அது ஒரு நிலாக்காலம்
"அப்போதேல்லாம் இந்த மாதிரி மொபைல் போன், வீடியோ கேம்ஸ் எல்லாம் இல்லை. ஸ்கூல் விட்டு வந்த பிறகு மண்ணுல தான் விளையாடுவோம். வாரத்துல ஒரு நாள் நீச்சல் ...அதெல்லாம் ஒரு காலம். அந்த நாளெல்லாம் இனி வரவா போகிறது."
பழைய நினைவுகளில் மனம் மலரும் போது இப்படிப்பேசுவதைப் பார்த்திருப்போம்.
கடந்தகால நினைவுகள் பசுமையாக இருந்தால் “அது ஒரு நிலாக்காலம்” என்று நினைவுகளை அசைபோட்டு ஏக்கத்துடன் நாம் இப்படிச் சொல்வதுண்டு.
நிலா எப்படி இந்த நினைவுகளோடு வந்து சேர்ந்துகொண்டது?
நிலா என்றும் உள்ளது தான்.
அன்று நிலா இருந்தது. அந்த நிலா வெளிச்சத்தில் ஓடி விளையாட தெருவெங்கும் குழந்தைகள் இருந்தனர். மகிழ்ச்சியும் இருந்தது.
இன்றும் அந்த நிலா அப்படியே இருக்கிறது ... அந்த இனிய நாட்கள் தான் இல்லை.
இப்படி எங்கெல்லாம் பழைய நினைவுகள், ஏக்கங்கள் இருக்கின்றனவோ அங்கெல்லாம் நிலாவை நினைக்காமல் இருக்கமுடியாது போல.
கண்ணதாசன் வரிகள் கூட,
அன்றொரு நாள் இதே நிலவில்
அவர் இருந்தார் என் அருகே...
என்று அந்த பழகிய காலத்தில் கொண்ட நினைவுகளை அசை போடும்.
அந்தக் காலத்தில் பாரி மன்னன் மூவேந்தர்கள் முற்றுகையில் இறந்த பிறகு அவன் மகள்கள் கையறு நிலையில் பாடும் போதும் இந்த நிலாவை நினைத்துப் பாடுவதாக ஒரு பாடல்.
அற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவின்
எந்தையும் உடையேம் ; எம்குன்றும் பிறர்கொளார்
இற்றைத் திங்கள் இவ்வெண் ணிலவின்
வென்றெறி முரசின் வேந்தர்எம்
குன்றும் கொண்டார்யாம் எந்தையும் இலமே.
(புறநானூறு)
அந்த மாதம் நிலா வந்தது.
எங்கள் தந்தையும் இந்தக் குன்றில் எங்களோடு இருந்தார்.
இன்றும் அந்த நிலா இருக்கிறது.
எங்கள் தந்தையும் இல்லை. எங்கள் குன்றும் இல்லை.
பாட்டு என்னமோ எளிமையாகத் தான் உள்ளது. அது சுமந்து வரும் உணர்ச்சி தான் வலிமையானது.
அந்த உணர்ச்சி உண்மையானது என்பதற்கு சமீபத்திய சாட்சியாக இருப்பது இந்தப் பாட்டு.
இதை எழுதியவர் சிவரமணி என்ற இளம்பெண் கவிஞர். 23 வயது மட்டுமே வாழ்ந்தவர். இலங்கைத் தமிழ்க் கவிஞர்.
அன்றைய பொழுதும்
இன்றைய பொழுதும்
ஒரே சூரியன்
ஒரே சந்திரன்- ஆனால்
அன்றோ ஒரு உறக்கம்
நிகழ்வுகள் புரியாத
நிம்மதிப் பெருமூச்சு ...இன்றோ உறக்கங்கள் தோல்வி கண்ட
விழிப்பின் பரிதவிப்பு...
ஆயிரம் இரண்டாயிரம் ஆண்டுகளில் நாகரிகம், அறிவியல் என எவ்வளவோ மாற்றம் வந்த போதும் அந்த அடிப்படை உணர்ச்சி மட்டும் அப்படியே தான் இருக்குமோ?
Comments
Post a Comment
Your feedback