நகைச்சுவையாய் எழுதுவது சற்றுக் கடினம். கதை எழுதும் பொழுது ஆங்காங்கே - பாயசத்தில் முந்திரிப் பருப்பு போல - நகைச்சுவை மிளிர எழுதிவிடலாம்.
அல்லது, நகைச்சுவைக்கென்றே ஒரு பாத்திரத்தைஉருவாக்கி புதினம் எங்கும் நடமாட விட்டு வாசகர்களைமுறுவல் பூக்க வைக்கலாம்.
ஆனால், கதை முழுவதுமே நகைச்சுவையாய்க் கொண்டு செல்வது சற்றுச் சிரமம்.
பாக்கியம் ராமசாமி எழுதிய அப்புசாமி சீதாப்பாட்டி கதைகள் அந்த வகை. அதில் வரும் சில வரிகள்.
இருட்டில், யாருக்கோ பயந்துகொண்டு ஓடிவந்து, ஒரு மதில் சுவரை ஏறிக் குதித்த அப்புசாமி, மறுபக்கத்தில், சுவரோடு ஒட்டி நான்கைந்து உறைகள் பதித்து ஆழப்படுத்தி சேறும் சகதியுமாக ஒரு பெரியகிணறு இருப்பதைஅறிந்திருக்கவில்லை.
மாடு முட்டி இரண்டு கைகளும் சேதாராமாகி, வேதனையோடு அப்புசாமி ஆஸ்பத்திரியில் கிடப்பது கண்டும் நமக்கு சிரிப்புத்தான் வருகிறது.
அப்புசாமிக்கு ஒன்றும் புரியவில்லை! "பொருவிளங்காஉருண்டை மாதிரி கெட்டியாக இருந்த சீதே ஏன் இப்படி ரவா லாடு மாதிரி உதிருகிறாள்?"
அப்புசாமி பேட் செய்த பந்து, "தில்லை வெளியில் கலந்த நந்தனார் ஜோதி மாதிரி”, மேலே போனது போனதுதான், திரும்பி வரவேயில்லை.
கோபம் கொண்ட பள்ளி ஆசிரியர் திருத்திய பரீட்சைப் பேப்பர் போலஅப்புசாமியின் உடலெங்கும் ‘எக்ஸ்' குறி பிளாஸ்டர்கள்.
முத்துவை, "நாலுதரம் டிகாஷன் இறக்கிய காப்பிப் பொடியைப் பார்ப்பதுபோல" அப்புசாமி பார்த்தார்.
"தண்டவாளம் விலகியது தெரியாமல், தான்பாட்டுக்கு வந்துகொண்டிருக்கும் ரயில் மாதிரி" அவர் அப்பாவியாக நர்சிங் ஹோமுக்குள் நுழைந்தார்.
"கச்சேரி செய்யத் துவங்கும் பாகவதர் பக்கவாத்தியக்காரர்களைப் பார்த்துஒரு ஸ்மைல் அடிப்பது போல " தன்னைச் சுற்றியிருந்த மாணவர்களைப் பார்த்து, "என்னஆரம்பிக்கலாமா?" என்றார்.
"கராத்தேக்காரன் நொறுக்கிய கள்ளிக்கோட்டை டைல்ஸ் மாதிரி" அப்புசாமி பீஸ்பீஸாக விழுந்து கிடந்தார்.
"ஆன்டெனா வில் மாட்டிக்கொண்ட ஆடிக்காத்தாடி மாதிரி", அப்புசாமி நாதமுனியின் கையில் தொங்கிக் கொண்டிருந்தார்.
"அட்ரஸ் இல்லாமல் ரயிலேற்றப்பட்ட கோணி மூட்டையைப் போல் தோற்றமளிக்கும் அரேபியாஎன்ற பரந்த தேசம்" பற்பல சிறு நாடுகளைக் கொண்டது.
"மாவு தீர்ந்ததும் மாவுமிஷின் போடும் சத்தம் மாதிரி" வயிற்றில் ஒரே இரைச்சல்.
"மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மாமூல் வாங்கிப் பழகிய சாட்சி போல" ரசகுண்டு மிகுந்தஎச்சரிக்கையுடன் பதிலளித்து வந்தான்.
ஒருத்தன் முகம், "இடுக்கியால் பிடித்து இறக்கிய ஈயச் சொம்பு மாதிரி" கோணாமாணாவென்று அதுங்கியிருந்தது.
"முன் ஜாமீன் வாங்குவதற்குள் கைதான பிரமுகர் மாதிரி"
"வாலிக்குப் பயந்து ஓடிய சுக்ரீவன் மாதிரி", அத்தை வீட்டுக்கு ஓடிவிட்டார்.
" மேலிடத்திற்குப் பயந்துகொண்டு கொஞ்ச நாள் ஊழல் செய்யாத அரசியல்வாதி போல
"சோழமண்டல நவீன ஓவியர் வரைந்த"கோணா மாணா கோட்டுச் சித்திரம் மாதிரி" அப்புசாமி படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தார்.
"திவாலான கட்சிக்கு கட்டாயப் படுத்தி நிறுத்தி வைக்கப்பட்ட வேட்பாளர் மாதிரி" மனசேஇல்லாமல் அப்புசாமி புறப்பட்டார்.
"புழலேரி காய ஆரம்பித்தால், அரசியல்வாதிகளுக்கு கிருஷ்ணா நதி ஞாபகம் வருகிற மாதிரி"
ரசிக்கத் தக்க உவமைகள் இது போல இன்னும் நிறைய உண்டு. சொல்லிக் கொண்டே போகலாம்.
நகைச்சுவையை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு, சொல்லுக்குச்சொல், வரிக்கு வரி நகைச்சுவையையே அளித்து வாசகர்களை மகிழ்வித்தவர் ஜ.ரா. சுந்தரேசன். அதாவது பாக்கியம் ராமசாமி என்ற புனை பெயரைக் கொண்ட ஜ.ரா. சுந்தரேசன்.
(அமுதசுரபி ஜூலை 2021)

Proves your interest in Tamil ...
ReplyDelete