கும் வண்ணம் கண்டான் சுவைகொள் கரும்பே , சகலகலாவல்லியே . பொருள் விளக்கம்   நின் பதம் தாங்க        -உன் திருவடியை ஏந்த தகாது கொலோ         -தகுதி இல்லையா ? சகம் ஏழும் அளித்து     -ஏழு உலகையும் காக்கும் (திருமால்) உண்டான் உறங்க       -உண்டு ஆலிலையில் உறங்க ஒழித்தான் பித்தாக     -சிவனோ பித்தன் போல    ஊழிக்      கூத்தாட      உண...

கவலைகள் பல விதம்...

  அருந்துவதற்குச் சுவையான பால் இருக்கிறது. ஆனால் அதில் கலந்து பருகுவதற்குச் சர்க்கரை இல்லையே என்று ஒருவனுக்குக் கவலை.  உண்பதற்குச் சோறில்லை, கஞ்சி தான் இருக்கிறது.ஆனால் அதில் கலக்கிக் குடிக்க உப்பு இல்லையே என்று கவலைப்படுகிறான் ஒருவன். காலில் முள் குத்தியதால் வலியால் துடிப்பவனுக்கு, தன் கால்களில் அணிந்து கொள்ளச் செருப்பு இல்லையே என்று கவலை. தங்கத்தால் செய்த கட்டிலில் படுத்துறங்குபவனுக்கு, அந்தக் கட்டிலின் மேல் விரித்துக் கொள்ள ஒரு பஞ்சு மெத்தை இல்லையே என்று கவலை. மாளிகையில் வாழ்ந்தாலும், மண் குடிசையில் வாழ்ந்தாலும் மொத்தத்தில் ஒவ்வொரு மனிதனுக்கும் கவலைப்பட ஏதோ ஒன்று இருந்து கொண்டே இருக்கிறது. அதில் சின்னக் கவலை பெரிய கவலை என்றெல்லாம் ஒன்றுமில்லை. இது ஒரு தனிப் பாடல். எழுதியவர் பற்றி எதுவும் தெரியவில்லை.  பாலுக்குச் சருக்கரை இல்லை என்பார்க்கும்,பருக்கையற்ற கூழுக்குப் போட உப்பு இல்லை என்பார்க்கும்,முள் குத்தித் தைத்த காலுக்குத் தோற் செருப்பு இல்லை என்பார்க்கும், கனக தண்டி மேலுக்குப் பஞ்சணை இல்லை என்பார்க்கும் விசனம் ஒன்றே !

அவர் உடல் நலம் எப்படி இருக்கிறது?

  சீதை அசோகவனத்தில் சிறையில்  மிகுந்த மனச்சோர்வுடன் வாடியிருக்கிறாள். இனி ராமனைக் காண முடியாதோ என்ற ஏக்கம் ஒரு புறம்! இராவணனின்   கொடுமைகள் ஒரு புறம்! அரக்கியரின் அச்சுறுத்தல்கள் ஒரு புறம்! எதையும் தெரிந்து கொள்ளமுடியாத பலத்த காவல். இனியும் உயிர் தரித்திருப்பதில் விருப்பமில்லாமல் இருக்கும் போது , அனுமன்   வந்து, தான் இராமனின் தூதன் என்று   அறிவிக்கிறான்.   சொன்னவுடன் மிகுந்த மகிழ்ச்சியுடன் அனுமனிடம் பே சு கிறாள். தன்னுடைய துன்பம் ,   இராவணன் செய்யும் கொடுமைகள் , அரக்கியரின் அச்சுறுத்தல்கள் எதைப் பற்றியும் கூறவில்லை. அனுமனிடம் சீதை கேட்டது இது தான் . இராமனின் உடல் நிலை எப்படி இருக்கிறது ?   நீ அறிவாயா ?   எய்து அவன்உரைத்தலோடும் , எழுந்து , பேர் உவகை ஏற , வெய்து உறஒடுங்கும் மேனி வான் உற விம்மி   ஓங்க , ' உய்தல் வந்துஉற்றதோ ?' என்று அருவி நீர் ஒழுகு   கண்ணாள் , ' ஐய ! சொல் , ஐயன் மேனி எப்படிக்கு அறிதி ?'  என்றாள். ( கம்ப இராமாயணம் ) பொருள் : எய்து அவன் உரைத்தலோடும் -   தான்   ...