ஊரறியோம் பேரறியோம்
உறங்கிவிட்ட கதை அறிவோம்;
சீரறிவோம் திறமறிவோம்
தியாகத்தின் சிறப்பறிவோம்!
ஆங்காங்கே மாண்டவர்கள்
ஆயிரம் பேர் என்பதனால்
அத்தனை பேர் வரலாறும்
அறிவதற்கு வசதி இல்லை!
தூங்காமல் தூங்கிவிட்ட
சுதந்திரப் பூங்கன்றுகளை
தாங்காமல் தாங்கி விட்ட
தாயகத்து மண்ணறியும்
வெள்ளி விழா கொண்டாடி
வீரர்களின் புகழ்பாடி
கள்ளமில்லா தியாகிகளின்
கதை பாடும் வேளை இது!
இன்றிங்கே வானுயர
எழுந்திருக்கும் மாளிகைக்கு
தன்னெலும்பைத் தந்தவர்கள்
சதை ரத்தம் கொடுத்தவர்கள்
அஸ்திவாரங்கள் என
அடியினிலே தூங்குகின்றார்!
மாளிகைக்கு மையிடுவோம்
மாணிக்கக் கதவிடுவோம்!
அத்தனையும் மாளிகைக்கே,
அலங்காரம் மாளிகைக்கே!
அஸ்திவாரங்களுக்கு
அலங்காரம் யார் புரிவார்?
'விழவேண்டும் வெள்ளையர்கள்;
வெங்களத்தில் நம்உடலும்
விழ வேண்டும்' என்பதன்றி
விழா வேண்டிச் சாகவில்லை;
தன்னை அழித்ததனால்
தாயகத்தைச் செழிக்க வைத்த
மன்னர் குலங்களவர்
மாணிக்கக் கற்களவர்!
பொன்னை மதித்திருந்தால்
பூமியையே மறந்திருப்பார்;
தன்னை மறந்ததனால்
தாயகத்தை நினைத்திருந்தார்!
தாயகத்து வீரருக்கோர்
சரித்திரமும் இல்லையன்றோ?
உண்மை வரலாற்றை
உளந்திறந்து பாடி வைத்து
பள்ளியிலே பிள்ளைகட்குப்
பாடமாய் வைப்பதற்கு
நல்லறிவு பெற்றவர்கள்
நாட்டிலே யாருமில்லை!
இன்னும் நாம் படிப்பதெல்லாம்
எலிசபெத் ராணியைத் தான்!
மண்ணாண்ட கிளைவு முதல்
மவுண்ட்பாட்டன் பிரபு வரை
படிக்கத்தான் பிள்ளைகளை
பள்ளிக்கு அனுப்புகிறோம்!
பகவத்சிங் வரலாறோ
பாபாஜி வரலாறோ
சுகதேவின் வரலாறோ
சூரியதேவ் வரலாறோ
அகமத்ஷா வரலாறோ
அறியோமே நண்பர்களே!
உண்ணுகிற சோறெடுத்து
உண்ணுங்கள்; உண்ணுங்கால்
எண்ணுகிற நெஞ்சிருந்தால்
எண்ணுங்கள் நல்லவரை!
-கண்ணதாசன்
Comments
Post a Comment
Your feedback