Skip to main content

Posts

Showing posts from October, 2022

இப்படி இருக்கலாமா?

  யாரையும் குறைத்து மதிப்பிட்டு விடாதே. உன்னிடம் எந்த உதவியும் பெறாத ஒருவர் உனக்கு ஒன்றைக் கொடுக்க விரும்பினால் அவர் கை மேலேயும் உன் கை கீழேயும் இருக்குமாறு எதையும் வாங்காதே. உன்னைப் புண்படுத்தும் வகையில் நடந்து கொண்டாலும் கூட எளிய குடும்பத்தில் பிறந்தவர்களிடம் எப்போதும் கோபப்படாதே. பதற்றத்தில் இருக்கும் போது சொல்லக்கூடாத வார்த்தைகள் எதுவும் உன் வாயில் இருந்து வந்த விடாமல் கவனமாக இரு. எள்ளற்க, என்றும் எளியரென்று என்பெறினும் கொள்ளற்க, கொள்ளார்கை மேற்பட! உள்சுடினும் சீறற்க, சிற்றில் பிறந்தாரை! கூறற்க, கூறல்ல வற்றை விரைந்து! (நான்மணிக்கடிகை)  

எப்போது நாம் அழகாகிறோம்?

  நெல்லும் கரும்பும் விளைந்திருக்கும் போது  நிலம் அழகாக இருக்கும். பூத்திருக்கும் தாமரை குளத்துக்கு அழகு சேர்க்கும்  . நாணம், பெண்களுக்கு அழகு. போகிற இடத்தில் எல்லாம் நல்லதே நினைத்து நல்லதே செய்யும் போது நாம் அழகாகிறோம். நிலத்துக்கு அணியென்ப நெல்லும் கரும்பும்; குளத்துக்கு அணியென்ப தாமரை; பெண்மை நலத்துக்கு அணியென்ப, நாணம்; தனக்கணி தான்செல் உலகத்(து) அறம்.  (நான்மணிக்கடிகை)

நாராய் நாராய் செங்கால் நாராய்

  பல பாடல்களைப் படித்திருப்போம். சில பாடல்கள் பிரமிக்க வைக்கும். அந்த வகையில் இது ஒன்று. ஒரு நாரையின் அலகு இப்படித்தான் இருக்கும் என ஒரு பனங்கிழங்கைக் காட்டுவது முதலாவது பிரமிப்பு.  பனங்கிழங்கைப் பார்க்கும் போதெல்லாம் அந்த நாரையும் நினைவில் வருவதைத் தவிர்க்க முடியாது. 'நாரைகள் வடக்கில் இருந்து நெடுந்தொலைவு பறந்து கன்னியாகுமரிக்கு வலசை வரும் பறவைகள்' என்று இப்போது அறிஞர்கள் சொல்கிறார்கள்.  ஆனால் எத்தனையோ காலத்துக்கு முன் எழுதப்பட்ட இந்தப் பாடல் போகிற போக்கில் அதைச் சொல்வது  நம்மை வியக்க வைக்கும் இரண்டாவது விஷயம். இது ஒரு தனிப்பாடல்.  சக்திமுத்தம் என்ற ஊரைச் சேர்ந்த ஒரு புலவர் எழுதியது.  அதனால் அவரை சக்திமுத்தப்புலவர் என்று குறிப்பிடுகிறார்கள். மிகுந்த வறுமை. பொருள் தேடி வரலாம் என மனைவியைப் பிரிந்து மதுரைக்கு வருகிறார். இன்னும் பொருள் எதுவும் கிடைக்கவில்லை. அந்தத் துயரில் வீட்டில் காத்துக்கொண்டிருக்கும் தன் மனைவியை நினைத்து வருந்துகிறார். அப்போது ஒரு நாரையைப் பார்க்கிறார். அதனிடம் தன் மனைவிக்கு செய்தி சொல்லி அனுப்புவதாக இந்தப் பாடலைப் பாடுகிறார். நாரையே!...

Comedy of Errors-நகைச்சுவை

 ஒன்று போலவே இருக்கின்ற இரட்டையர்களை குறித்து வந்துள்ள பல நகைச்சுவை திரைப்படங்களை நமக்கு தெரியும்.  அந்த அத்தனை படங்களுக்கும் அடிப்படையாக ஷேக்ஸ்பியர் எழுதிய The  Comedy of Errors நாடகத்தைச் சொல்லலாம். அந்த நாடகத்தின் சுருக்கம் இது. (இடையில் குழப்பிக் கொள்ளாமல் கவனமாகப் படிக்கவும்.) பல ஆண்டுகளாக சைரக்யூஸ், எஃபீசஸ்   நகரங்களுக்கு இடையே கடுமையான போட்டி நிலவி வந்தது. இதனால் எஃபீசஸ் நகரில் ஒரு வினோதமான சட்டம் இருந்தது. சைரக்யூஸ் நகரைச் சேர்ந்த வியாபாரி யாராவது எஃபீசஸ் நகரில் தட்டுப்பட்டால் அவர்கள் உடனடியாகக் கைது செய்யப்படுவார்கள்.  ஆயிரம் மார்க் அபராதம் செலுத்தினால் அவர்களுக்கு மன்னிப்பு; இல்லாவிட்டால் மரணதண்டனை. இப்படியாக சைரக்யூஸ்காரர்களை வெறுத்துக் கொண்டிருந்த எஃபீசஸ் நகரில் ஏஜியன் என்ற வியாபாரி அலைந்து கொண்டிருந்தான். அவன் சைரக்யூஸ் நகரை சேர்ந்தவன் என்று தெரிந்ததும் கைது செய்து பிரபுவின் முன் நிறுத்தினார்கள். சைரக்யூஸ் நகரைச் சேர்ந்த நீ இங்கே ஏன் வந்தாய்? அப்படி வந்தால் மரண தண்டனை தான் என்று உனக்கு தெரியாதா? என்று கேட்டார் பிரபு. "நான் மரணத்துக்கு பயப்பட...

வில்லுக்கல்லவா இரையாகியிருப்பேன்!

அவள் கண்கள் அவ்வளவு அழகு. அவள் கண்ணைப் பார்த்து மீன் என நினைத்துக் கொண்டது ஒரு மீன் கொத்திப் பறவை.  அந்த மீனைப் பிடிக்க வேண்டும் என அவள் முகத்தை நோக்கிப் பறந்தது. அருகில் சென்ற பிறகு தான் கண்ணுக்கு மேல் உள்ள அவள் புருவத்தை அது கவனித்தது.  வில் போன்ற அவள் புருவத்தைப் பார்த்தவுடன் 'தன்னைக் கொல்லக் காத்திருக்கும் வில்லல்லவா இது' என்று வந்த வேகத்தில் திரும்பிப் பறந்து போய்விட்டது. கண்கயல் என்னுங் கருத்தினால் காதலி பின்சென்றது அம்ம சிறுசிரல்; -பின்சென்றும் ஊக்கி யெழுந்தும் எறிகல்லா ஒண்புருவங் கோட்டிய வில்வாக் கறிந்து. (நாலடியார்) கயல் - மீன்  சிறுசிரல் - சிறிய மீன் கொத்திப் பறவை ஊக்கியெழுந்து -ஆர்வத்தோடு முயன்று எறிகல்லா - அந்த கண் மீனை கொத்த முடியவில்லை ஒண்புருவங் - ஒளி பொருந்திய புருவங்கள் கோட்டிய - வளைந்த வில்வாக் கறிந்து -வில்லென்று அறிந்து

வள்ளிதிருமணம்

       வள்ளிதிருமணம் ,அரிச்சந்திரன், மதுரைவீரன், பவளக்கொடி சத்தியவான் சாவித்திரி ...இந்தப் பெயர்களை எல்லாம் கேட்கும்போது மனசுக்குள் மலரும் நினைவுகள் எழும்.   இவை எல்லாம் ஊர்க் கோயில் விழாக்களில் கலை நிகழ்ச்சிகளாக நடத்தப்பட்ட நாடகங்களின் பெயர்கள்.  ராஜபார்ட், பபூன், டான்ஸ் நடிகைகள், ஆர்மோனிய பெட்டிக்காரர் ,மிருதங்கம், டோலக் என பலரும் சேர்ந்த குழு தந்தது தான் அத்தகைய  நாடகங்கள். நாடகத்தின் திரைக்காக சீன்  கம்பெனிகள் நகரங்களில் இருக்கும். கோடையிடி குமுறல், இளையராணி என பல  பட்டங்களோடு அந்த நாடகக் கலைஞர்களின் பெயர்கள் நோட்டீசில் அச்சடிக்கப்படும். பல வண்ணங்களில் மட்டித் தாளில் அச்சடிக்கப்பட்ட அந்த நோட்டீசை பாக்கெட்டில் வைத்திருந்து பெருமையாக விளக்கம் சொல்வது அப்போதெல்லாம் வழக்கம்.   நாடகக் கலைஞர்களின் இரவு உணவு உள்ளூரில் உள்ள ஒரு பிரமுகர் வீட்டில் ஏற்பாடு செய்யப்படும்.  10 மணிக்கு மைதானம் நிரம்பி விடும். ஓரிரண்டு சாமி பாட்டுக்களை பெட்டிக்காரர் பாடுவார். பிறகு பபூன்  நகைச்சுவை, பாட்டு என தனியாவர்த்தனம் செய்வதில் அரைமணிநேர...

தாத்தா, பாட்டியிடம் இருந்து நான் கற்றுக் கொண்டவை

  R.Anisha IV – A                நான் தாத்தா பாட்டியிடம் இருந்து கற்றுக் கொண்ட ஒரு நல்ல குணம்   ஒழுக்கத்தையும் , பெரியவர்களிடம் மரியாதையாகவும் மற்றும் பணிவோடும் அன்பாக பேசவும் கற்றுக்கொண்டேன். புதிய நபர்களுடனும் , குடும்பத்தில் சொந்த பந்தங்களுடன் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்றும் கற்றுக்கொண்டேன்.   ச. தீக்சனா IV – A •              யாரிடமும் சண்டையிடக் கூடாது. •              அனைவரிடமும் பொறுமையுடன் நடந்து கொள்ள வேண்டும். •              அனுமதியின்றி மற்றவர் பொருளை எடுக்கக் கூடாது. •              வாங்கிய பொருளை உரியவரிடம் கொடுக்க வேண்டும். •              எந்த ஒரு வேலையையம் ஆர்வத்துடன் செ...