அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு போட்ட பணத்தை எல்லாம் சுருட்டிக் கொண்டு ஓடும் பைனான்ஸ் கம்பெனிகளிடம் ஏமாந்தவர்கள் சொல்வது "கம்பி நீட்டிட்டான்".
பாத்திரச் சீட்டு, பலகாரச் சீட்டு முதல் தீபாவளிச் சீட்டு வரை சில மாதங்கள் நாணயமாக இருந்துவிட்டு ஒரே இரவில் ஊரை விட்டு ஓடி விடுகின்ற சீட்டு கம்பெனிகளைப் பார்த்திருப்போம்.
கவர்ச்சியான தொடர்ச்சியான விளம்பரங்கள் மூலம் அதிகப்படியான ஆசை தூண்டி விடப்படுகிறது. அதற்கு அப்பாவிகள் பலர் பலியாகிறார்கள்.
கூடக் கொஞ்சம் பணம் கிடைக்கும் என்று ஆசை வந்தவுடன் "இது எப்படி சாத்தியம்" என்ற கேள்வி வராமல் போய்விடுகிறது.
கண்ணுக்குள்ளே புகுந்து
கதைகள் சொன்ன பின்னே
எண்ணத்திலே நிறைந்து
அதில் இடம் பிடித்த பின்னே ...
என்னை விட்டு
ஓடிப்போக முடியுமா? இனி முடியுமா?
என்று ஒரு பாடலின் வரிகள் வரும்.
ஆனால்,
கவர்ச்சியான விளம்பரத்தால் நம் கண்ணுக்குள்ளே புகுந்து சொன்ன கதைகள் வழி எண்ணத்திலே நிறைந்து அதில் இடம் பிடித்த பின்னே நம்பி நாம் போட்ட பணத்தை எடுத்துக் கொண்டு நம்மை விட்டு ஓடிப்போகவே சில சீட்டுக் கம்பெனிகளும் நகைக்கடைகளும் இருக்கின்றன என்பது அவ்வப்போது ஏமாந்து விட்டு டிவி-இல் பேட்டி கொடுக்கின்ற அப்பாவிகளைப் பார்த்தால் புரிந்து கொள்ள முடியும்.
அவர்கள் எல்லாம் பாவம் ஆசையைத் துரத்திக் கொண்டு போனவர்கள்.
நம் உண்மையான உழைப்பில் வராத எதையும் அற்பமான பொருளாக நினைக்கத் தெரிந்து விட்டால் போலி விளம்பரங்கள் நம் புத்தியை மழுங்கடிக்க முடியாது.
இப்படிப் போலிக் கம்பெனிகள் இரவோடு இரவாக கடையைப் பூட்டிவிட்டு ஓடிப்போவது உலகம் முழுவதும் இருக்கும் போலிருக்கிறது.
ஆங்கிலத்தில் இதை Fly by night operators என்று சொல்வார்கள். அதற்கு, நம்பிக்கைத் துரோகம் செய்தவர்கள் என்று பொருள். அதாவது,
unreliable or untrustworthy, especially in business or financial matters.
"மக்களே போல்வர் கயவர்" என்பார் வள்ளுவர். அவரும் இப்படி எங்காவது ஏமாந்திருப்பாரோ ?
Comments
Post a Comment
Your feedback