பழந்தமிழ் இலக்கியங்களில் அரிதாகக் காணப்படும் செய்திகள் பல.
அதில் ஒன்று எண்பேரெச்சம்.
அது என்ன எண்பேரெச்சம்?
அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது என்று சொல்லுவார்கள். அப்படி அரிதான மானிடப் பிறப்பிலும் குறை தோன்றி விடுவதுண்டு. அத்தகைய குறைகளை எண்பேரெச்சம் என்று பழந்தமிழர் வகைப்படுத்தினர்.
அதை ' சிறப்பில் சிதடும் உறுப்பில் பிண்டமும் கூனும் குறளும் ஊமும் செவிடும் மாவும் மருளும் யாவும் எருளும் ' என்று எண் வகைக் குறைப் பிறப்புகளை எண்பேரெச்சம் என்று புறநானூறு கூறும்.
சிறப்பில் சிதடும் உறுப்பில் பிண்டமும்
கூனும் குறளும் ஊமும் செவிடும்
மாவும் மருளும் உளப்பட வாழ்நர்க்கு
எண்பேர் எச்சம் என்றிவை எல்லாம்
பேதைமை அல்லது ஊதியம் இல்லென
முன்னும் அறிந்தோர் கூறினர்
(புறநானூறு)
இந்த எட்டில் எளிதாகக் காணப்படுவன செவிடும், ஊமையும், கூனும், குறளும் ஆகிய நான்கும்.
சிறப்பில் சிதடு என்பது அறிவு குறைந்து மூளை சிறியதாய்ப் பிறக்கும் பிறப்பு. சிதட்டுக்காய் போல் தலையில் உள்ளீடு இல்லாத பிறப்பு.
உறுப்பில் பிண்டம் என்பது கண், மூக்கு, முதலிய உறுப்புகள் இல்லாமல் பிறக்கும் மணைக்கட்டைப் பிறவி. இதை 'ஊன்தடி' என்று சொல்வதும் உண்டு.
' குழவியிறப்பினும் ஊன்றடி பிறப்பினும் ' என்ற பாடல் அடி இதைத் தான் சொல்கிறது.
இவற்றை விட அரிதான பிறவிகள் மாவும் மருளும். அது என்ன என்று கூறும் பி.எல்.சாமியின் விளக்கம் வியக்க வைக்கும்.
மானிடப்பிறப்பில் எத்தனை குறையுண்டோ அத்தனையும் பழந்தமிழர் அறிந்திருந்தவை தான் என்பது இப்போது தான் நமக்குப் புரிகிறது.
அந்த அரிதான பிறவிகள் பற்றி ஒரு தனிச் செய்தியில் பார்ப்போம்.
Comments
Post a Comment
Your feedback