பசி ஒரு தேவை மட்டுமல்ல. பசி தான் உலகத்தில் உள்ள எல்லா உயிர்களுக்கும் அன்பைச் சொல்லித்தருகிறது. அன்பைப் புரிந்துகொள்ளும் பக்குவத்தைச் சொல்கிறது. கண்கள் செயல்படத் தொடங்கும் முன்பே ஒரு குழந்தைக்கு அம்மாவை அடையாளம் காட்டுவது பசி தான்.
பசி இல்லை என்றால் மனிதர்கள், விலங்குகள், பறவைகள் என எல்லாம் உதிரிப்பூக்களாக இருக்கலாமே தவிர மாலையாகமுடியாது.
பசி என்ற உணர்வு இல்லாவிட்டால் யாருக்கும் யாரும் தேவையில்லை என்று ஆகிவிடும். முயற்சி, நாகரிகம், அறிவியல் என அத்தனையும் வயிற்றிலிருந்து தான் ஆரம்பிக்கிறது.
குடும்பம், சமூகம் என்பதெல்லாம் பசி என்ற ஒன்று இல்லாத போது அர்த்தமற்றவைகளாகப் போய்விடும்.
பசிக்கு முன்பாக பட்டம், பதவி, கௌரவம் எல்லாம் பயனில்லாமல் போய்விடுகின்றன.
வயிறு அனுமதிக்கும்வரை தான் மற்ற அவயங்கள் அதனதன் வேலையைச் செய்கின்றன.
அன்பு என்பது உணவில் தான் தொடங்குகிறது. உண்மையில் உணவுகிடைக்கும் வரை தான் அன்பும். சோறு மறுக்கப்படும்போது, அந்த உறவும் முடிந்துவிடுகிறது.
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்பது எவ்வளவு உண்மை.
'சோறும் நீரும்' தான் எல்லாம். அதை அனுபவிக்க இன்னும் பிறவி வேண்டும் என்று வேண்டுவார் நாவுக்கரசர்.
அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்
பொன்னம் பாலிக்கும்; மேலும், இப் பூமிசை
என் நம்பு ஆலிக்கும் ஆறு கண்டு, இன்பு உற
இன்னம் பாலிக்குமோ, இப் பிறவியே?
(திருநாவுக்கரசர்)
உணவு கொடுப்பவர் மீது அன்பு எல்லா உயிர்களுக்கும் இயல்பு.
உலகத்தில் உள்ள எல்லா உயிர்களுக்கும் உணவு தரும் தில்லைப் பெருமானின் அன்பில் நான் எப்போதும் திளைக்க வேண்டும்.
அந்த இன்பத்தை அனுபவிக்க மேலும் மேலும் நான் இந்த மண்ணில் பிறக்க வேண்டும்.
சொல்லும் பொருளும்:
அன்னம் - உணவு
பாலிக்கும் - கொடுக்கும்
தில்லைச் சிற்றம்பலம் - சிதம்பரத்தில் உள்ள சிற்றம்பலத்தில் உள்ள
பொன்னம் பாலிக்கும் -பொன் அம்பலத்தில் இருந்து அருள் பாலிக்கும்
இப் பூமிசை - இந்தப் பூமியில்
என் நம்பு - என் அன்பு
ஆலிக்கும் - பெருகும்
ஆறு கண்டு - வழி கண்டு
இன்பு உற - இன்பம் அடைய
இன்னம் பாலிக்குமோ - இன்னும் வேண்டும்
இப் பிறவியே - மனிதப் பிறவியே!
Comments
Post a Comment
Your feedback