அவள் தன் தோழியிடம் சொல்கிறாள்.
குளத்தில் பூத்த நெய்தல் மலர் போன்ற கண்ணை உடையவளே! என் தோழியே! உனக்குத் தெரியுமா?
ஒருநாள் ஓடிய மானைத் தேடிக்கொண்டு வருபவன் போல ஒருவன் வந்தான். கையில் வில்லும் வைத்திருந்தான். என்னை உற்றுப் பார்த்தான். அவன் கண்கள் என்னவோ சொல்ல முயன்றன.
ஆனால் அவனுக்கு என்னவோ நாணம் போல!
தன் காதலை வாயால் சொல்லமுடியாமல் திரும்பிப் போய்விட்டான். அந்த ஒரு நாள் மட்டுமல்ல. அதன் பின் வந்தான். ஆனால் அவனுக்கு வாய் வரவில்லை. அப்படியே போய்விட்டான்.
இப்போதெல்லாம் அவனை நினைத்து எனக்குத் தூக்கம் வருவதில்லை. மீண்டும் எப்போது வருவானோ என அவனை நினைத்துக்கொண்டே இருக்கிறேன். அவனோ தூரத்தில் இருக்கிறான்.
அவனுக்கோ என் கண்ணைப் பார்த்துச் சொல்லமுடியாத அளவு வெட்கம். ஆண் அவனே இவ்வளவு வெட்கப்படும்போது நான் போய் என் காதலை அவனிடம் சொல்ல முடியுமா?
அவனுக்கும் சொல்ல முடியாமல் வெட்கம். நானும் இப்படியே இருந்தால் அவன் என்னைக் காண வராமல் போய்விடவும் கூடும் என்று எண்ணினேன். இனி நான் தான் துணிச்சலாக ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்துக்கொண்டேன்.
ஒருநாள் தினை வயலில் நான் கிளிகளை விரட்டிக்கொண்டிருந்தேன். அப்போது அருகில் ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருந்தேன்.
அப்போது அவன் அங்கு வந்தான். நான் துணிச்சலாக
"இந்த ஊஞ்சலைக் கொஞ்சம் ஆட்டிவிட முடியுமா" என்றேன்.
சரி என்று சொல்லிவிட்டு அவன் ஆட்டிவிட்டான். எதுவும் சொல்லாமல் ஊஞ்சல் ஆட்டிக்கொண்டிருந்தான். நான் வேண்டுமென்றே கீழே விழுந்தேன்.
அவன் பதறிப் போய் நான் கீழே விழாமல் பிடித்துக்கொண்டான். ஆனாலும் அவன் பேசட்டும் என்று நான் மயக்கிக் கிடப்பது போல இருந்தேன். அவனோ மௌனமாக நின்றுகொண்டிருந்தான்.
"ஒன்றும் இல்லை. பயப்படாமல் வீட்டுக்குப் போ" என்று சொல்வதற்காக நான் எப்போது கண்ணைத் திறப்பேன் என்று காத்துக் கொண்டு நிற்கிறான்.
இப்படியாக அவன்!
கய மலர் உண்கண்ணாய்! காணாய்: ஒருவன்
வய மான் அடித் தேர்வான் போல, தொடை மாண்ட
கண்ணியன் வில்லன், வரும்; என்னை நோக்குபு,
முன்னத்தின் காட்டுதல் அல்லது, தான் உற்ற
நோய் உரைக்கல்லான் பெயரும்மன், பல் நாளும்; 5
பாயல் பெறேஎன், படர் கூர்ந்து, அவன்வயின்
சேயேன்மன் யானும் துயர் உழப்பேன்; ஆயிடைக்
கண் நின்று கூறுதல் ஆற்றான், அவனாயின்;
பெண் அன்று, உரைத்தல், நமக்காயின்; ‘இன்னதூஉம்
காணான் கழிதலும் உண்டு' என்று, ஒரு நாள், என் 10
தோள் நெகிழ்பு உற்ற துயரால் துணிதந்து, ஓர்
நாண் இன்மை செய்தேன்: நறுநுதால்! ஏனல்
இனக் கிளி யாம் கடிந்து ஓம்பும் புனத்து அயல்,
ஊசல் ஊர்ந்து ஆட, ஒரு ஞான்று வந்தானை,
‘ஐய! சிறிது என்னை ஊக்கி’எனக் கூற, 15
தையால்! நன்று! என்று அவன் ஊக்க, கை நெகிழ்பு
பொய்யாக வீழ்ந்தேன், அவன் மார்பின்; வாயாச் செத்து,
ஒய்யென ஆங்கே எடுத்தனன் கொண்டான்; மேல்
மெய் அறியாதேன் போல் கிடந்தேன்மன்; ஆயிடை
மெய் அறிந்து ஏற்று எழுவேனாயின், மற்று ஒய்யென, 20
ஒண்குழாய்! செல்க’எனக் கூறி விடும் பண்பின்
அங்கண் உடையன் அவன்.
(கபிலர் -கலித்தொகை 37)
Comments
Post a Comment
Your feedback