உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசத்தெரியாதவர்களை அடையாளம் காண்பது எளிது.
அவர்கள் இப்போதெல்லாம் 'பிழைக்கத் தெரியாதவர்' என்ற வகைமைக்குள் வந்து விடுகிறார்கள்.
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசத்தெரிந்தவர்கள் சமயோசிதம் நிறைந்தவர்கள் என்று போற்றப்படும் நேரங்களும் உண்டு.
அப்படிப் பேசக் கற்றுக்கொண்ட அறிவை மாயூரம் வேதநாயகம் பிள்ளை "கள்ளஞானம்" என்று கூறுவார்.
கள்ளஞானம் வந்தால் என்ன செய்வோம்? அவர் கூறும் விளக்கம் இது.
உள்ளத்தின் அழுக்கை எந்நாளும் கழுவோம்
உடலைக் கழுவ நீரில் அடிக்கடி விழுவோம்
கள்ளத் தனமாகச் சந்நிதி முன்னே அழுவோம்
காசுக்கு நாயையும் கைகட்டித் தொழுவோம்.
இந்தக் "கள்ளஞானம்" இப்படி இருக்குமோ என்று யோசிக்க வைக்கும் வள்ளுவர் கூறும் இந்த விளக்கம்.
கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு
சொல்வேறு பட்டார் தொடர்பு.
பட்டினத்தார் இந்த நிலையை இன்னும் கொஞ்சம் விளக்கமாகச் சொல்வதைப் பார்க்கலாம்.
கையொன்று செய்ய
விழியொன்று நாட
கருத்தொன்று எண்ண
பொய்யொன்று வஞ்சக
நாவொன்று பேச
புலால் கமழும் மெய்யொன்று
சார
செவியொன்று கேட்க
விரும்பி யான் செய்கின்ற
பூசை எவ்வாறு கொள்வாய்
வினை தீர்த்தவனே!
இந்த மொத்த உணர்வுகளையும் கம்பனின் ஒற்றை வரி காட்டும்.
அத்தனை வேதங்களையும் படித்து விட்டு பிறன்மனை விருப்பில் சீதையைச் சிறைப்பிடித்து வந்ததைப் பொறுக்காத கும்பகர்ணன் இராவணனைப் பார்த்துச் சொல்லும் வார்த்தை இது.
"பேசுவது மானம் இடை பேணுவது காமம்"
அப்படிப் பேசுவதில் சிறந்தவன் இராவணன் மட்டுமா என்ன?
Comments
Post a Comment
Your feedback