இயல்பாக நடக்கும் ஒரு நிகழ்வின்மீது கவிஞர் தனது குறிப்பை ஏற்றிச் சொல்வது தற்குறிப்பேற்ற அணி எனப்படும்.
அசையும் பொருட்கள் அசையாப் பொருட்கள் இவற்றின் இயல்பான செயலின் மீது புலவர் தன் குறிப்பை ஏற்றிப் பாடுவது தற்குறிப்பேற்ற அணி என்கிறது தண்டியலங்காரம்.
"பெயர்பொருள் அல்பொருள் என இருபொருளினும்
இயல்பின் விளைதிறன்
அன்றி அயல் ஒன்று
தான் குறித்து
ஏற்றுதல் தற்குறிப் பேற்றம்"
-தண்டியலங்காரம்.
மூடித்திறந்த
இமையிரண்டும்
பார் பார் என்றன
முந்தானை காற்றில்
ஆடி
வா வா என்றது...
ஆடிக்கிடந்த கால்
இரண்டும்
நில் நில் என்றன
ஆசை மட்டும்
வாய்திறந்து
சொல் சொல்
என்றது.
(கண்ணதாசன்)
இமைகள் மூடித்திறப்பதும் முந்தானை காற்றிலாடுவதும்
இயல்பான நிகழ்ச்சிகள். அதில் அவன் தன் குறிப்பை ஏற்றி அவை தன்னை அழைப்பதாகக்
கருதிக்கொள்வதால் இது தற்குறிப்பேற்ற அணி.
அசைந்ததென்னவோ
ஒரே கொடி தான். அது வரவேண்டாம் என்பதாக இளங்கோவடிகளுக்கும் வாவென்பதாக
கம்பனுக்கும் தோன்றியது.
கோவலனை
வரவேண்டாம் என்ற இளங்கோவின் கொடி:
கோவலனும் கண்ணகியும் மதுரை மாநகருக்குச் சென்று வணிகம் செய்து
பொருளீட்ட வேண்டும் என்ற நோக்கத்தோடு செல்கின்றனர். அப்போது
அங்குள்ள வாயிலில் கட்டப்பட்ட கொடி இயல்பாக காற்றில் ஆடுகிறது.
இந்த நகருக்குள் நுழைந்தால் நீங்கள் துன்பப்படப் போகிறீர்கள்.கோவலன் கொல்லப்படப் போகிறான். வராதீர்கள்...வராதீர்கள்.... என்று சொல்வதுபோல அந்தக்
கொடிகள் அசைவதாக இளங்கோவடிகள் தன் குறிப்பை அந்தக் கொடியின் மீது
ஏற்றிக் கூறுகிறார்.
கருநெடுங்
குவளையும் ஆம்பலும் கமலமும்
தையலும் கணவனும்
தனித்துறு துயரம்
ஐய மின்றி அறிந்தன
போலப்
பண்ணீர் வண்டு
பரிந்தினைந் தேங்கிக்
கண்ணீர் கொண்டு
காலுற நடுங்கப்
போருழந் தெடுத்த
ஆரெயில் நெடுங்கொடி
வாரெலென் பனபோல்
மறித்துக்கை காட்ட
(சிலப்பதிகாரம்)
பொருள் :
கண்ணகியும்
கோவலனும் பிரிந்து நெடுந் துன்பம் அடையப் போகின்றனர் என்பதை கரிய நெடிய குவளை, அல்லி மற்றும் தாமரை மலர்கள்
ஐயமின்றி அறிந்து வைத்திருந்ததால்...ரீங்காரமிடும்
வண்டுகளின் ஒலியோடு தாமும் ஏக்கம் கொண்டு ,
கால் கடுக்க நின்று, நடுநடுங்கி ,கண்ணீர் விட்டு அழுதன.
அது மட்டுமல்லாது
போரில் தேய்ந்தெடுத்த மதிலின் மீது கட்டப்பட்டு பறந்து கொண்டிருக்கும் நெடிய கொடிகள் "நீவீர் மதுரைக்கு வர வேண்டாம். திரும்பிச்
சென்று விடுக” என்பது போன்று மறுத்துக் கையசைத்துக்
கொண்டிருந்தன.
ராமனை வாவென்றழைத்த கம்பனின் கொடி:
யான் செய்மா தவத்தின் வந்து
செய்யவள் இருந்தாள்
என்று
செழு மணிக் கொடிகள் என்னும்
கைகளை நீட்டி
அந்தக்
கடிநகர் கமலச் செங்கண்
ஐயனை ஒல்லை வா
என்று
அழைப்பது போன்றது அம்மா !
( கம்பராமாயணம்)
தான் செய்த பெருந்தவத்தின் காரணமாகவே குற்றமற்ற அழகிய தாமரை மலரில் இருக்கும் திருமகள் அதிலிருந்து நீங்கி
மிதிலை மாநகரில் சீதையாகப் பிறந்துள்ளாள்.
அழகிய தாமரை போன்ற
கண்களை உடைய ராமனே! நீ விரைந்து வந்து
சீதையை மணம் முடித்துச் செல்க! என்பது போன்று அழகிய கொடிகள் தனது கைகளை
அசைத்து வரவேற்று நிற்கின்றன.
Comments
Post a Comment
Your feedback