என்ன தான் பாதுகாப்பான இடங்கள் என்றாலும் அங்கும் கூட, இன்னொரு நாட்டுக்கு உளவு வேலை பார்த்துச் சொல்லும் நிகழ்வுகள் பற்றிக் கேள்விப்பட்டிருப்போம்.
சில நேரங்களில் காவல்துறை, ராணுவம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்களே கூட தீவிரவாதத்துக்குத் துணையாக விலைபோய்விட்ட செய்திகளையும் படித்திருப்போம்.
ஒரு நாடு தனக்கு எதிரி என நினைக்கும் இன்னொரு நாட்டுக்குள் உளவு பார்க்க ஆள்களை அனுப்பி விபரங்களைத் தொடர்ந்து பெறுவதும் உண்டு. வெளி நாடுகளில் போய் உளவு வேலை பார்க்கவேண்டியே தனியாக ஒரு துறை ஒவ்வொரு நாட்டிலும் இயங்கி வருகிறது.
இன்றைய மின்னணுப் பயன்பாடு அது போல உளவு வேலைகள் செய்ய வசதியாகவும் போய்விடுகிறது.
இதெல்லாம் இன்று நேற்று வந்த பிரச்னைகள் என்று நினைத்தால் நாம் நினைப்பது தவறு .
இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சிலப்பதிகாரம் அதற்கும் முன்பு நடந்த செய்திகளைக் கூறுகிறது.
கண்ணகிக்கு கோவில் அமைக்க இமயமலை சென்று கல் எடுத்துவரவேண்டும் என்று தீர்மானிக்கிறார்கள். அது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. இருந்தாலும் தன் முடிவில் உறுதியாக இருக்கிறான் செங்குட்டுவன்.
"நான் இமயம் வரை என்று கண்ணகிக்குச் சிலை செய்யக் கல் எடுத்து வர, பெரும்படையுடன் வரப்போவதை வடக்கே உள்ள மன்னர்களுக்கு ஓலை அனுப்பி அறிவியுங்கள். அந்த அறிவிப்பின் மீது வில், புலி, மீன் ஆகிய மூவேந்தர் முத்திரைகளைப் பொறியுங்கள்" என்று ஆணையிடுகிறான் செங்குட்டுவன்.
உடனே அழும்பில்வேல் எழுந்து "மன்னா! அதற்குத் தேவையே இல்லை. இந்த நாட்டின் எல்லா பகுதியிலிருந்தும் வந்துள்ள அத்தனை உளவாளிகளும் நம் தலைநகர் வஞ்சியில் தான் இப்போது இருக்கின்றனர். வஞ்சி நகரெங்கும் முரசு அறைந்தால் போதும். நாடு முழுதும் செய்தி உடனே போய்ச் சேர்ந்துவிடும்' என்று பதிலுரைக்கிறான்.
நாவலம் தண்பொழில் நண்ணார் ஒற்று நம்
காவல் வஞ்சிக் கடை முகம் பிரியா;
வம்பணி யானை வேந்தர் ஒற்றே
தஞ்செவிப் படுக்கும் தகைமைய அன்றோ?
அறைபறை என்றே அழும்பில்வேள் உரைப்ப.
(சிலப்பதிகாரம்)
இவ்வளவு பெரிய அதிர்ச்சியான செய்தியை போகிற போக்கில் மன்னனிடம் கூற முடிகிறது என்றால் உளவாளிகளை உளவு பார்க்க என்றே சேரன் செங்குட்டுவன் படையில் ஒரு தனிப்பிரிவு இருந்திருக்கும் என்பதைப் புரிந்து கொள்ள அதிக முயற்சி வேண்டுமா என்ன?
Comments
Post a Comment
Your feedback