தமிழ் இலக்கியங்களில் உரை எழுதச் சிரமமான பாடல்களில் முதன்மையானவை சித்தர் பாடல்கள்.
உண்மையில் சித்தர்களைப் புரிந்து கொள்வது அதைவிடச் சிரமமானது.
ஆன்மிகவாதிகள் போலத் தோன்றும் அவர்கள் கோவிலாவது ஏதடா என்று கோவிலுக்குப் போவதை கடுமையாக விமர்சித்தவர்கள்.
அதே நேரம் சிவபக்தியில் திளைத்தவர்கள்.
சித்தர்களில் ஒருவர் அழுகணிச் சித்தர்.
அழகு அணிச் சித்தர் என்பது நாளடைவில் திரிந்து அழுகணிச் சித்தர் என்று ஆகிவிட்டது. இவருடைய பாடல்களில் அணி அழகாக அமைந்து இருப்பதால் அழகு அணிச் சித்தர் என்ற பெயர் இவருக்கு வந்ததாக கூறுவார்கள்.
அவரது பாடல்களில் புரிந்து கொள்ளக்கூடிய ஒரு எளிமையான பாடல் இது.
பையூரிலே யிருந்து பாழூரிலே பிறந்து
மெய்யூரில் போவதற்கு வேதாந்த வீடறியேன்
மெய்யூரில் போவதற்கு வேதாந்த வீடறிந்தால்
பையூரும் மெய்யூரும் என் கண்ணம்மா.
– பாழாய் முடியாதோ.
படிக்கும் போது உங்களுக்கு என்ன புரிகிறதோ அது தான் பொருள்.
கண்ணதாசனின் இந்தப் பாடல் புரிந்து கொள்ள உதவும்.
எந்த ஊர் என்றவனே
இருந்த ஊரைச் சொல்லவா
அந்த ஊர் நீயும் கூட
அறிந்த ஊர் அல்லவா
உடலூரில் வாழ்ந்திருந்தேன்
உறவூரில் மிதந்திருந்தேன்
கருவூரில் குடி புகுந்தேன்
மண்ணூரில் விழுந்து விட்டேன்
பையூரையும் பாழூரையும் முறையே கருவறை , பூமி எனக் கொள்ளலாம்.
மெய்யூரையும் வேதாந்த வீட்டையும்புரிந்து கொள்ள உங்கள் சொந்த ஞானம் தான் வழி.
இத்தனை ஊர்களையும் படைத்தானே ஒருவன், அவன் எந்த ஊரைச் சேர்ந்தவன்?
மண்ணில் ஆயிரம் மலர்க ளமைத்தவன்
மனதில் ஆயிரம் அலைக ளளித்தவன்
விண்ணில் ஆயிரம் மீன்கள் சமைத்தவன்
வெளியில் ஆயிரம் உயிர்கள் படைத்தவன்
எவ்வூ ருடையான் என்றீரோ?
எம்மூர் வாரும் சொல்கின்றேன்!
கண்ணதாசன்
Comments
Post a Comment
Your feedback