ஒரு நாள் உண்மையும் பொய்யும் இருவரும் ஒன்றாகச் சேர்ந்து ஆற்றில் குளிக்கப் போனார்களாம்.
முதலில் குளித்துவிட்டு ஆற்றை விட்டு வெளியே வந்த பொய் ஆற்றின் கரையில் இருந்த உண்மையின் உடைகளை எடுத்து போட்டுக்கொண்டு போய்விட்டது.
சிறிது நேரம் கழித்து ஆற்றை விட்டு வந்த உண்மை தன்னுடைய உடைகள் ஆற்றங்கரையில் இல்லாததைப் பார்த்துத் திடுக்கிட்டது.
ஆற்றங்கரையில் கிடந்த பொய்யின் உடைகளைப் பார்த்த உடனே அது புரிந்து கொண்டது, தன்னுடைய உடைகளை பொய் தான் மாற்றி அணிந்து கொண்டு போயிருக்கிறது என்று.
ஆனாலும் கூட பொய்யின் உடையை அணிந்து கொள்ள விரும்பாமல் ஆடையே இல்லாமல் ஆற்றங்கரையில் இருந்து உண்மை கிளம்பிச் சென்றதாம். இன்றும் உண்மை எல்லாப் பக்கமும் பிறந்த மேனியாகத் தான் சுற்றிக் கொண்டு இருக்கிறதாம்.
இப்படி ஒரு புராணக்கதை.
இதிலிருந்து வந்ததுதான் naked truth என்ற ஆங்கிலப் பயன்பாடு.
அதாவது பட்டவர்த்தனமான உண்மை.
உண்மையின் உடைகளை போட்டுக் கொண்ட பொய்க்கு எப்போதுமே ஒரு குற்ற உணர்ச்சி, யாராவது அது தன்னுடைய உடை அல்ல என்று கண்டுபிடித்து விடுவார்களோ என்று. அதனால் பொய் யாரைச் சந்தித்தாலும் இது என்னுடைய உடை என்பதை மறைமுகமாகக் கூறுவது வழக்கம்.
அதனால் தான் பொய் சொல்வதற்கு முன்பு உண்மையாகத் தான் சொல்கிறேன், நெஜமாலுமே சொல்கிறேன் என்றெல்லாம் சொல்கிறோம். குறிப்பாக குழந்தைகள் பொய் சொல்லும் அழகே தனி. பொய் சொல்வதற்கு முன்பாக உண்மையாகத் தான் சொல்கிறேன் என்று ஆரம்பிப்பது தான் குழந்தைகளின் வழக்கம்.
ஒரு சினிமாவில் "மாப்பிள்ளை அவர் தான் ஆனால் அவர் போட்டிருக்கிற சட்டை மட்டும் என்னுடையது" என்று ஒரு டயலாக் வரும்.
ஒன்று மட்டும் நமக்கு நிச்சயமாகத் தெரிகிறது. உண்மைக்கு ஆடை இருக்கிறதோ என்னமோ தெரியாது. ஆனால் பொய் தினமும் புதிய புதிய ஆடைகளை அணிந்து கொண்டு வருகிறது.
அதனால் தான் "கலர் கலராப் பொய் சொல்றான்" என்று பேச்சு வழக்கில் குறிப்பிடுகிறார்கள். இதில் குறிப்பிடும் 'கலர் கலரா' என்ற சொல் பொய் அணிந்து வரும் ஆடைகளைத் தான் என்பது சொல்லாமலேயே புரியும் தானே?
Comments
Post a Comment
Your feedback