நான் என்றென்றைக்கும் அப்பாவியாக இருந்தது இல்லை. அப்பாவியாகாமல் முக்தி இல்லை. அப்பாவியாவது இந்த உலகத்தில் வாழுகிறவரைக்கும் எனக்குச் சாத்தியம் இல்லை.
ராமகிருஷ்ண பரமஹம்சர் ஒருமுறை காளி சிலையின் எதிரில் நைவேத்தியத்தை வைத்து, "தாயே இதை நீ உண்டே ஆக வேண்டும்" என்று காளி எழுந்தருளி அதை உண்பாள் என்ற நம்பிக்கை கொண்டவராக விக்கி விக்கி அழுது கொண்டிருந்த பொழுது கறுப்புப் பூனை ஒன்று வந்து நைவேத்தியத்தைத் தின்றதாம்.
அந்தக் கறுப்புப் பூனையே காளி என்று பரமஹம்சர் நினைத்துக் கொண்டாராம்.
நானாக இருந்தால் அதை ஒரு பூனையாக மட்டுமே கருதி இருப்பேன். அதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. ஏனென்றால் நிஜமாக அது ஒரு கறுப்புப் பூனையே.
ஓர் எலியைப் பார்த்திருந்தால் அதைப்பிடித்துத் தின்றிருக்கக்கூடிய பூனை.
நாராயணனையும் என்னையும் போல விவரம் தெரிந்தவர்களுக்கு வெகுளித்தனம், தரிசனம், ஆச்சரியம், மாற்றம், திருப்தி எதுவுமில்லை.
உலக வாழ்க்கைக்கு மீறியதை இவ்வுலகில் வாழ்ந்து கொண்டே புரிந்து கொள்ள வேண்டும் என்று ஆசை கொள்வதும் சாத்தியம் இல்லை.
அதாவது எனக்குச் சொர்க்கமும் இல்லை, நரகமும் இல்லை. இருப்பதெல்லாம் தொல்லை மட்டுமே.
கன்னட எழுத்தாளர் U.R.அனந்த மூர்த்தியின் பவா (தமிழில் பிறப்பு) நாவலில் வரும் வரிகள்.
Comments
Post a Comment
Your feedback