ஒருவரின் குறையைச் சுட்டிக்காட்டுவதாக இருந்தாலும் நல்லதாக நாலு வார்த்தை சொல்லிவிட்டு அதன் பிறகு குறையைச் சுட்டிக்காட்டுவது ஒரு நல்ல உத்தி.
வெறும் தவறை மட்டும் சுட்டிக்காட்டி 'அறிவுரை அல்லது விண்ணப்பம் ' என்று சொன்னால் யாரும் காதுகொடுத்துக் கேட்க மாட்டார்கள். நல்லதாகச் சொன்ன அந்த வார்த்தைகள் நாம் சொல்லும் குறையையும் கவனித்து சரிசெய்து கொள்ள வைத்துவிடும்.
இந்த உத்தியை சிவபெருமானிடம் பயன்படுத்துகிறார் திருஞானசம்பந்தர்.
வாழ்க்கையில் நான் துன்பப்பட நேரிட்டாலும்,வயது முதிர்வினால் உடல் தளர்ந்தாலும், முன்வினைப்பயனால் கொடுமையான நோய்கள் என்னைவிட்டு நீங்காமல் தொடர்ந்து வந்து வாட்டினாலும் உன் திருவடிகளை தொழுது வணங்குவேன்.
பாற்கடலில் அன்று அமுதத்துடன் சேர்ந்து தோன்றிய ஆலகால விஷத்தை கழுத்தினில் அடக்கி, எல்லோரையும் காத்த வேத நாயகனே!
இதுதான் உன் அடியேனை நீ ஆட்கொள்ளும் முறையா? பூஜைக்கான பொருளை நீ எனக்கு அளிக்கவில்லையே! அது தான் நீ திருவருள் காட்டும் அழகா?
இடரினும் தளரினும் எனதுறுநோய்
தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்
கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே
இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.
திருஞானசம்பந்தர்
(மூன்றாம் திருமுறை)
Comments
Post a Comment
Your feedback