ரங்கன் வெங்கலப் பாத்திரக்கடை வைத்திருக்கிறார்.
இது சரியான வாக்கியமா?
இது பிழையான வாக்கியம்.
எங்கே உள்ளது பிழை?
பிழை 1:
முதலில் ' ரங்கன் ' என்ற பெயர்.
அதை அரங்கன் என்றே எழுத வேண்டும்.
'ரங்கசாமி ' என்பதை எப்படி 'அரங்கசாமி' என தமிழ் வழக்குப் படி எழுதுகிறோமோ அது போலத் தான் இதுவும். ஏனெனில் ர மொழிக்கு முதலில் வராது.
பிழை 2:
வெங்கலப் பாத்திரக்கடை என்பது பேச்சு வழக்கு. அதை எழுதும்போது சிதைவின்றி எழுதவேண்டும்.
'வெண்கலப் பாத்திரக்கடை' என்பது சரியானது.
பிழை 3:
இது தான் கொஞ்சம் நுட்பமானது.
'வைத்திருக்கிறார்' என்பது தவறு.
அரங்கன் என்பது ஒருவனைத் தானே குறிக்கும்.
இலக்கணப்படி அவர், இவர் என்பதெல்லாம் பன்மையைத் தான் குறிக்கும்.
ஆனால் அவன், இவன் என்று சொல்லும்போது மரியாதையில்லாமல் சொல்வதுபோல இருக்கிறதே. என்ன செய்ய?
தனி ஒருவனை ஒரு மரியாதைக்காக அவர்,இவர் என்று சொல்லவிரும்பினால் இலக்கணப் படி அது தவறு என்றாலும் அது சரி என்றே கொள்ளப்படும். ஆனால் அதற்கும் ஒரு முறை இருக்கிறது.
ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவியும்
ஒன்றனைக் கூறும் பன்மைக் கிளவியும்
வழக்கி னாகிய உயர்சொற் கிளவி
இலக்கண மருங்கின் சொல்லா றல்ல.
(தொல்காப்பியம்)
அதாவது,
ஒருவனையும் ஒருத்தியையும் சொல்லும் போது உயர்த்திச் சொல்ல வேண்டும் என்பதற்காக பன்மைச் சொல்லாகச் சொல்லலாம்.
ஒன்றனைச் சொல்லும் போதும் கூட அப்படிச் சொல்லலாம்.
அது இலக்கண முறைமை அல்ல என்றாலும் கூட தவறு என்று சொல்ல முடியாது.
கம்பன் காப்பியம் படைத்தான். - இது சரி.
கம்பன் ஒருவன் தான். படைத்தான் அதற்கேற்ற சொல் தான்.
கம்பர் காப்பியம் படைத்தார். - இது இலக்கண முறைமை அல்ல என்றாலும் கூட தவறு என்று சொல்ல முடியாது.ஏனென்றால் உயர்வு கருதி அப்படிச் சொல்லலாம்.
கம்பன் காப்பியம் படைத்தார். இது தவறான வாக்கியம். இப்படிச் சொல்லக்கூடாது.
வரதராசன் துணைவேந்தனானான்.
இப்படிச் சொல்வது மரியாதை இல்லை என்று தோன்றுகிறதா?
வரதராசனார் துணைவேந்தரானார்
என்று சொல்லலாம்.
ஆனால்,
வரதராசன் துணைவேந்தரானார் என்று சொன்னால் அது தவறு.
இப்போது மறுபடியும் அந்த வெங்கலப் பாத்திரக்கடைக்கு வருவோம்.
அரங்கன் வெண்கலப் பாத்திரக்கடை வைத்திருக்கிறான். இது சரி.
அரங்கனார் வெண்கலப் பாத்திரக்கடை வைத்திருக்கிறார். இது உயர்வுக்காக. எனவே சரி தான்.
அரங்கன் வெண்கலப் பாத்திரக்கடை வைத்திருக்கிறார்.இது நிச்சயம் தவறு. இப்படிச் சொல்லக்கூடாது.
Comments
Post a Comment
Your feedback