என் மனம் தான் அவனையே நினைத்துக் கொண்டிருக்கிறது.
அவனும் இந்த ஊரில் தான் வாழ்கிறான். ஆனால் நாம் வாழ்கின்ற இந்தச் சேரிக்கு வரமாட்டான்.
சேரிக்கு வந்தாலும் என் தோள் சேரவேண்டும் என்றா வருவான்?
உண்மையில் அவன் மனதிலோ கண்ணிலோ கவனத்திலோ என்னை எண்ணுவது கூட இல்லை.
வேற்று ஜாதிக்காரர்களின் சுடுகாட்டை யாராவது சுவாரஸ்யமாகப் பார்ப்பார்களா என்ன? உடனே கடந்து போய்விடுவார்கள் அல்லவா!
என்னையும் அவன் அப்படித் தான் பார்க்கிறான் போல!
ஆனால் என் மனம் மட்டும் ஏன் இப்படி இருக்கிறது?
வில்லிலிருந்து புறப்பட்ட நாண் எப்படி அங்கே இங்கே போகாமல் இலக்கை நோக்கி விரைந்து போகுமோ அப்படி என் மனம் அவன் இருக்கும் இடத்தை நோக்கிப் போய் விடுகிறது.
இந்த மனதுக்கு மட்டும் அறிவோ வெட்கமோ கொஞ்சம் கூட இருப்பதில்லை.
ஓரூர் வாழினுஞ் சேரி வாரார்
சேரி வரினு மார முயங்கார்
ஏதி லாளர் சுடலை போலக்
காணாக் கழிப மன்னே நாணட்டு
நல்லறி விழந்த காமம்
வில்லுமிழ் கணையிற் சென்றுசேட் படவே.
( குறுந்தொகை)
Comments
Post a Comment
Your feedback