ஒரு வாழைப் பழத்தை உரித்து அந்தப் பழத்தைத் தொட்டியில் போட்டுவிட்டு அதன் தோலைத் தின்று சந்தோஷப்படுவோமா என்ன?
ஒரு பாட்டு என்பதும் வாழைப் பழம் போலத் தான். சில நேரங்களில் உரித்தே கொடுப்பார்கள். அதனால் நாம் அப்படியே சாப்பிடலாம். சில நேரம் நாம் உரித்த பின் தான் சாப்பிட வேண்டும். அது தோலா பழமா என்று பார்த்துவிட்டு அப்புறம் தான் தின்னத் தொடங்க வேண்டும்.
அப்படி தோலோடு தந்த ஒரு பழம் இது.
பார்ப்பான் அகத்திலே பாற்பசு ஐந்துண்டு
மேய்ப்பாரு மின்றி வெறித்துத் திரிவன
மேய்ப்பாரும் உண்டாய் வெறியும் அடங்கினால்
பார்ப்பான் பசுஐந்தும் பாலாய்ப் பொழியுமே.
(திருமூலர்)
தோலை முதலில் பார்க்கலாம். அதாவது மேலே தெரிகிற பொருள் என்ன என்று பார்க்கலாம்.
அந்தணனின் கடமை கடவுளை வழிபடுவது தான். கடவுள் விக்ரகத்தை அபிஷேகம் செய்து வழிபட அவனுக்குப் பால் வேண்டும். அவன் செய்யும் யாகங்களுக்கு நெய் வேண்டும். பாலுக்கும் நெய்க்கும் அவன் என்ன செய்வான்? இந்தத் தேவைகளுக்காக பால் தரும் பக்குவத்தில் உள்ள பசுமாடுகளை வளர்ப்பான். அப்படி ஒரு அந்தணன் வீட்டில் ஐந்து பசுமாடுகள் உள்ளன. ஆனாலும் கோவில் வேலைகளைப் பார்த்துக்கொண்டு அவன் பசுமேய்க்க முடியாது. அவனுக்கு பசு மேய்த்துத் தர யாரும் இல்லாததால் பால் கறந்தபின் பசுக்களை அவிழ்த்து விட்டு விடுவான். அப் பசுக்கள் தம் மனம்போன போக்கிலே சுற்றிக் கொண்டிருக்கின்றன. ஒழுங்காகத் தீனி தின்னாமல் போனதால் ஒழுங்காகப் பால் கறக்கவுமில்லை. மேய்க்க மட்டும் ஒரு ஆள் இருந்து சரியாக மேய்த்தால்அந்தப் பசுக்கள் நன்றாகப் பால் கொடுக்கும்.
திருமூலர் திருமந்திரத்தில் எப்படிப் பால் கறப்பது என்றா சொல்லுவார்?
உள்ளே இருக்கும் பழத்தைப் பார்க்க வேண்டும்.
சரி எது பழம்?
பார்ப்பான் என்பது இயல்பிலேயே புலன்களை கட்டுப்படுத்தும் அல்லது கட்டுப்படுத்த விரும்பும் எவரையும் குறிக்கும். ஐந்து பசுக்கள் என்பது ஐம்புலன்களைக் குறிக்கும். விரும்பியபடியெல்லாம் மனம் அலைபாயாமல் இருக்க எதைப் பார்ப்பது, எதைக் கேட்பது, எதைச் சுவைப்பது ஆகிய ஒவ்வொன்றிலும் கட்டுப்பாடு அவசியம். விரும்பியதைப் பார்த்து, கிடைத்ததை எல்லாம் தின்று தீர்க்க ஆசை என்பது தானாய் அலையும் பசுமாடுகள் போல...
அது பசுமாடு தான் என்றாலும் பாலுக்காகாதே. அதாவது உருவம் தான் மனிதன் போல ... உண்மையில் அவன் மனிதன் ஆக மாட்டான்.
இந்தப் புலனடக்கம் ஆன்மீக வாழ்க்கைக்கு அடிப்படை என்பது தான் பாடல் தரும் பழம்.
நாம் தின்னப் போவது தோலா? பழமா?
மனம் போன போக்கில் எதை வேண்டுமானாலும் தின்னலாம். நம் விருப்பம் தானே!
Comments
Post a Comment
Your feedback