கலப்பை நூல் என்று தனியாக ஒரு நூல் இருந்ததை சிறுபஞ்சமூலம் கூறுகிறது.
நன்புலத்து வையடக்கி
நாளும்மா டோ போற்றிப்
புன்கலத்தைச் செய்து எருப் போற்றியபின் -
இன்புலத்தின்
பண்கலப்பை என்றிலை பாற்படுப் பான்உழவோன்
நுண்கலப்பை நூலோது வார்.
(சிறுபஞ்சமூலம்)
வைக்கோல்போர் போட்டு வைத்துக் கொண்டு அதன் மூலம் உழும் எருதுகளைப்
பாதுகாத்துப் பராமரித்து வரவேண்டும். புன்செய் நிலத்தை எருவிட்டு நன்செய் நிலமாக்க
வேண்டும். அந்த நிலத்தினை பண்படுத்த கலப்பை கொண்டு உழவர்கள் உழுவார்கள் என கலப்பை
நூல் கூறுகிறது.
தொழுவம், குதிர், சாட்டுருளை(சாட்டுக் கூடை),
கலப்பை, கொட்டம்(கொட்டில்)ஆகியவை சங்ககாலத்திலிருந்தே
புழக்கத்திலுள்ள சொற்கள்.
தெழுகா டோங்கிய தொழுவுடை
வரைப்பிற்
பிடிக்கணத் தன்ன குதிருடை
முன்றிற்
களிற்றுத்தாள் புரையுந்
திரிமரப் பந்தர்க்
குறுஞ்சாட் டுருளையொடு கலப்பை
சார்த்தி
நெடுஞ்சுவர் பறைந்த புகைசூழ்
கொட்டிற்
பருவ வானத்துப் பாமழை கடுப்பக்
கருவை வேய்ந்த கவின்குடிச்
சீறூர்
(பெரும்பாணாற்றுப்படை)
இந்தச் சிற்றூர் முள்மரக் காடுகளை
ஆடையாக உடுத்திக் கொண்டிருக்கும்.
வரைப்பு எனப்படும் ஊரின் எல்லைப் பகுதிகளில்
மாட்டுத் தொழுவங்கள் இருக்கும்.
அடுத்து தானியங்களைச் சேமித்து வைக்கும் குதிர்கள் பெண் யானைக் கூட்டம் போல் காணப்படும்.
முற்றத்தின் உட்பகுதியில் குதிர்முற்றம்.
அதற்கு யானையின் கால்களைப் போலப் பந்தர்க்கால்கள்.
இவை முடிச்சுமரக் கால்கள். (திரிமரம்)
பந்தலில் சாட்டுருளைகள் மாட்டப்பட்டிருக்கும்.
அங்குக் கலப்பையும் சார்த்தப்பட்டிருக்கும்.
அங்கே கொட்டில் (சமையல்கூடம்) பகுதியில் சமைக்கும் புகை வரும்.
அதனால் அதன் சுவர் பறைந்து போயிருக்கும். (அழுக்குப் படிந்து காணப்படும்)
வீடுகள் வானில் பரவிக் கிடக்கும் மழை மேகங்கள் போல் காணப்படும்.
வீடுகள் கருவை என்னும் மருக்கட்டான் புல்லால் வேயப்பட்டிருக்கும்.
அது அழகிய குடில்கள் கொண்ட சிற்றூர்.
கலப்பையயின் அடிப்பகுதி கொழு அல்லது கெழு எனக் கூறப்படும்.
கொழு கூர்மையான இரும்புத்தகடு அல்லது இரும்புத்தண்டினாலானது.
உடும்பு முக முழக்கொழு (பெரும்பாணாற்றுப்படை)
கொல்லை உழுகெழு ஏய்ப்ப பலலே (பொருணராற்றுப்படை)
Comments
Post a Comment
Your feedback