ஆடுவான் கோகுலத்தில்
ஆயர் மனைகளிலே
கூடுவான் கோபியரை
கொஞ்சும் இள வஞ்சியரை
பாடுவான் ஓடுவான்
பார்ப்பதற்கு விளையாட்டு
தேடுவார் கண்களுக்கோர்
திசையறிந்த தெய்வமவன்
அந்தியிலும் சந்தியிலும்
அர்த்த சாமத்தினிலும்
சிந்தையில் கண்ணனை நான்
சேவித்தே வாழுகிறேன்!
தந்தை தாய் மக்கள்
என் குலத்தின் உறவினர்கள்
முந்தைப் பிறவிகளில்
முன்றிருந்த பெரியோர்கள்
அத்தனையும் கண்ணனவன்
அவதாரம் என்றிருந்தேன்
தாயாக வந்தக்கால்
தலைமாட்டில் நிற்கின்றான்
நோயாக வந்தக்கால்
நோய் மருந்தும் ஆகின்றான்
பாரதத்தில் அன்று
பார்த்தனுக்குச் சொன்னதெல்லாம்
ஓரளவு எந்தன்
உள்ளத்தும் சொல்கின்றான்!
கையெடுத்து நானோர்
கணக்கை உரைத்து விட்டால்
கை கொடுத்தே என்னைக்
கரையேற்ற முந்துகிறான்!
கண்ணா என்றழைப்பார் முன்
காவலன் போல் வருகின்றான்!
காதலானாய் எந்தக்
கன்னியர்கள் நினைத்தாலும்
ஆதரவாய் வந்து
அவர் மடியில் சாய்கின்றான்!
"மாலே மணிவண்ணா
வாராய்" என வழைத்தால்
காலையிலே நம் வீட்டுக்
கதவைத் திறக்கின்றான்
வேராக நின்று
விழுது விட வைக்கின்றான்
தேராக நின்று
திருநாள் நடத்துகின்றான்
போராகத் தோன்றிப்
புயலாக மாறுகின்றான்
சீராக நடமாடும்
தென்றலுமாய் ஆகின்றான்
கண்ணன் என்னும் அந்தக்
கடலுக்குள் விழுந்துவிட்டால்
சின்னக் குழந்தைகட்கும்
நீந்தத் தெரிந்துவிடும்
காற்றாக வானாக
கனலாகப் புனலாக
ஊற்றாக உருவாக
ஒளியாக மழையாக
நேற்றாக இன்றாக
நாளைக்கும் நிலையாக
ஏற்றாத தீபத்தும்
எரிகின்ற ஜோதியவன்!
எல்லாமும் கண்ணன் தான்
எங்கேயும் கண்ணன் தான்
நல்லார்க்கே என்றும்
நாயகனே கண்ணன் தான்
கண்ணனை நான் நினைக்கின்றேன்
கவலையெல்லாம் மறக்கின்றேன்.
-கண்ணதாசன்
Comments
Post a Comment
Your feedback