திருமணத்தன்று மணமகளுக்கு ஒப்பனைக்கு என தனியாக ஒரு நேரம் ஒதுக்கப்படுகிறது. இதெல்லாம் இந்தக்காலத்தில் வந்த பழக்கங்கள் என நினைத்திருப்போம். தமிழ் இலக்கியங்களில் இந்த ஒப்பனை குறித்தும் கூறப்பட்டுள்ளன. திருமண நாளன்று நடக்கும் இந்த ஒப்பனையை ‘மணக் கோலம் பூணுதல்’ என இலக்கியங்கள் கூறுகின்றன. ‘ பதுமாவதி வதுவையில் கோலஞ் செய்தல்’ என மணமகள் பதுமாவதிக்குச் செய்யப்பட்ட ஒப்பனை பெருங்கதையில் விரிவாகக் கூறப்படுகிறது. சிந்தாமணியில் மணமகளுக்கு ஒப்பனை புரிய ஒப்பனைக் கலையில் தேர்ச்சி பெற்றவர்கள் இருந்த செய்தி கூறப்படுகிறது. அதிலும் கூந்தல் அலங்காரம் விரிவாகக் காட்டப்படுகிறது. அலங்கார மாலை , விலாசினி என்ற ஒப்பனைக் கலையில் தேர்ந்தவர்கள் மணமகள் இலக்கணைக்கு ஒப்பனை செய்ததை நுணுக்கமாக விவரிக்கிறது. கம்ப ராமாயணத்தில் மேக் அப் குறித்து ‘கோலங்காண் படலம்’ எனத் தனியாக ஒரு படலமே உள்ளது. திருமணத்தன்று சீதைக்கு எப்படி ஒப்பனை செய்தனர் என்பதை பதினான்கு பாடல்களில் கம்பர் காட்டுகிறார். ...