கைதவறிக் கீழே விழுந்த மொபைல் போன் வேலை செய்யவில்லை என்றால் "போன் மண்ணைக் கவ்விடுச்சு" என்று கூறுவது வழக்கம்.
அந்தக் காலத்தில் போரில் சண்டை போடும்போது நேருக்கு நேர் வாளெடுத்து போரிட்டனர். வாளால் வெட்டுப்பட்டவர் மண்ணில் விழுந்து வீர மரணம் அடைவர்.
இராமனுக்கும் இராவணனுக்கும் நடந்த சண்டையில் ராவணன் மண்ணில் விழுந்து மரணமடைகிறான். அதைப் பார்த்த விபீடணன் "இராவணன் பூமியைக் கட்டிப்பிடித்துக் கொண்டு படுத்திருப்பது போல இருக்கிறது" எனப் புலம்புகிறான்.
போரில் மரணம் அடைபவர்களின் தலை பெரும்பாலும் மண்ணோடு ஒட்டியிருப்பது போல இருக்கும். அது மண்ணைக் கவ்விக் கொண்டிருப்பது போலத் தோன்றும்.
இந்தக் காட்சி தமிழ் இலக்கியங்களில் மட்டும் அல்ல மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முன் வந்த கிரேக்க இலக்கியத்திலும் இருக்கிறது.
ஹோமர் எழுதிய ஒரு கிரேக்க இதிகாசம் இலியட் (Iliad). அது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அதிலும் போரில் மரணம் அடைபவர்கள் மண்ணைக் கவ்வும் காட்சி காட்டப்படுகிறது.
(.... his fellow warriors, many a one, fall round him to the earth and bite the dust)
ஆங்கிலத்திலும் இதே பொருளில் bite the dust குறிப்பிடப்படுகிறது. அதாவது மரணம் அடைவதை அல்லது இயங்காமல் போவதை bite the dust என்று கூறுகிறார்கள்.
இப்போதெல்லாம் தோல்வி என்ற பொருளில் கூட இந்த மண்ணைக் கவ்வுதல் குறிப்பிடப்படுகிறது.
தேர்தல் முடிவுகள் வெளிவரும் நாளன்று ஒரு குறிப்பிட்ட கட்சி ஜெயித்து விட்டதா என்று கேட்கும்போது மண்ணைக் கவ்வி விட்டது என்று சொல்வதும் இந்த வழக்கத்தில் வந்தது தான்.
Comments
Post a Comment
Your feedback