எப்போதும் போல இல்லாமல் ஏதோ சிந்தனையிலேயே அவன் இருக்கிறான்.
அவனைச் சந்திக்க வந்த தோழன் அவன் நிலையைப் பார்க்கிறான்.
இவன் ஏன் இப்படி இருக்கிறான் ? என்னதான் ஆச்சு இவனுக்கு? என்று யோசித்து எந்த முடிவுக்கும் வரமுடியாமல் அவனிடமே காரணம் கேட்கிறான்.
என்ன நடந்தது என்று அவன் சொல்கிறான்.
அந்தப் பெரிய மலை இருக்கிறதல்லவா அங்கு போயிருந்தேன். அந்த மலையில் பருத்தி விதைக்கப்பட்ட தினைப்புனம் ஒரு இருக்கிறது.
அங்கே, தினையை உண்ணவரும் குருவிகளை ஒருபெண் ஓட்டிக்கொண்டிருந்தாள்.
அவள் இனிமையாகப் பேசினாள்.
மென்மையான தோள்களை உடையவள் அவள்.
அவளுடைய பெரிய, குளிர்ச்சியான கண்கள் பூவைப் போல பார்க்க அழகாக இருந்தன.
அந்தக் கண்கள் அங்கும் இங்கும் சுற்றிச் சுழல்வது கொள்ளை அழகு. நானும் அந்த அழகை ரசித்துக் கொண்டிருந்தேன்.
அதே கண்கள் கணைகள் போல் மாறி என்னைத் தாக்கின. அந்த அழகிய விழியம்புகள் என்னைத் தாக்கியதிலிருந்து நான் இப்படி பித்துப் பிடித்ததுபோல இருக்கிறேன்.
பூவொத் தலமருந் தகைய ஏவொத்து
எல்லாரும் அறிய நோய்செய் தனவே
தேமொழித் திரண்ட மென்தோள் மாமலைப்
பரீஇ வித்திய ஏனற்
குரீஇ ஓப்புவாள் பெருமழைக் கண்ணே.
(மள்ளனார்- குறுந்தொகை)
சொல்லும் பொருளும்:
அலமருதல் - சுழலுதல்
ஏ - அம்பு
தேமொழி - தேன் போன்ற இனிய சொற்கள்
பரீஇ - பருத்தி
வித்திய - விதைத்த
ஏனல் - தினைப்புனம்
குரீஇ - குருவி
ஓப்புதல் - ஓட்டுதல்
மழை - குளிர்ச்சியான
Comments
Post a Comment
Your feedback