புண்ணியம் செழிப்பதாக
பொய்மைகள் தொலைவதாக
கண்ணியம் தழைப்பதாக
கடமைகள் உயர்வதாக
எண்ணிய நடப்பதாக
இனிய பாரதத்தில் மீண்டும்
கண்ணியன் கீதைச் செல்வன்
கண்ணனே பிறப்பானாக!
கற்பெனும் பெருமை ஓங்க
கவினுரும் தாய்மை வாழ
அற்புதக் கவிதை தோன்ற
ஆனந்த இல்லம் காண
நற்பெரும் தவத்தராய
நங்கைமார் உயர்ந்து வாழ
கற்புயர் நாட்டில் மீண்டும்
கண்ணகி பிறப்பாளாக!
தந்தையைப் பணிந்து போற்றி
தாய்மையை வணங்கி ஏற்றி
சிந்தையைச் செம்மையாக்கி
செயல்களை நேர்மையாக்கி
செந்தமிழ் நாட்டோர் வாழ்வில்
செல்வங்கள் குவிந்து காண
சிந்தையால் உயர்ந்து நின்ற
ஸ்ரீராமன் பிறப்பானாக!
கணவனே தெய்வம் என்றும்
காடெல்லாம் சோலை என்றும்
அணிமணி வேண்டேன் என்றும்
அவனையே தொடர்வேன் என்றும்
பணிவோடு பண்பும் கொண்டு
பாவலர் ஏற்ற வாழும்
தணலெனும் கற்பின் செல்வி
ஜானகி பிறப்பாளாக!
ஒவ்வொரு பிறப்பும் இங்கே
உயர்ந்ததாய்ப் பிறப்பதற்கு
செவ்விதழ் நீலக் கண்ணாள்
திருமகள் தமிழ் மீனாட்சி
செவ்விதின் அருள்வாளாக
தேசத்தை உயர்த்துகின்ற
நல்வழி யாவும் கண்டு
நடக்கட்டும் தமிழ்ப் புத்தாண்டு!
(கண்ணதாசன்)
Comments
Post a Comment
Your feedback