உண்மையில் நாம் எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை.
நம் உடல் 24 மணி நேரமும் ஒரே மாதிரியாக இயங்குவதில்லை.
கடிகாரமும் காலண்டரும் வருவதற்கு முன்பு மனித உடலை வைத்துத்தான் சமாளித்துக் கொண்டிருந்தோம்.
சூரியன் உதிப்பதையும் மறைவதையும் கூட நம் உடம்பு தன் மொழியில் 'இப்போது எப்படி இருக்க வேண்டும்' என்று புரிந்து கொள்கிறது.
மூன்று வேளை பசிக்கிறது; இரவானால் தூக்கம் வருகிறது. இதெல்லாம் வெளிப்படையாகத் தெரிபவை.
நம் தசைகள் அவ்வப்போது இறுகி சுருங்குவதும் பின்பு தானாக தளர்த்திக் கொள்வதும் என மாறிக் கொண்டிருக்கின்றன.
ஒரே வேலையைச் செய்யும் போது தனக்கு சலிப்பு வராமல் (bore அடிக்காமல்) பார்த்துக் கொள்ளும் நம் உடலின் இந்த விந்தையை சர்கேடியன் ரிதம் (Circadian Rhythm) என்று சொல்லுகிறார்கள்.
நம் உடலுக்குக் கிடைக்கின்ற வெளிச்சம், வெப்பம் இவற்றைப் பொறுத்து இந்த சுழற்சி நடைபெறுகிறதாம்.
சித்திரை மாத மத்தியான உச்சி வெயிலில் யாருக்கும் காதல் உணர்வு பொங்கி வருவதில்லை. என்ன காரணம்? வெயில் இல்லாத மலைப்பிரதேசமாகப் பார்த்து தேனிலவு போவதற்கு என்ன காரணமோ அதே காரணம் தான்.
அது தான் இந்த Circadian Rhythm.
கோபத்தில் தன்னிலை மறந்து தாம்தூம் எனக் கத்துபவரை ஒரு டம்ளர் தண்ணீரைக் கொடுத்து ஆசுவாசப்படுத்திவிட முடிகிறது. மூளை தடுமாறி வார்த்தைகள் வரம்பு மீறிப் போவதை ஒரு டம்ளர் தண்ணீர் எப்படி உடனே சரிப்படுத்துகிறது? இதெல்லாம் நுட்பமான விஷயங்கள்.
இந்த நுட்பம் தான் சங்க இலக்கியப் பாடல்களை ஒரு பிரமிப்போடு படிக்க வைக்கிறது.
அந்தந்தக் காலத்தில் மனித உணர்வுகள் எப்படி இருக்கும் என்பதைச் சொன்னால் அதற்குப் பெயர் உரிப்பொருள்.
குறிஞ்சி என்றால் மலையும் மலை சார்ந்த இடமும் என்று நாம் படித்திருப்போம். மலைப்பகுதி என்பதே குளிர்ச்சி தான். அதிலும் இரவு நேரம் என்பது இன்னும் குளிர்ச்சி தான். அதை ஒத்த அன்புடையவர்கள் சேர்ந்து மகிழ்ந்து திளைக்கின்ற பருவம் என்று குறிஞ்சித்திணையைச் சொல்லும்.
குறிஞ்சித்திணை போலவே முல்லை மருதம், நெய்தல், பாலை என்று ஒவ்வொன்றும் மனித மனங்களோடு சம்பந்தப்பட்டவை.
ஒவ்வொரு திணையிலும் வரும் ஒவ்வொரு பாட்டிலும் இந்த Circadian Rhythm (சர்கேடியன் ரிதம்) தெரிவதைப் பார்க்கலாம்.
சங்க இலக்கியப் பாட்டெல்லாம் எழுதும்போது அறிவியல் அவ்வளவு வளராத காலம் என்பதை மறந்துவிடக்கூடாது.
Comments
Post a Comment
Your feedback