வெகு காலத்துக்கு முன்பு நமது சமூகம் தாய்வழிச் சமூகமாக இருந்தது. குழந்தைகள் பெயரை முன்வைத்து குழந்தையின் தந்தையை குறிப்பிடுவதை சேய்வழிஅழைத்தல் என்ற மரபாகப் போற்றினர். தாய் குடும்பத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்தபோது திருமணத்திற்குப் பின் கணவன், மனைவியின் வீட்டில் சென்று வாழ்ந்து வந்தான். தொழில் காரணமாக அவ்வாறு மனைவியின் வீட்டில் வாழ முடியாத போது அடிக்கடி சென்று வருபவனாக இருந்தான்.
தாய்வழிச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் உற்றார் என்றும் பெண்ணின் கணவன் வழியைச் சேர்ந்தோர் உறவினர் என்றும் கருதப்பட்டனர். ஒரு குடும்பத்தின் மருமகனைக் குறிப்பிட்டுக் கூற முற்பட்டபோது குழந்தையின் தந்தை என்றே குறிப்பிட்டனர். சேய்வழி அழைத்தல் சங்க இலக்கியங்களில் பல இடங்களில் கூறப்பட்டுள்ளது.
முன்கை இழையணி பணைத்தோள் ஐயை தந்தை (அகநானூறு பாடல் 6), அகுதை தந்தை(குறுந்தொகை பாடல் 298) என மருமகனை 'மகள் குழந்தையின் தந்தை' என்றே குறிப்பிடுகின்றன. இன்றும்கூடமாமியார் தன் மருமகனைக் குறிப்பிட்டுச் சொல்லும் போது "இவியப்பா வருவாங்க" , "இவியப்பா என்ன சொல்றாங்கன்னு தெரியலை" என்று கூறுவதைப் பார்க்கிறோம்.
இவியப்பா என்பது இரண்டாயிரமாண்டு பாரம்பரியத்தின் மிச்சமாக இன்றும் விளங்குகிறது.
உற்றார் உறவினர் என்று கூறுகிறோம் உற்றார் என்பது ரத்த சம்பந்தமுடைய சொந்தம். உறவினர் என்பது ரத்த சொந்தங்களை மணம் புரிந்தோர். முன்பு உற்றார் பெண்வீட்டாராகவும் உறவினர் மாப்பிள்ளை வீட்டாராகவும் இருந்தனர். பின்பு உற்றார் என்பது மாப்பிள்ளையின் 'பெத்துப் பிறப்பையும்' உறவினர் என்பது மாமியார் வழி சொந்தத்தையும் குறித்தன.
இன்று உற்றார் உறவினர் என்பது ஒரே பொருளைத் தரும் இரண்டு வார்த்தைகள் என்றே நாம் மேலோட்டமாக புரிந்து கொண்டதால் இரண்டு வீட்டாருமே உற்றார் ஆக மாறிவிட்டனர்.
Comments
Post a Comment
Your feedback