சில பாடல்கள் படித்தவுடன் மனசுக்குள் ஒட்டிக்கொள்ளும். நாம் மனப்பாடம் செய்வதற்காகவே எழுதிய பாட்டு போலவே தோன்றும். முழுக் கவனத்துடன் மூன்றுமுறை படித்தால் முதல் இரண்டு வரிகள் மனப்பாடம் ஆகிவிடும். அதன் பின் கடைசி இரண்டு வரிகளை இரண்டு முறை படிக்க மொத்தப் பாடலும் மனப்பாடமாகியிருக்கும்.
உயர்வற உயர்நலம் உடையவன் யவனவன்
மயர்வற மதிநலம் அருளினன் யவனவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி யவனவன்
துயரறு சுடரடி தொழுதெழென் மனனே.
(நம்மாழ்வார்)
இந்தப் பாட்டு தான் நம்மாழ்வார் எழுதிய திருவாய்மொழியில் முதல் பாடலாக உள்ளது. எந்தக் கடவுளின் பெயரையும் சொல்லாமல் 'அவன்' என்ற சொல்லை மட்டும் சொல்லுவது இந்தப் பாட்டின் சிறப்பு.
அவன் என்பது அவரவர்களின் இஷ்ட தெய்வம்.
பாட்டு சொல்லும் பொருள் இது தான்.
மனமே!
தனக்கும் மேலான ஒருவர் இந்த உலகில் இல்லை என்று கூறும்படியானவன் அவன்.
உயர்ந்த நற்குணங்கள் கொண்டவன் அவன்.
அறியாமை நீங்குமாறு தெளிவாகச் சிந்திக்கும் திறனை எனக்குத் தந்தவன் அவன்.
தூக்கம், சோம்பேறித்தனம், மறதி ஆகியவை கொஞ்சம்கூட இல்லாத தேவர்களின் தலைவன் அவன்.
அத்தகைய பெருமை வாய்ந்த அவனுடைய ஒளிபொருந்திய
திருவடி எல்லாத் துயரையும் துடைக்கும்.
அந்தத் திருவடிகளை வணங்கி நீ வழிபடு !
Comments
Post a Comment
Your feedback