கத்தி கையை அறுத்துவிட்டது.
எது செய்தது? கத்தி.
என்ன செய்தது? அறுத்துவிட்டது.
எதைச் செய்தது? கையை.
இது நமக்கு எளிதாகப் புரிந்து கொள்ள முடிகிற ஒரு வாக்கியம்.
இதில் வருகிற கத்தி எப்படிப்பட்டது என விவரித்தால் அது அடை.
அதாவது கூர்மையான கத்தி, கூர்மழுங்கிய கத்தி என்றெல்லாம் விவரித்தால் அது கத்திக்கான அடை.
கத்தி போலவே 'கையை' என்பதற்கும் கூடுதல் செய்தி தரப்படலாம்.அதாவது வலக்கையா இடக்கையா என்பது போல.
இதுவும் அடை தான்.
'அறுத்துவிட்டது' என்பதோடு நிறுத்தாமல் ஆழமாக அறுத்துவிட்டது, லேசாக அறுத்துவிட்டது என்றுகூடக் கூறலாம்.
இவையும் அடை தான்.
கத்தி கையை லேசாக அறுத்துவிட்டது.
கத்தி வலக்கையை லேசாக அறுத்துவிட்டது.
கூர்மையான கத்தி வலக்கையை லேசாக அறுத்துவிட்டது.
இங்கு, கூர்மையான என்பது கத்திக்கு அடை.
வலக்கை என்பது கையோடு சேர்ந்த அடை.
லேசாக என்பது அறுத்துவிட்டது என்பதன் அடை.
இப்படி ஒவ்வொன்றுடனும் ஒரு சொல் சேர்த்துச் சொல்வது அடைச் சொல் என்று கூறப்படும்.
இதைக் கவனித்துப் பாருங்கள்.
'போன வாரம் சேலம் போயிருந்தபோது வித்தியாசமாக இருக்கிறது என்று ஒரு கத்தி வாங்கினேன் என்று சொன்னேனல்லவா அந்தக் கத்தி' என கத்திக்கு இவ்வளவு நீள விபரம் சொன்னால் அது அடைத்தொடர்.
கத்திக்குச் சொல்லப்படும் நீளமான அடைத்தொடர் போலவே கைக்கும் அறுத்துவிட்டதுக்கும் நீள அடை சேர்த்தால் இப்போது பல பேருக்கு 'கத்தி கையை அறுத்துவிட்டது ' என்ற செய்தியைப் புரிந்து கொள்ள முடியாமல் போகலாம்.
பழந்தமிழ் இலக்கியங்களின் பெருமையே இந்த அடைத்தொடர்கள் தான்.
வெறுமனே கத்தி என்று சொன்னால் அந்தக் கத்தியை visualise செய்ய நம் அறிவு முயற்சிப்பதில்லை.
சிவப்புக் கைப்பிடியுடன் நுனியில் வெள்ளைக் கோடு வரையப்பட்ட பளபளப்பான கத்தி என்றவுடன் கத்தியை நம் கற்பனையில் பார்க்க முயற்சிக்கிறோம்தானே.
இப்படி யோசிக்க வைப்பது தான் சங்கப் பாடல்களின் சிறப்பு. இந்த அடைகளால் தான் அந்தக் காலத்திய செய்திகள் நமக்குக் கிடைக்கின்றன. அந்தப் பாடல்கள் இன்றும் உயிர்ப்புடன் இருக்க இந்த அடைகள் தான் காரணம்.
இப்படிச் சொல்லும் அந்த அடை விபரங்களோடு சொல்ல வந்த செய்தியை நேராகச் சொல்லாமல் மறைத்துச் சொல்லும் உத்தி ஒரு தனி அழகு.
நேராக ஒரு விஷயத்தைச் சொல்ல முடியாத போது இப்படி அடைவழியே சொல்பவரின் மனத்தில் என்ன இருக்கிறது என்பதைக் காட்ட இந்த உத்தி மிகவும் பயன்படுகிறது.
அப்படிச் சொல்லும் போது அதை உள்ளுறை, இறைச்சி என்றெல்லாம் நுட்பமாகச் சொல்லுவார்கள்.
இந்த அடை ஏன் இங்கு வருகிறது? என யோசிக்கும்போது அதுவரை நமக்குத் தெரியாத ஒரு புதிய காட்சி பளீரெனத் தெரியும்.
பனிக்காலம்
மாலை நேரம்
தனிமையில் அவள்
தனிமை போக்க வருகிறது
அவன் தேர்.
ஏதோ வேலையாக பல நாட்கள் வெளியூர் போய்விட்டு அவன் ஊருக்குத் திரும்பும் காலம். அது பனிக்காலம். மாலைப் பொழுதில் அவன் தேர் வீட்டுக்குத் திரும்புகிறது. அவனைப் பிரிந்த தனிமையில் வீட்டில் அவள் காத்திருக்கிறாள். இது தான் செய்தி.
இதை ஒரு குறுந்தொகைப் பாடல் இலக்கிய அழகுடன் சொல்கிறது.
அந்தப் பாடல் எது?
தேடிப் பார்க்கலாமா!
Comments
Post a Comment
Your feedback