அவள் ஒரு நாட்டியமாடும் ஆட்டக்காரப் பெண். ஆட்டமாட அங்கே இங்கே என போகும் இடங்களிலெல்லாம் அவனைப் பார்க்கிறாள். அவனுக்கும் ஆட்டம் ஆடுவது தான் தொழில். அவன் மேல் பிரியம் அவளுக்கு . இப்படியிருக்க அவனைச் சிலகாலமாகக் காணவில்லை. அவனைக் காணாத வருத்தத்தால், அவள் உடல் மெலிகிறது.
அவள் கையில் உள்ள வளையல்கள் நெகிழ்ந்தன.
அவளைப் பார்க்க வந்த அவள் தோழி, இப்படி மெலிந்து போகக் காரணம் என்னவென்று தெரியாமல் திகைக்கிறாள்.
அவளது திகைப்பை அறிகிறாள் அவள். தான் உண்டு தன் ஆட்டம் உண்டு என்று இல்லாமல் இப்படிக் காதல் வயப்பட்டு மெலிந்து போனதை தோழியிடம் சொல்கிறாள்.
நான் மதிப்பு வைத்துள்ள அவன் வீரர்கள் கூடியுள்ள விழா நடைபெறும் இடங்களில் இருப்பானா என்று தேடினேன்.
அங்கு அவனைக் காணவில்லை.
ஆண்கள் பெண்களோடு சேர்ந்து ஆடுகின்ற துணங்கைக் கூத்து நடைபெறும் இடங்களில் எல்லாம் தேடினேன்.
அங்கும் அவனைக் காணவில்லை.
நான் ஒரு ஆட்டக்காரப் பெண். பிரகாசமான சங்கால் செய்யப்பட்ட, என் வளையல்கள் நான் மெலிந்து போனதால் என் கையில் தங்காமல் நழுவுகின்றன. என் வளையல்களை நழுவ வைத்தானே அவனும் ஒரு ஆட்டக்காரன் தான்.
மள்ளர் குழீஇய விழவி னானும்
மகளிர் தழீஇய துணங்கை யானும்
யாண்டுங் காணேன் மாண்தக் கோனை
யானுமோர் ஆடுகள மகளே என்கைக்
கோடீ ரிலங்குவளை நெகிழ்த்த
பீடுகெழு குரிசிலுமோர் ஆடுகள மகனே.
(ஆதிமந்தியார் - குறுந்தொகை)
சொல்லும் பொருளும்:
மள்ளர் -வீரர்
குழீஇய - குழுமியுள்ள
விழவு -விழா
தழீஇய - தழுவிய
துணங்கை- ஒருவகை ஆட்டம்
யாண்டும் -எங்கும்
மாண் - மாண்பு
தக்கோன்- தகுதி உடையவன்
யான் - நான்
ஆடுகள மகள் - ஆட்டக்காரப் பெண்
கோடு - சங்கு
ஈர்த்தல் -அறுத்தல்
இலங்குதல் - விளங்குதல்
நெகிழ்தல் - நழுவுதல்
பீடு - பெருமை
குரிசில் -தலைவன்
ஆடுகள மகன் -ஆட்டக்காரன்
Comments
Post a Comment
Your feedback